மனமாற்றம் வருமா.........?


இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வுகாண முடியாது என்பதை, முப்பது வருடங்களை தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ள யுத்த மோதல்கள் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. இருந்த போதிலும், இராணுவ அரசியல் மேலாதிக்கத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும் என்ற நப்பாசை பேரின அரசியல்வாதிகளிடமிருந்து இன்னும் மறையவில்லை.
இராணுவத்தைக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை முறியடித்துள்ள ஆட்சியாளர்கள், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தீவிர அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.
மாறாக காலத்தைக் கடத்தி பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகளை அதிகரித்து, அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டுவந்துள்ள மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து இல்லாமற் செய்வதிலேயே குறியாக இருந்து செயற்படுகின்ற ஒரு போக்கிலேயே சென்று கொண்டிருக்கின்றார்கள்.
விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகொண்டதையடுத்து, இன முறுகலை இல்லாமற்செயற்வதற்கு தீர்க்கமானதோர் அரசியல் ரீதியான அணுகுமுறையைக் கையாள்வதற்கு ஆட்சியாளர்கள் இன்னுமே தயாராகவில்லை. அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப்புலிகளை இல்லாமற் செய்ததன் பின்னர், யுத்த மோதல்களினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் அவர்கள் அதிக அக்கறை காட்டாத போக்கையே காண முடிகின்றது.
யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியை நீதிக்கான நிலைமாறு காலம் என வர்ணித்து, நடந்து முடிந்த அநியாயங்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கானமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. நீதியைத் தேடுகின்ற நிலைமாறு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மிகவும் கசப்பான துன்பியல்அனுபவங்கள், மனத்துயரங்களில் இருந்து அவர்கள் மீள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
அத்தகைய நடவடிக்கைகளின் ஆக்கபூர்வமான ஆரம்பத்தைக் கூட யுத்த மோதல்களின் பின்னரான கடந்த ஏழு வருட காலத்தில் காணமுடியவில்லை. உற்றவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் உயிருக்கும் மேலாகக் கருதப்படுகின்ற கௌரவத்தையும் இழந்து உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாகியுள்ள மக்களின் மனக்காயங்களை ஆற்றி அவர்களை ஆற்றுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அத்தகைய நடவடிக்கைகளுக்கு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதி மகிந்த தலைமையிலான அரசாங்கம் இடம்கொடுக்கவில்லை. அவ்வாறான ஆற்றுப்படுத்தல் நடவடிக்கையானது, பயங்கரவாதத்திற்கு உயிரூட்டுவதாகவும், பயங்கரவாதிகளை மீண்டும் உருவாக்கம் செய்வதாகவுமே முடியும் எனக்கூறி தடை செய்திருந்தது.
மகிந்த ராஜபக்சவைத் தேர்தலில் தோற்கடித்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்துள்ள புதிய ஆட்சியாளர்களும் கூட, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின்மனக்காயங்களை ஆற்றுவதற்கான உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகளுக்குஆதரவளித்ததாகத் தெரியவில்லை.நடந்து முடிந்த யுத்தமானது பாதிக்கப்பட்ட மக்களை சாவின் விளிம்பிற்கே இழுத்துச் சென்று, தெய்வாதீனமாக உயிர் தப்பச் செய்துள்ளது.
அவர்கள் அனுபவித்த மரண வேதனைகளும் மனத்துயரங்களும் உரக்க அழுது, உருண்டு புரண்டு, கிரப்பட வேண்டியவை. அந்த யுத்த மன வடுக்களையும் மனச்சுமைகளையும் அவர்கள் பொதி சுமந்தவர்களாக உள்ளங்களில் சுமந்து தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அவலச் சாவுகளின் மூலம்இழந்து போன தமது உறவுகளின் இழப்பை உளவியல் ரீதியாக ஆற்றிக்கொள்வதற்கு அவர்களுக்கு இன்னும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. கரை புரண்ட வெள்ளம் போன்று, கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து கூட்டமாக அவலப்பட்டு, உயிரிழப்புக்களைச் சந்தித்த அவர்கள் கூட்டமாகக் கூடி அவலமாக மடிந்து போன தமது உறவுகளை நினைவுகூரவும், அஞ்சலி செலுத்தி அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கவும் முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
நீதிக்கான நிலைமாறு காலத்தில் முதல் நடவடிக்கையாக இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்ட மக்கள் என்ற ரீதியில் ஒரு சமூகமாக நினைவுகூர்வதற்கும் மன ஆறுதல் அடைவதற்கும் வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு சமூகமாக அவர்கள் இறந்தவர்களை நினைவுகூரும்போது, அயலவர்களான ஏனைய சமூகத்தினருடன் தமது மனச்சுமைகளைப் பகிர்ந்து கொள்வதற்குரிய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய ஒன்று கூடலின் ஊடாகத்தான் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயங்கள்ஆறுவதற்கும், மற்ற இனத்தவர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் மனஉணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
மனமாற்றம் அவசியம்
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டமானது, பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்பட்டு பொரும்பான்மை இன மக்கள் மத்தியில் ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப்புலிகளும் அவர்களுக்குப் பின்னால் இருந்த மக்களும் பயங்கரவாதிகளாக உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கழிந்துவிட்ட போதிலும், பெரும்பான்மை இனமக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பற்றி அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்ட கருத்துருவாக்கத்தில் இருந்து பெரும்பான்னம இனமக்கள் இன்னும் விடுபடவில்லை. நாட்டில் நிரந்தரமான அமைதியும் இனங்களுக்கிடையில் ஐக்கியமும் நல்லிணக்கமும் நிலவ வேண்டுமானால், இரு தரப்பினருக்கும் இடையில் யுத்தம் முடிவடையும் வரையில் இருந்து வந்த மன நிலைகளில் இருந்து மாற்றம் ஏற்பட வேண்டியது மிகவும்அவசியமாகும்.
