கை கழுவப்படுவார்களா மூத்த இராணுவ அதிகாரிகள்?

இராணுவ உயரதிகாரிகள் விடயத்தில், தீர்க்கமான முடிவை எடுப்பதில், தற்போதைய அரசாங்கம் கடுமையான நெருக்கடி ஒன்றை எதிர்கொண்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளுடன் போர் நடந்த காலத்தில், அரசாங்கம் எதிர்கொண்டதை விடவும் சிக்கலான நிலையை இப்போதைய அரசாங்கம் எதிர்கொண்டிருக்கிறது.
உயர்மட்ட இராணுவ அதிகாரிகளின் நியமன விடயத்தில் முன்னர் இராணுவ மட்டத்தில் தான், சலசலப்புகளையும் எதிர்ப்புகளையும் முன்னைய அரசாங்கங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது.
இப்போது, இத்தகைய நியமன விடயங்களில், புற அழுத்தங்களையும் அரசாங்கம் சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் அரசாங்கம் இத்தகைய புற அழுத்தங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதேவேளை, திடீரென வீங்கிப் பருத்த இராணுவத்தின் தாக்கத்தை இப்போதுதான் இலங்கை உணரவும் தொடங்கியிருக்கிறது. இதனால் இராணுவத்தின் உயர் மட்ட நியமனங்கள் சிக்கலானதாக மாறி வருவதுடன், அவ்வப்போது சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இராணுவத் தளபதி நியமனத்தில் அதிகம் சர்ச்சைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை. ஏனென்றால், அவர் அதிகளவில் போர் நடவடிக்கைகளில் முன்னிலை நட்சத்திரத் தளபதியாக இருந்திருக்கவில்லை.
ஆனால், இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்ட போது, கடுமையான விமர்சனங்களை சர்வதேச அளவில் சந்திக்க நேரிட்டது.
இறுதிப் போரில் பங்கெடுத்த 57ஆவது டிவிஷனுக்குத் தலைமை தாங்கியவர் அவர்.
பெரியதம்பனை, பெரிய பண்டிவிரிச்சானில் தொடங்கி, முள்ளிவாய்க்கால் வரை அவர் இறுதிக்கட்டப் போரில், 57வது டிவிஷனின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார்.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்கு இவரும் பொறுப்பாக்கப்பட வேண்டியவர் என்ற குற்றச்சாட்டு, பரவலாகவே எழுப்பப்பட்டு வருகிறது.
இதனை அடிப்படையாக வைத்து சுவிட்ஸர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அதில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸுக்குப் பாதகமான தீர்ப்பும் அறிவிக்கப்பட்டது.
எனவே தான், இத்தகைய ஒருவரை இராணுவத்தின் உயர் பதவிக்கு நியமிப்பது பொருத்தமற்றது என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.
இந்தநிலையில், இலங்கை இராணுவம் இப்போது முக்கியமான காலகட்டம் ஒன்றுக்குள் நுழைந்திருக்கிறது.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் விசாரணைப் பொறிமுறை ஒன்றை எப்படியாவது எதிர்கொண்டாக வேண்டியது இந்தக் காலகட்டத்தில் முக்கியமானதொரு விடயம்.
அதேவேளை, போரின் இறுதிக்கட்டத்தில் முக்கிய பங்காற்றிய- வெற்றியைத் தீர்மானிப்பதில் கருவிகளாகச் செயற்பட்ட அதிகாரிகளை உயர்பதவிகளுக்கு நியமிப்பதில் சிக்கல்களையும் அது எதிர்கொண்டுள்ளது.
தற்போது இராணுவத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் வரிசையிலுள்ள பெரும்பாலானோர், போர் முனையில் படைப்பிரிவுகளை வழி நடத்தியவர்களாகவே இருக்கின்றனர்.
இப்படியான நிலையில், போர்முனைப் பணிக்காக அவர்களை கௌரவிப்பதா- அல்லது போர்க்குற்றங்களுக்காக அவர்களை விசாரணை செய்வதா என்ற கேள்வி அரசாங்கத்துக்குள் எழுந்திருக்கிறது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்த இரண்டையும் செய்ய வேண்டிய நிலைதான் இருக்கிறது.
