ஏசு பிறந்த நாள்தான் கிறிஸ்துமஸ் என அறிவோம். அதை கொண்டாடும் முறைகளை பார்ப்பதற்கு முன்னால், ஏசு பிறப்பில் உள்ள வரலாற்றை நினைவுகூர்வோம்.
தேவ மகன் ஏசு வரவின் வரலாறு
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூதேயா(இஸ்ரேல்) வடக்கு ஊரான நசரேத்தில் வாழ்ந்த கன்னிப்பெண் மேரி, அங்கு வாழ்ந்த ஜோஸப் என்பவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தார்.
ஒருநாள் மேரியின் முன் கேப்ரியேல் என்ற தேவதை தோன்றி, ’உனக்கு கடவுளின் புனித கருணையால் ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அது கடவுளின் மகன். அதற்கு ஏசு என்று பெயரிடு, மக்களையும் சத்திய தர்மங்களையும் உலகில் காக்கும் அந்த தேவமகனின் ஆட்சி என்றுமே முடிவு இல்லாதது.
மேலும், உனது உறவு சகோதரி எலிசபெத்துக்கும் ஒரு ஆண்குழந்தை பிறக்கும் அது ஜான் என்ற பெயரில் ஏசுவை பின்பற்றி துணையாக நடக்கும்.’ என கூறியது.
ஜோசப் மனதில் கருவுற்ற மேரியை திருமணம் செய்வது பற்றிய தடுமாற்றம் இருந்தது, கேப்ரியேல் தேவதை ஜோசப்பிடமும் தோன்றி உண்மையை விளக்கிய பிறகு, தானும் ஒரு தெய்வ குழந்தைக்கு தந்தையாகும் பாக்கியம் பெற்றிருப்பதை எண்ணி பூரித்தார்.
மேரியும் ஜோசப்பும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்த இடம் ரோம பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது அங்கு மன்னராக இருந்த அகஸ்டஸ் வரிவிதிப்புக்காக மக்களை கணக்கெடுத்து, அயல் நாட்டிலிருந்து வந்தவர்கள் வெளியேற உத்தரவிட்டார். அப்போது அங்கிருந்து வெளியேறிய மக்களில் ஜோசப் -மேரி தம்பதிகளும்தான். 70 கி.மீ தூரத்தில் இருந்த ஜோசப்பின் பூர்வீகமான பெத்லேகத்துக்கு பல சிரமங்களுக்கு பிறகு வந்தனர்.
பெத்லேகமில் வீடுகள், இடங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. ஆடு மாடு, கழுதைகள் போன்ற வீட்டு விலங்குகள் வளர்ப்பது அதிகமிருந்தது. அப்பகுதியில் ஒரு மாட்டு தொழுவத்தில் ஜோசப்- மேரி தம்பதியினர் தங்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது.
நிறைமாத கர்ப்பிணியான மேரிக்கு அங்குதான் தெய்வ குழந்தையான ஏசு பிறந்தார். குழந்தை ஏசுவை நீளமான துணிகளால் போர்வைபோல சுற்றி மாடுகள் தீவனமான வைக்கோல் மீது படுக்க வைத்திருந்தனர்.
பெத்லேகமிற்கு வெளியே மலைகளும் வயல்வெளிகளும் உள்ள பகுதியில் மந்தை மேய்ப்பவர்களிடம், அன்று அதிகாலை ஒரு தேவதை தேவமகிமை ஒளியுடன் தோன்றி, தேவமகன் பிறந்த செய்தியை அவர்களுக்கு கூறுகிறார்.
மேலும், உங்களையும் உலக மக்கள் அனைவரையும் இரட்சிக்க பிறந்துள்ள கடவுளின் பிள்ளை. அதை ஒரு மாட்டுதீவனமான வைக்கோல்பொர் தொட்டிலில் காண்பீர்கள் என்று சொல்லியும், மறைகின்றார்.
அந்த மேய்ப்பர்கள் குழந்தையை கண்டெடுக்க வரும்போது, வானத்தில் பேரொளியுடன் புதிய நட்சத்திரம் தோன்றுகிறது. அந்த நட்சத்திர ஒளி காட்டும் பாதையிலே அவர்கள் செல்கின்றனர்.
நட்சத்திரம் தோன்றியதை நாட்டிற்கு வெளியில் உள்ள சில ஞானிகளும் மக்களும் கூட கவனிக்கின்றனர். ஒரு சிறந்த அரசன் பிறக்கும்போது, புதிய நட்சத்திரம் தோன்றும் என்பதை சில புத்திசாலி முன்னோர்கள் கூற்றிலிருந்து, அதற்கான காரணமாகவே அதை அறிந்தனர்.
இந்த நாட்டுக்கு புதிய மன்னன் பிறந்திருப்பதையும் அதற்காக பரிசு வழங்க ஒரு ஞானி செல்வதையும் அறிந்த யூதேயா(இஸ்ரேல்) மன்னன் ஹெராட்.
அந்த குழந்தையை கண்டுபிடித்தால் எனக்கும் இருக்குமிடத்தை காட்டு, நானும் வழிபட வேண்டும் என்று கபடமாக பேசுகிறான். உண்மையில் தன்னுடைய இடத்திற்கு இன்னொருவன் பிறந்து வருவதையோ, யூதர்களுக்கு தலைவனாவதையோ பொறுக்க முடியாத ஹெரோட், அந்த குழந்தையை அழிக்கவே திட்டமிட்டிருந்தான்.