ஒருவரை ஒருவர் சந்தேகத்துடனும் உயிரச்சத்துடனும் நோக்கிய நிலைமைகளில் இருந்து உளவியல் ரீதியாக இருதரப்பினரிடையேயும் மனமாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதனையோர் அரசியல் ரீதியான நடவடிக்கையாக அரசாங்கங்கள் முன்னெடுத்திருக்க வேண்டும். அந்நியராகிய ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர், படிப்படியாக திட்டமிட்டு, பேரின ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வந்த இனத்துவேச அரசியல் நடவடிக்கைகள் காரணமாக இந்த நாட்டின் இரண்டு முக்கிய சமூகத்தினராகிய சிங்களவர்களும் தமிழர்களும் ஒருவரையொருவர் அரசியல் ரீதியாக மோசமான எதிரிகளாகக்கருதுகின்ற போக்கும் படிப்படியாக வளர்ந்து உச்சகட்ட நிலையை எட்டியிருக்கின்றது.
சிங்களவர்களும் தமிழர்களும் நாளாந்த வாழ்க்கையில் இணைந்து பழகிவருகின்றார்கள். அயல் அயல் வீடுகளிலும், அயல் அயல் கிராமங்களிலும், நகரங்களிலும் வசித்து வருகின்றார்கள். வெளிப்படையான நோக்கில் அவர்கள் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும், ஐக்கியமாகவும் வாழ்வதாகவே தோன்றும். ஆனால்அரசியல் ரீதியாக – இந்த நாட்டின் தேசிய இனங்கள் என்ற அடிப்படையில் அவர்களுடைய ஆழ் மனங்களில் ஊடுருவிப் பார்த்தால், அவர்களில் பெரும்பான்மையானோர் அரசியல்ரீதியாக ஒருவரை ஒருவர் அவர்கள் எந்த அளவுக்கு சந்தேகமும் அச்சமும் கொண்டிருக்கின்றார்கள் என்பது புலனாகும்.
விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே அரசியலுக்கு அப்பால் மனிதாபிமான ரீதியில்இனம், அரசியல் என்ற நிலைமைகள் அந்தஸ்துகளுக்கு அப்பால் அந்நியோன்னிய உறவுகொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள். அரசியல் ரீதியான இந்த அச்சமும், சந்தேகமும்தான் இந்த நாட்டின் ஆட்சியாளர்களின் அரசியல் முதலீடுகளாகத் திகழ்கின்றன.
இந்த முதலீட்டின் அடிப்படையிலேயே குறிப்பாக பெரும்பான்னம இன ஆட்சியாளர்கள் இந்த நாட்டில் அரசாட்சி செய்து வருகின்றார்கள். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புகின்ற இளம் தலைமுறையினரும் இந்த இனத்துவேச அரசியல் போக்கில் இருந்து விடுபடாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
இதன் காரணமாகவே இனப்பிரச்சினையானது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாக தீர்க்கப்படக் கூடாத பிரச்சினையாக புரையோடிப் போயிருக்கின்றது. இத்தகைய ஒரு பின்னணியில்தான், மோசமானதொரு முப்பது வருட யுத்தத்தின் பின்னர், ஏற்பட்டுள்ள மோதல்களின் பின்னரான அமைதிச் சூழலில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நீதிக்கான நிலைமாறு காலச்சூழலிலேயே இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தவும், பிரச்சினைகளுக்குத்தீர்வு காண்பதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த முயற்சிகளுக்கு அடித்தளமாக அச்சமும் சந்தேகமும் குடிகொண்டுள்ள இதயங்களுடன் துருவ மயப்பட்டிருக்கின்ற இரு சமூகத்தினரிடையே மனமாற்றம் ஏற்படவேண்டியது அவசியமாகியிருக்கின்றது.
இந்த மனமாற்றத்திற்கு இரு தரப்பினரும் கலந்துரையாட வேண்டும். கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட வேண்டும். தமது கடந்தகால கசப்பானஅனுபவங்களையும் துன்ப துயரங்களையும் மனிதர்கள் என்ற ரீதியில் ஒருவருக்கொருவர் பகிர்ந்து மனச்சுமைகளைக் களைய வேண்டும். இதற்கு நீதிக்கான நிலைமாறு காலம்உறுதியான அடித்தளத்துடன் கூடிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
பெரும்பான்மை என்ற சிறுபான்மையினர்
இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களே அனைத்து விடயங்களிலும்முதன்மை பெற்றவர்களாகத் திகழ வேண்டும் என்ற நோக்கத்திலேயே பேரின அரசியல் மனப்பாங்கு கொண்ட அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் செயற்பட்டு வருகின்றார்கள். பேரின மதமாகிய பௌத்தமே நாட்டில் முதன்மை பெற்றிருக்க வேண்டும் என்பதும் அவர்களுடைய அரசியல் தீர்மானமாகும்.
இதன் காரணமாகவே இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தமானது என்ற அரசியல் கொள்கையும் அரசியல் கோஷமும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. அரசியல் மற்றும் மத ரீதியான இந்த முதன்மைவாத அரசியல் சிந்தனைப் போக்கின் காரணமாகவே, தேசிய இனமாக இருந்த போதிலும் தமிழ் பேசும் சமூகத்தினராகிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தாங்களே தீர்மானிக்கவேண்டும் என்று பேரின அரசியல்வாதிகள் அரசியல் ரீதியாக அடம்பிடித்துச்செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகப்பிரதேசக் கொள்கையையும், அவர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் என்பதையும் அவர்கள் ஏற்க மறுக்கின்றார்கள். அதேபோன்று இஸ்லாமிய மத அடையாளத்தைக் கொண்ட முஸ்லிம் மக்களின் மத சுதந்திரம் மறுக்கப்படுகின்றது.
பௌத்த மதமே அரசியல் அந்தஸ்து பெற்ற தேசிய மதமாக நாடளாவிய ரீதியில் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே, முஸ்லிம்களுக்கு எதிராக மத ரீதியான அடக்குமுறை நடவடிக்கைகள் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்து ஆலயங்கள் மீதும் அவ்வப்போது பேரின தீவிரவாதிகள் பாய்ந்து கலக்கமூட்டிய சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த நாட்டைப் பொருத்தமட்டில் குடிசன எண்ணிக்கையின் அடிப்படையில் சிங்களமக்களே பெரும்பான்மையான மக்களாகக் கருதப்பட்டாலும், தங்களிலும் பார்க்க பலமடங்குகள் ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையுடைய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்களை சிறுபான்மையினராக்கி விடுவார்களோ என்று அரசியல் ரீதியான அச்சத்தைக்கொண்டிருக்கின்றார்கள்.
அயல் நாடாகிய இந்தியாவின் தமிழ் மாநிலமாகிய தமிழ்நாடு, பூகோள ரீதியாக இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணத்திற்கு மிகவும்அண்மித்திருப்பதனால், இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டினருடன் இணைந்து தங்களை எங்கே சிறுபான்மையினத்தவராக மாற்றி அரசியல் ரீதியாக ஆக்கிரமித்து விடுவார்களோ என்ற அச்சம் அவர்களுடைய ஆழ் மனங்களில் குடி கொண்டிருக்கின்றது. அதே போன்று உலகளாவிய ரீதியில் நாடுகள் பல முஸ்லிம் நாடுகளாக இருப்பதனால், அவற்றுடன் இணைந்து அல்லது அவற்றின் உதவிகளைப் பெற்று இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் தங்களை ஆக்கிரமித்து விடுவார்களோ என்ற அச்சமும் அவர்களிடம் மறைந்து காணப்படுகின்றது.
முடிவில்லாத மேலாதிக்கப் போக்கு
இதன் காரணமாகவே சிங்கள அரசியல் வாதிகளும் சிங்கள ஆட்சியாளர்களும், இந்த நாட்டின் ஒரு தேசிய இனமாக இருந்த போதிலும் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகள்என்ற ரீதியில் என்ன வேண்டும், எதனைக் கொடுக்கலாம் என்பதைத் தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் மக்களைப் பொருத்தமட்டிலும் இதே நிலைப்பாட்டையே அவர்கள் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு அரசியல் ரீதியான மேலாதிக்க சிந்தனை மற்றும் மேலாதிக்க போக்கு காரணமாகத்தான் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்களவர் என்ற மரத்தைச் சுற்றிப்படரும் கொடிகளாக, தமிழ், முஸ்லிம் சமூகத்தினரை சிங்கள ஆட்சியாளர்கள் வர்ணித்திருந்தார்கள்.