ஏனென்றால், போர்க்குற்ற விசாரணையை நடத்தாது போனால், சர்வதேச சமூகம் கழுத்தைப் பிடித்து நெரிக்கும்.
போர்முனையில் முக்கிய பங்காற்றிய அதிகாரிகளை தட்டிக்கழித்தால், அவர்கள் மட்டுமன்றி, சிங்கள மக்களும், சிங்கள அரசியல்வாதிகளும் வெறுப்படைவார்கள்.
இராணுவத்தினர் மத்தியில் இத்தகைய வெறுப்பு ஏற்படுகிறதோ இல்லையோ, அவர்களை அந்த நிலைக்கு கொண்டு செல்ல மஹிந்த ராஜபக் ஷ அணி தயாராகவே இருக்கிறது.
ஏற்கனவே, பாராளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச, இறுதிப்போரில் முக்கிய பணியாற்றிய இராணுவ அதிகாரிகள் பலரை அரசாங்கம் ஓய்வில் அனுப்பப் போவதாக விசனம் தெரிவித்திருந்தார்.
அவ்வாறு செய்யக் கூடாதென்றும், போர்க்குற்ற விசாரணை நடக்கவுள்ள சூழலில், அது அவர்களைப் பாதுகாப்பற்ற நிலைக்குள் தள்ளிவிடும் என்றும், அவர்களுக்கு நிறுவன ரீதியான பாதுகாப்புக் கிடைக்காது போகும் என்றும் மஹிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
இராணுவ சேவையில் இருக்கும் படை அதிகாரிகள், போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டால் அவர்களைக் காப்பாற்ற அரசாங்கம் துணை நிற்கும் என்பதை தான் மஹிந்த ராஜபக் ஷவின் கருத்து எடுத்துக் காட்டியது.
இதேபோன்ற கருத்துக்கள் அரசாங்க தரப்பில் இருந்தும் வெளியாகியிருந்தன.
இதனால் போர்க்குற்ற விசாரணைகளின் நம்பகத்தன்மை, நடுநிலைமை குறித்த சந்தேகங்கள் இருப்பது இயல்பே.
மஹிந்த ராஜபக்ச கூறியது போன்று, அரசாங்கம், பல மூத்த படை அதிகாரிகளை ஓய்வில் அனுப்பத் திட்டமிட்டுள்ளது உண்மையே. அதற்குத் தனியே போர்க்குற்ற விசாரணை மட்டும் காரணமல்ல.
வீங்கிப் பருத்துப் போயிருக்கும் இராணுவக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்தும் தேவையும் அதற்கு ஒரு காரணம்.
மேஜர் ஜெனரல் பதவியில் உள்ள இராணுவ அதிகாரிகள் 55 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்பது இராணுவ சட்டம். இந்தச் சட்டம் கடந்த காலங்களில் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அரசியல் செல்வாக்குப் பெற்ற இராணுவ அதிகாரிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், நட்சத்திரத் தளபதிகளாக இருப்பவர்கள் போர்முனைக்கு தேவைப்பட்டதாலும், அனுபவம் மிக்க அதிகாரிகளின் சேவை இராணுவத்துக்கும் தேவைப்பட்டதாலும், பல தளபதிகள், 62 வயது வரை கூட இராணுவத்துக்குள் நின்று பிடித்தனர்.
மேஜர் ஜெனரல்கள் பலரும் 55 வயதில் ஓய்வுபெறத் தவறியதால், கடந்த காலங்களில், பிரிகேடியர், கேர்ணல், லெப்.கேணல் போன்ற பதவிகளிலிருந்து அதிகாரிகள், மேல் வரிசைக்கு வர முடியாமல், ஓய்வுபெற நேரிட்டது.
இது இராணுவ அதிகாரிகள் மத்தியில் விரக்தியையும், விசனத்தையும் நீண்டகாலமாகவே ஏற்படுத்தி வந்தது.
இந்தநிலைக்கு முடிவுகட்டவும், இராணுவத்தை இளம் இரத்தம் கொண்டதாகப் பேணவும், 55 வயதுக்கு மேல் சேவை நீடிப்பு வழங்குவதில்லை என்ற முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.
முக்கிய தேவைகள் இருந்தால் மட்டும், மேஜர் ஜெனரல்களுக்கு 55 வயதுக்கு மேல் சேவை நீடிப்பு அளிக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார். இதுவும் தற்போது அதிகம் பேசப்படும், இராணுவ மறுசீரமைப்புத் திட்டங்களில் ஒன்று தான்.
இதற்கமைய, 2015 டிசெம்பருக்கும், 2016 டிசெம்பருக்கும் இடைப்பட்ட ஒரு ஆண்டு காலத்துக்குள், கிட்டத்தட்ட 25 மேஜர் ஜெனரல்கள், 55 வயதை எட்டி ஓய்வுபெற வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு ஓய்வுபெற வேண்டிய இராணுவ அதிகாரிகளில், இறுதிக்கட்டப் போரில் முக்கியமான டிவிஷன்களுக்குத் தலைமை தாங்கியவர்களும் அடங்கியுள்ளனர்.
மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் வரும் 25ம் திகதியுடனும், மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த அடுத்த ஆண்டு நவம்பர் 16ம் திகதியுடனும், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அடுத்த ஆண்டு செப்ரெம்பர் 5ம் திகதியுடனும், மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா அடுத்த ஆண்டு மே 04ம் திகதியுடனும் ஓய்வுபெற வேண்டியிருக்கும்.
மேஜர் ஜெனரல்களை 55 வயதில் ஓய்வுபெற வைக்கும் திட்டத்தை, இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம், அரசாங்கமும் சில சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்ளலாம். இறுதிப்போர் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அதிகாரிகளை, உயர் பதவிகளுக்கு அண்ட விடாமல் தடுக்க முடியும்.
அது, குற்றம்சாட்டப்பட்டவர்களின் சார்பாக அரசாங்கம் செயற்படுகிறது என்ற கருத்து ஏற்படுவதை தடுக்கவும், சர்வதேச அழுத்தங்களில் இருந்து பாதுகாப்புத் தேடவும் அரசாங்கத்துக்கு உதவும்.
ஆனால், இந்த விவகாரத்தை, வைத்து உசுப்பேற்றும் மஹிந்த ராஜபக்ச அணியினர், 55 வயதுக்கு மேல் சேவை நீடிப்பு வழங்கி அவர்களுக்கு போர்க்குற்ற விசாரணையில் இருந்து நிறுவன ரீதியான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கியுள்ளமையானது அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் நாசூக்காக கையாண்ட விடயத்தை, மஹிந்த ராஜபக்ச குழப்பி விட்டார்.
இந்தநிலையில், 55 வயதில் ஓய்வுபெற வைக்கும் திட்டத்தை அரசாங்கம் இறுக்கமாக நடைமுறைப்படுத்தினால், அது போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ளும் படையினரை அரசாங்கம் கையை விட்டு விட்டது என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிடும்.
அதேவேளை. அவர்களுக்கு சேவை நீடிப்பு வழங்கினால், போர்க்குற்ற விசாரணையில் இருந்து பாதுகாப்பளிக்கிறது என்ற கருத்தை ஏற்படுத்தும். இந்தநிலையில், வரும் 25ஆம் திகதி என்பது முக்கியமான ஒரு நாளாக இருக்கப் போகிறது.
ஏனென்றால் அது தான் பெரும் சர்ச்சைகளில் சிக்கியுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஓய்வுபெற வேண்டிய நாள்.
அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாமல் ஓய்வுபெற வைக்கப்படுவார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதேவேளை, அடுத்த இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்படவுள்ளதாகவும் சில செய்திகள் வெளியாகின. இதில் எது உண்மை என்பதை இந்த ஆண்டின் இறுதி வாரமே தீர்மானிப்பதாக அமையும்.
மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் விடயத்தில் எடுக்கப்போகும், முடிவு எத்தகையதாக இருந்தாலும், அது அரசாங்கத்துக்கு விமர்சன ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
சுபத்ரா
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila