கொழும்பில் பல வருடங்களாக வளர்ந்து , வட கிழக்கின் நிலமை என்னவென்று புரியாமலேயே இருந்து வந்த நபர் தான் தற்போதைய வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன். தேர்தல் காலகட்டத்தில், அவரை முதலமைச்சர்வேட்பாளராக நிறுத்துவதில் கூட பெரும் சர்சை இருந்தது. ஆனால் அவர் பின்னர் முதலமைச்சராகி , வட கிழக்கில் தங்கியவேளை அம்மக்களின் துன்பங்களை நேரடியாக கண்டார். இதனால் இது நாள் வரை அவர் நினைத்து வைத்திருந்த பல எண்ணங்கள் மாற்றம் அடைந்தது. இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள பல அரசியல்வாதிகள், தாம் செல்வாக்கோடுமற்றும் அதிகார பலத்தோடு இருக்கவேண்டும்(பவரில்) என்றே அரசியல் செய்து வருவதனையும் விக்கினேஸ்வரன் அவதானிக்க தவறவில்லை. இதனால் அவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையே இடைவெளி அதிகரிக்க ஆரம்பித்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை , இறக்கும்வரை (மரணப் படுக்கையில் சம்பந்தர் இருந்தாலும்) அவரே தலைவர் என்பது தான் நியதியாகிவிட்டது.. மாறாட்டம் இருந்தாலும் ஏன் அறளை பெயர்ந்தாலும் அவரே தலைவர். இன் நிலையில் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக வரக்கூடிய தகுதி , விக்கினேஸ்வரனுக்கே உள்ளது என்று பலர் கருதினார்கள். இதனால் அடிவயிற்றை பிடித்துக்கொண்டு கதறினார் மாவை. இதேவேளை இது நாள் வரை பின் கதவால் MP ஆன சுமந்திரன், நடந்து முடிந்த தேர்தலில் கள்ள வோட்டுகளைப் பெற்று MP ஆக மீண்டும் வலம்வந்துகொண்டு இருந்தார். சுமந்திரன் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு இடையே உள்ள பவர் ஸ்டார் போட்டி அதிகரிக்கவே , சுமந்திரன் தனது பவரைக் காட்டி ,சுரேஷை இம்முறை MP ஆக விடாமல் தடுத்துவிட்டார்.
இதனால் மேலும் பிளவடைந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதிருப்த்தி அங்கத்தவர்கள் அனைவரும் அடிக்கடி இணைந்து சில சந்திப்புக்களை மேற்கொண்டு வந்தார்கள். யாழில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டார்கள். இறுதியாக தர்மலிங்கம் சித்தார்த்தன், கஜேந்திர குமார் பொன்னம்பலம் போன்ற அரசியல்வாதிகள் இணைய , மேலும் பல மூத்த அரசியல்வாதிகள்இணைய ,விக்கி பங்கேற்க்க "தமிழ் மக்கள் பேரவை" என்னும் அமைப்பை தொடங்கியுள்ளார்கள். குறித்த இந்த அமைப்பையும், அதற்கு புலம் பெயர் நாட்டில் உள்ள ஆதரவையும். மேலும் அதில் இணைந்துள்ள அங்கத்தவர்களையும் பார்த்து , தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆடிப்போயுள்ளது என்பது தான் உண்மை. அதிலும் சம்பந்தர் வெகுவாக மிரண்டுபோய் உள்ளார் என்பதற்கு சான்று , அவர் உடனே விக்கினேஸ்வரனை அழைத்துப் பேசியது தான்.
கருணா புலிகள் இயக்கத்தை காட்டிக் கொடுத்து அவர்கள் அழிவிற்கு தூபமிட்டாரோ. அதுபோல தமிழ் தேசிய கூட்டமைப்பில் சுமந்திரன். இவரை சம்பந்தர் மடியில் தூக்கிவைத்து கொஞ்சிக் கொண்டாடுவது இவர்கள் அழிவுக்கு தற்போது வித்திட்டுள்ளது என்றால் அது மிகையாகாது. கணிசமான வாக்குகளை கடந்த தேர்தலில் பெற்ற பலர் தற்போது "தமிழ் மக்கள் பேரவையில்" இணைந்துள்ளார்கள். தமிழ் மக்கள் பேரவை என்றால் என்ன ? புலம் பெயர் தமிழர்கள் செய்யும் அரசியலுக்கு அது உறுதுணையாக இருக்கும் என்பது போன்ற விடையங்களை மக்கள் முதலில் நன்றாக அறிந்து வைத்திருப்பது அவசியம். தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக. தமிழர்களின் விடிவுக்கு பாடுபடும் ஒரு அரசியல் சக்தியாக "தமிழ் மக்கள் பேரவையில்" நிச்சயம் இருக்கும்.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் தொங்கிக்கொண்டு இருப்பவர்களும். அதன் வாலைப் பிடித்து ஊஞ்சல் ஆடுபவர்களும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சுமந்திரன் கோஷ்டியும்(அமெரிக்க நிதியால் செழிப்பாக உள்ளவர்களும்) உடனே முதல்வர் விக்கினேஸ்வரன் மீது சேறு பூச ஆரம்பிப்பார்கள். உடனே அவர்களிடம் எஞ்சியுள்ள சில கொசுறு ஊடகங்களை பயன்படுத்தி, விக்கினேஸ்வரனை "கள்ளன்" என்று எழுதுவார்கள். இவர்களுக்கு தெரிந்தவை இவ்வளவு தான். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் துரோகி ஆக்குவது. விடுதலைப் புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கும்போது , பல மாற்று போராட்ட இயக்கங்கள் உள்வாங்கப்பட்டது. அப்போது தேசிய தலைவரோடு நடந்த சந்திப்பில் இறந்த புலிகளுக்காக மாவீரர் தினத்தை கொண்டாடுகிறீர்கள். ஆனால் எமது இயக்க தோழர்கள் பலர் வீரமரணம் அடைந்துள்ளார்கள். அவர்களையும் நினைவு கூருங்கள் என்ற முறைப்பாடு செய்யப்பட்டது.
அதற்கு தேசிய தலைவர் சட்டனெச் சொன்னார், ஆமிக்காரனோடு போராடி இறந்த அனைவரும் மாவீரர்களே. அவர்கள் பெயர் பட்டியலை கொண்டுவாருங்கள் நாம் மாவீரர் பட்டியலில் இணைக்கிறோம்என்று. ஆனால் அவ்வாறு கோரிக்கை விடுத்த மாற்று இயக்க தலைவரிடம் பெயர் பட்டியல் இல்லையாம். ஆனால் புலிகளோ தமது மாவீரர்களை மிகவும் கவனமாக பட்டியல் இட்டு வைத்திருந்தார்கள். இவ்வாறு தலைவரால் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, பின் நாளில் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பலரை அமைப்பில் இருந்து தூக்கியது. யாழில் சம்பந்தர் சிங்கக் கொடியை உயர்த்திக் காட்டி, தான் யாருடைய அடி வருடி என்று மீண்டும் ஒரு முறை மக்களுக்கு நிரூபித்தார். எனவே ஒரு அரசியல் கட்சி தனது நோக்கத்தில் இருந்து விலகிச் சென்றால், அதில் உள்ளவர்கள் ஒரு புதிய கட்சியை தொடங்குவதற்கு உரித்துடையவர்களாகிறார்கள்.
ஆனால் இந்த புதிய "தமிழ் மக்கள் பேரவையிலும்" பிளவுகள் ஏற்படக் கூடாது. அதிகாரப் போட்டிகள் இருக்க கூடாது. தமிழ் மக்களின் விடிவுக்காக போராடவேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு போல இரட்டை முகத்தை காட்ட கூடாது. "தமிழ் மக்கள் பேரவை" இந்த விடையங்களை கவனித்துக் கொண்டால் போதும். 2020ல் நடக்க இருக்கும் இலங்கை பொதுத் தேர்தலில் கணிசமான ஆசனங்களை அது வென்றுவிடும். எப்போதும் வெல்பவர்களால் தான் சரித்திரம் எழுதப்படுகிறதுஎன்பார்கள். தேற்றவர்களை ஒரு ஏழனமாகப் பார்பதும். தோற்றபின்னர் அவர் தொடர்பாக குறைகூறுவதையுமே எமது தமிழ் அரசியல்வாதிகள், மற்றும் செயல்பாட்டாளர்கள்பல காலமாக செய்து வருகிறார்கள். காசுக்கு மாரடிக்கும் கூட்டம் ஒன்று. பதவிக்காக மாரடிக்கும் கூட்டம் ஒன்று. அதிகாரத்தை காப்பாற்ற மாரடிக்கும் கூட்டம் ஒன்று. இவர்களே தற்போது தமிழ் தேசிய அரசியல் பரப்பில் சஞ்சரிக்கிறார்கள். மாற்று சக்திகள் நிச்சயம் வெளியில் வரவேண்டும் .... ! மாற்றம் ஒன்று நிகழவேண்டும்... அது "தமிழ் மக்கள் பேரவையினால்" சாத்தியமாகுமா ?
அதிர்வுக்காக,
கண்ணன்