ஒரு ஜனநாயக நாட்டில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பெரும்பான்மை நிலைப்பாடு ஓர்அளவு கோலாகப் பயன்படுத்தப்பட்டாலும்கூட, அரசியல் தீர்மானங்கள், அரசியல் நடைமுறைகள் என்று வரும்போது பெரும்பான்மை இனத்தவரே இறுதித் தீர்மானத்தை எடுக்க வல்லவர்கள் என்ற நிலைப்பாடு கணக்கில் எடுக்கப்படுவதில்லை.
சிறுபான்மை இனமக்கள் தங்களுக்கு என்ன தேவை என்பதைத் தீர்மனிக்கும் உரிமை ஜனநாயகத்தில் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஜனநாயகம் கோலோச்சுகின்ற நாடுகளில் சிறுபான்மை இன மக்களின் சுய அரசியல்தீர்மானங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
அத்துடன் அந்த ஜனநாயகப் பண்பு அங்கு உறுதியாகக் கடைப்பிடிக்கப்படுவதையும்முன்னுதாரணமாகக் காண முடியும்.இத்தகைய ஜனநாயகப் பண்பு இலங்கையில் நடைமுறையில் வருவதற்கு பேரினஅரசியல்வாதிகளின் அரசியல் ரீதியான மனப்பாங்கிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். நாங்களே பெரும்பான்மை இனத்தவர். எனவே நாங்கள்சொல்வதையே ஏனைய சமூகத்தினர் கேட்டு நடக்க வேண்டும். தங்களுக்கான உரிமைகள் என எதனையும் அவர்கள் தாங்களாக விரும்பிக் கேட்பது கொடுக்கப்படமாட்டாது. அவ்வாறு அவர்கள் கேட்கவும் கூடாது, என்ற போக்கில் செயற்படுவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது.
தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் மோசமான முப்பது வருட கால யுத்த அவலத்தின்மூலம் மனமாற்றம் அடைந்திருக்கின்றனர். வன்முறை வழிகளில் ஊடாகபிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது கடினம் என்பதைப் பட்டறிந்துள்ளனர். இந்த மாற்றம் பேரின அரசியல்வாதிகளிடம் பேரின மக்களிடமும் ஏற்படவில்லை, ஏற்படுத்தப்படவுமில்லை.
இத்தகைய மாற்றமின்றி - மனமாற்றமின்றி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதென்பது கல்லில் நார் உரிக்கும்காரியமாகத்தான் போய் முடியும். ஐ.நா மன்றத்திலும்சரி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும்சரி தீர்மானங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றலாம்.
அந்தத் தீர்மானங்களின் ஊடாக அரசியல் பொருளாதாரரீதியாக அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம். ஆனால் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். நியாயமான நிலைப்பாட்டின் அடிப்படையில் ஏனைய சமூகத்தினர்மதிக்கப்பட வேண்டும், அவர்களின் அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். என்ற ஜனநாயக ரீதியான தெளிந்த சிந்தனையோடும், விட்டுக்கொடுப்போடும் செயற்படமுன்வந்தால்தான் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
மனமுண்டானால் இடமுண்டு என்று சொல்வார்கள். இலங்கையைப் பொருத்தளவில் பேரினமக்கள் மனங்களிலும் அதேபோன்று, பேரினவாதிகள், பேரின அரசியல்வாதிகள் ஆகியோரின்மனங்களில் அரசியல் ரீதியான மனப்பாங்கில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அந்த மாற்றங்களின் ஊடாகத்தான் இழுபறி நிலையில் உள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளைக் காண முடியும்.
மனமாற்றம் நிகழாத நிலையில், வெளி அழுத்தங்களைப் பிரயோகித்து பிர்சினைகளுக்குத்தீர்வு காண்பதென்பது, தண்ணீர் குடிக்க விரும்பாத குதிரையை வலிந்து தண்ணிர்த்தொட்டிக்குக் கொண்டு செல்லும் கதையாகவே முடியும். பிரச்சினைகளுக்குத் தீர்வுநெருங்கிவிட்டது அல்லது விரைவில் தீர்வுகளைக் கண்டுவிடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தாலும், அது கானல் நீராக, தூரத்தையும் காலத்தையும் இழுத்தடிக்கவே செய்யும்...
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila