வடக்கு மாகாண சபையின் அமர்வுகள் நடைபெறுகின்ற போது சபை உறுப்பினர்கள் ஆற்றுகின்ற உரைகள், தெரிவிக்கின்ற கருத்துக்கள் மிகவும் ஆணித்தரமானதாக இருப்பது அவசியம்.
கருத்துக்களைக் கூறவேண்டும் என்பதற்காக அல்லது எதிர்வாதம் புரிந்தாக வேண்டும் என்பதற்காக உரையாற்றுவதென்பது நேரத்தை வீணடிக்கும் செயலாகும்.
வடக்கு மாகாணசபை என்பது தமிழ் மக்களின் அரசு. எனவே தமிழ் மக்களுக்குச் செய்ய வேண்டிய பணியை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்பது தொடர்பில் சபை உறுப்பினர்கள் ஆழமாக ஆராய்ந்து உரையாற்றுவார்களாயின் அது மிகப்பெரும் பயன் உறுதிமிக்கதாக அமையும்.
மாகாண சபை என்பது தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்றக் கூடியது என்று எவரும் கூறமுடியாது.
அதேநேரம் வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் உள்ளன. அந்த வாக்குறுதிகள் மாகாண அரசால் செய்யக் கூடியவை என்ற அடிப்படையிலேயே தேர்தல் காலத்தில் கூறப்பட்டவையாக இருக்க வேண்டும்.
எனவே வடக்கு மாகாண சபை பயன்உறுதிமிக்க பணியைச் செய்வதற்கு அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் ஒருமித்துச் செயற்படுவது அவசியமாகும்.
மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் ஒரு பக்கம் சாய்ந்து நின்று தமது கட்சிக்கு ஆதரவாக செயற்படுதல் என்ற கொள்கையோடு இருந்தால், கிடைத்த மாகாண சபையால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும்.
வடக்கு மாகாண சபையைப் பொறுத்தவரை, வடக்கின் முதல்வர் மீது மக்களும் சர்வதேச நாடுகளும் உயர்ந்த மதிப்பை கொண்டுள்ளன. இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வடக்கின் முத லமைச்சரை சந்திப்பதில் அதீத ஆர்வம் கொண் டிருப்பது எங்களுக்கான கெளரவமான அங்கீகாரம் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.
அரசியலில் எங்களின் எதிர்காலம் மட்டுமே கவனிக்கப்பட வேண்டும் என்று யார் நினைத்தாலும் அவர்களால் ஒருபோதும் மக்கள் பணி செய்ய முடியாது என்பதுடன் அவர்கள் சபையின் இயங்கு நிலைக்கு எப்போதும் பாதகமாகவே இருப்பர்.
ஆகையால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்; மக்கள் தமக்குத் தந்த ஆதரவை-பதவியை நினைந்து நினைந்து சேவை செய்ய வேண்டும்.
அதேநேரம் வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அமைச்சுகளின் கீழ் பணியாற்றுகின்ற செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தமிழ் மக்களுக்கு சேவையாற்றக் கிடைத்த பெரும் சந்தர்ப்பமாக இதைக் கருதி தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வுக்காக அரும் பணியாற்ற வேண்டும்.
போரினால் அவலப்பட்ட வட மாகாணத்தில் சில கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடந்தன. அப்போது மாகாண அரசு இயங்கியிருக்கவில்லை.
வடக்கின் ஆளுநராக ஜி.ஏ.சந்திரசிறி இருந்தார். அவர் ஆளுநராக இருந்தபோது சில வேலைத்திட் டங்கள் முன்னெடுக்கப்பட்ட வேகம் கண்டு அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.
ஜி.ஏ.சந்திரசிறி தொடர்பில் தமிழ் மக்கள் கொண்டுள்ள கருத்துக்கள் ஒருபுறம் இருக்க, சந்திரசிறி ஆளுநராக இருந்த போது யுத்த கால நடவடிக்கை போல செயற்பட்ட அதிகாரிகளுக்கு இப்போது என்னவாயிற்று என்பதே நம் கேள்வி.
மக்கள் ஆட்சி என்பது ஜனநாயகப் பண்புடை யதே அன்றி அது மந்தமானதன்று. எனவே வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட செயலாளர்கள், அதிகா ரிகள் தமிழ் மக்களுக்காக தங்கள் பணியை அர்ப்பணித்து, அழு கண்ணீருடன் வாழ்கின்ற எங்கள் மக்களின் வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை-முன் னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது நம் தாழ்மையான கோரிக்கை.