நகர்ந்த ஒளிநட்சத்திரம் நின்று, குழந்தை இருக்கும் குடிலுக்குள் இறங்கியது. அதைவைத்து மேய்ப்பர்கள், தேவதை கூறிய குழந்தை ஏசுவை காண்கின்றனர். அருகில் ஜோசப்- மேரி இருப்பதையும் பார்த்தனர்.
அந்த ஞானியும் ஏசுவின் குடிலுக்கு சென்று வாழ்த்தி, பரிசு கொடுக்கிறார். ஞானியின் கனவிலும் மன்னன் ஹெராடை சந்திக்க வேண்டாமென கடவுளால் அறிவுறுத்தப்படுகிறது. அதனால், கிழக்கு பக்கமாக தனது நாட்டிற்கு செல்கிறார்.
தேவதை மீண்டும் ஜோசப் முன் தோன்றி, ஏசுவையும் மேரியையும் கொடிய மன்னன் ஹெரோடிடம் இருந்து பாதுகாக்க ஜெருசலேமை விட்டு எகிப்துக்கு செல்லவும் அடுத்து தான் இங்கு வரச் சொல்லும் வரை அங்கு தங்கவும் கூறியது.
ஹெரோட் இறந்த பிறகும் அவன் மகனே ஆட்சியிலிருந்ததால், கலிலியில் குடியேற வந்த ஜோசப் குடும்பம் மீண்டும் முன்பு வாழ்ந்த நசரேத்திலே தங்கியது.
பிறப்பின் போதும் இறப்பின் போதும் கொடிய துன்பமே ஏசுவை சூழ்ந்திருந்தது. ஒரு கடவுளின் குழந்தைக்கு ஏன் இவ்வளவு கடும்பகை சோதனை என்று நம்மை சிந்திக்க வைத்தாலும், உலகில் இன்று மாபெரும் சக்தியாக விளங்குகிற ஒரு மதம், ஏசுவை மையப்படுத்தி இருப்பது அவர் தேவ மைந்தன்தான் என்பதற்கான உறுதி.
எகிப்து, ரஷ்யா, செர்பியா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் மிக உன்னதமாக கொண்டாடப்படுகிறது. அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை டிசம்பர் 25 க்கு பதிலாக, ஜனவரி 7ம் தேதியில் கொண்டாடுகின்றனர். மேலும், அன்று விரதம் இருக்கின்றனர். அசைவ உணவுகள் அறவே எடுத்துக்கொள்வதில்லை.
ஞாயிறுக்கு முதல்நாள் இரவில் ஏசுவை புகழ்ந்து தேவாலயங்களில் பாடுகின்றனர். இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஏசுவை விழித்திருந்து வரவேற்கின்றனர். இறைச்சி, வெண்ணெய், முட்டை சேர்த்த உணவுகள், கேக், இனிப்புகள் விரதம் முடிந்து எடுத்துக்கொள்கின்றனர்.
கனடாவில் கிறிஸ்துமஸ்
கனடா பெரிய நாடு இங்கு பிரஞ்சு, ஐரிஸ், ஸ்காட்டிஸ், இங்லீஷ், ஜெர்மன் மற்றும் கனடியன் என பல பாரம்பரியங்களில் இருந்து வந்த மக்கள் வாழ்வதால் கிறிஸ்துமஸ் பலவிதமாகவே கொண்டாடப்படுகிறது. கனடா வழக்கத்துக்கே முன்னுரிமை.
கனடா மக்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்புகின்றனர். வழக்கமான கேக், நட்சத்திரம், பரிசுகள், கிறிஸ்துமஸ் மரம், தேவாலய வழிபாடு, இசை பாடல்கள் இடம்பெறுகிறது.
வடக்கு கனடாவில் நடக்கும் டஃபி புல் என்ற நிகழ்ச்சி. புனித கேத்தரின் தேவாலயத்தில் ஒரு பெண் பாதிரியார் தலைமையில் நடக்கிறது. இதில் ஒவ்வொரு பெண்ணுக்கும் தகுதியுள்ள ஒரு ஆணை சந்திக்க வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
சுவிஸில் கிறிஸ்துமஸ்
இங்கு ஜெர்மன், ஆஸ்திரியா ஆகிய அண்டை நாடுகளிடமிருந்து வந்த வழக்கமே . ஆனாலும், சுவிஸ் மக்களின் பாரம்பரிய கலக்கலுக்கும் குறைவில்லை.
ஏசு வருகைக்கான நாள்காட்டி, அழகிய கிரீடங்கள், வருகையை காண அலங்கார ஜன்னல் தயரிப்பது இங்கு பிரபலம். பல கிராமங்களில் அன்று மாலையில் மக்கள் ஒன்றாக கூடும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் உணவு வகைகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட மதுவகைகள், இசை விருந்து மகிழ்ச்சிக்குரிய விஷயங்கள்.
கிறிஸ்துமஸ் மரங்களை வாங்கி அலங்கரிக்கின்றனர். கிறிஸ்துமஸ் ஈவின் போது மரங்களில் மெழுகுவர்த்தியை ஏற்றி பரிசுகளை திறக்கின்றனர். அதை நல்ல அதிர்ஷ்டமாக நம்புகின்றனர்.
மதம் ஒன்றானாலும் ஒவ்வொரு நாட்டிலும் கலாசாரம் வேறுபடுவதால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திலும் பல ஒற்றுமையும் சில வேற்றுமைகளும் வெளிப்படுகிறது. ஏசுவை மையப்படுத்தினாலும் இது மனித சமுதாயத்தின் மகிழ்ச்சிக்கான ஒரு பண்டிகை என்பது மறுப்பதற்கில்லை.