கிராம அபிவிருத்தி, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசத்தலைவராக துரைராசா ரவிகரன் அவர்கள் மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சமாசத்தின் புதிய நிர்வாகத்தெரிவானது முல்லைத்தீவு மாவட்டச்செயலக மண்டபத்தில் கடந்த 23.12.2015ம் நாளன்று நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில், கொக்கிளாய் தொடக்கம் மாத்தளன் வரையான கரையோரக்கிராமங்களும் குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் தொடக்கம் கோப்பாபிலவு வரையான 46 கிராம அலுவலர் பிரிவுகளிலுமாக 107 பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் இயங்குகின்றன.
அந்தவகையில் மேற்குறித்த இச்சங்கங்களுக்கான புதிய நிர்வாகத்தெரிவு நிகழ்வில் தலைவர், செயலாளர், உபதலைவர், உபசெயலாளர், பொருளாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு புதிய நிர்வாகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.புதிய நிர்வாகத் தெரிவில் தலைவராக துரைராசா ரவிகரன் அவர்களும் உபதலைவராக குமுழமுனையைச்சேர்ந்த திரு. இராஜேஸ்வரன் அவர்களும் செயலாளராக உடுப்புக்குளத்தைச்சேர்ந்த திரு. பெ. நந்தகுமாரன் அவர்களும் உபசெயலாளராக முள்ளியவளையைச்சேர்ந்த திருமதி.இராஜலட்சுமி அவர்களும் பொருளாளராக கோயில்குடியிருப்பைச்சேர்ந்த திருமதி சுகந்தி அவர்களுடன் பன்னிரண்டு நிர்வாக உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச உதவிச்செயலர், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரின் பிரதிநிதியாக திரு. திலீபன் அவர்கள், பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சுரேஸ் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.