இன்று மே 18. வன்னிப் பெருநிலப்பரப்பில் உயிரிழந்த எங்கள் உறவுகளுக்கு மனம் மெய் மொழிகளில் அஞ்சலியைச் செலுத்துகின்ற நாள்.
இன்று காலை 9.30 மணிக்கு மெளன அஞ்சலி செலுத்தப்படும்.
எங்கள் உறவுகளே! உங்கள் இழப்பால் நாம் எல்லாம் இழந்தோம். இந்தப் பிறவியில், இந்த யுகத்தில் உங்களை இனிக் காண்பதற்கு வாய்ப்பே இல்லை என்றாயிற்று.
எத்தனை இடப்பெயர்வுகள், எத்தனை கஷ்டங்கள் இவற்றை எல்லாம் கடந்து எப்படியும் உயிரைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையோடு எதிர்நீச்சல் போட்ட உங்களை முள்ளிவாய்க்காலைத் தாண்ட விடாமல் உயிரறுத்த கொடுமையை நினைக்கும் போதெல்லாம் தலை வெடித்துச் சிதறும்.
அந்தளவுக்கு உங்கள் இழப்புகள் எங்கள் ஆழ்மனதில் அப்படியே பதிவாகிவிட்டது. ஓடுகின்ற போது வீழ்ந்து வெடித்த ஷெல்லில் மாண்ட கதை;
நீங்கள் ஓடித் தப்புங்கள் என்று சொன்ன படியே உயிர்விட்ட துயரம்;
பிள்ளைகளைக் காப்பாற்றப் போனபோது பதுங்கு குழிக்குள் இருந்த வேளை இப்படியே பல்லாயிரக்கணக் கான மரணங்களுக்குள் மனிதத்தை வதைக்கும் சம்பவங்கள் உண்டு.
அவற்றை மீட்டுப் பார்க்கவே, நெஞ்சம் பதறும் அளவிலேயே ஈழத் தமிழினத்தின் வாழ்வு அமைந்து விட்டது.
இத்தனை கொடுமைகள் நடந்த பின்பும் வன்னிப் போரில் உயிரிழந்த தங்கள் உறவுகளை நினைந்து அஞ்சலிப்பதற்கும் நினை வேந்தல் நிகழ்வைச் செய்வதற்கும் இடையூறு செய்கின்ற ஈனர்கள் இன்னமும் உளர் எனும் போதுதான் தமிழினத்தின் உண்மை நிலைமை தெரிகிறது.
எதுஎவ்வாறாயினும் வன்னிக் கொடும் போரில் உயிரிழந்த எங்கள் உறவுகள் தங்கள் மெளனம் கலைத்து எங்களைப் பார்க்கின்ற நாள் இன்று.
எங்கள் உறவுகளின் ஆத்மாக்கள் நிச்சயம் எங்களைப் பார்த்து இன்னமும் உங்களுக்கு உரிமையும் விடிவும் கிடைக்கவில்லையோ என்று கலக்கம் கொள்ளும் நாள்.
எங்கள் உறவுகளே! என்று அந்தப் புனித ஆத்மாக்கள் கதறுகின்ற நாள். இந்த நாளில் எங்கள் உறவுகளின் அதிர்வால் கண்ணீர் விட்டு கதறி எங்கள் உறவுகளே உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என்று இயற்கை யான இறைவனிடம் மன்றாடும் நாள்.
இந்தப் புனிதமான நாளில் நாம் அனைவரும் வன்னிப் போரில் உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைந்து அகவணக்கம் செலுத்துவோம்.
இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருக்கிறீர்களா? என்று தமிழ் அரசியல் தலைமையைப் பார்த்து எங்கள் ஆத்ம உறவுகள் கேட்பர். அந்த ஒலியைக் கேட்கும் திறன் நம்மிடம் இல்லையாயினும் அந்த ஒலியின் அதிர்வு எங்கள் உள்ளங்களை ஆட்படுத்தும். அப்போது இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.
ஆம், தமிழ் அரசியல் தலைமைகளே! உங்கள் அரசியல் ஒற்றுமை எப்படியானது? உங்கள் அரசியல் நகர்வு எத்தன்மையது? என்று எங்களுக்குத் தெரியும்.
ஆனால் வன்னிப் போரில் உயிரிழந்த எங்கள் உறவுகளுக்கு அதைத் தெரியப்படுத்தி விடாதீர்கள். ஏனெனில் அதை அவர்களால் தாங்க முடியாது.
இன்றேனும் ஒற்றுமையாய் நின்று அஞ்சலி செய்யுங்கள். அவர்களாவது அமைதியாய் உறங்குவதற்கு.