பிஞ்சுகள் பருகும் தண்ணீரில் நஞ்சு கலந்த நஞ்சடைந்த இதயத்தார் நடமாடவோ!

ஏழாலை மயிலங்காடு ஸ்ரீமுருகன் வித்தியாலய குடிநீர்த் தாங்கியில் கிருமிநாசினி கலக்கப்பட்டது என்ற செய்தி பெரும் பரபரப்பையும் தாளாத அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர்த் தாங்கிக்குள் கிருமிநாசினிப் போத்தல் கிடப்பது கண்டறியப்பட்டதன் மூலம் குடிநீரில் கிருமிநாசினி கலக்கப்பட்டுள்ளமை நிரூபணமாகின்றது.

சின்னஞ்சிறு பிள்ளைகள் குடிக்கின்ற நீருக்குள் நஞ்சைக் கலக்கின்ற படுபாதகத்தை கொடுஞ்செயல் என்று கூறினாலும் அது போதாது.

இனத்தால், மதத்தால், மொழியால் என எந்தப் பேதங்களும் சின்னஞ்சிறு பிள்ளைகள் என்ற விடயத்தில் கிடையாது.

ஒரு குழந்தை தவிக்கும் போது அங்கு மனிதம் மட்டுமே துடிக்கும். சாதி, சமயம், இனம் என்ற எந்தப் பேதமும் அங்கு அடங்கி ஒடுங்கிவிடும். அந்த அளவிற்கு சின்னஞ்சிறு பிள்ளைகள் விடயத்தில் இரக்கமும் கருணையும் இருக்கும்போது, பள்ளிக் குழந்தைகள் ஓடிச்சென்று பருகுகின்ற தண்ணீரில் நஞ்சைக் கலந்த, நஞ்சடைத்த அந்த இதயம் இருக்கிறதே அது இந்த உலகம் முழுவதையும் அழிக்க வல்லது.

குடிதண்ணீரில் நஞ்சு கலந்ததான செய்திகளை உலகெங்கும் தேடினாலும் காண்பது அரிது என்பதாக நிலைமை இருக்கையில்,

எங்கள் தமிழ் மண்ணில்-சைவமும் தமிழும் விளைந்து ஓங்கி வளர்ந்த ஏழாலைத் திருமண்ணில் இக் கொடுஞ் செயலைச் செய்தது யார்? இத்தகைய கொடும் செயலின் பின்னணி என்ன? குடி தண்ணீரில் நஞ்சைக் கலந்து அந்தப் பள்ளி மாணவச் செல்வங்களை அவலத்துக்கு ஆளாக்குவதன் மூலம் கொடுஞ்செயல் செய்தவர்கள் எதனை எதிர்பார்க்கின்றனர் என்பது துருவித் துருவி ஆராயப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் பொலிஸார் மட்டும் தேடுதல், விசாரணை நடத்துவர் என்று எண்ணினால் சூத்திரதாரிகள் தப்பிக் கொள்ளும் வாய்ப்பு நிறையவே உண்டு. எனவே தாகம் தீர்க்கும் தண்ணீரில் நஞ்சு கலந்த வஞ்சகர்களை ஊர் திரண்டு, பள்ளிச் சமூகம் திரண்டு கண்டறிய வேண்டும்.

அதே சமயம் தகவல்கள் தெரிந்தவர்கள் அதனைத் தங்களோடு வைத்திராமல் பொலிஸாருக்குத் தெரியப்படுத்துவதும் அவசியம்.

இத்தகைய ஈனச் செயல்களை கண்டும் காணாமல் இருப்பது மிகப்பெரும் பாவம். இவற்றுக்கு அப்பால் குடிதண்ணீரில் நஞ்சு கலந்தமை தொடர்பான விசாரணைகள், அவற்றின் தொடர் நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் பொலிஸார் தகவல் வெளியிடவேண்டும்.

வடபுலத்தைப் பொறுத்தவரை எத்தகைய கொடுஞ் செயல் நடந்தாலும் அவை பற்றிய விசாரணைகளை பொலிஸார் வெளிப்படுத்துவதில்லை. இதன் காரணமாகப் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற கருத்தும் மக்கள் மத்தியில் உண்டு.

எனவே தகவல்கள் வெளிப்படுத்தப்படவேண்டும். தகவல் அறியும் உரிமையைப் பாதுகாக்கின்ற பொறுப்பு பொலிஸாருக்கும் உண்டு. இது தவிர, குடிதண்ணீரில் நஞ்சு கலந்த ஈனச் செயல் குறித்து அனைவரும் விழிப்பாக இருப்பது அவசியம்.
நஞ்சு படைத்த இதயத்தினர் நம் மண்ணில் நட மாடுவதால், உண்மையைக் கண்டறியும் வரை பொது  இடங்களில் குடி நீர் அருந்துவோர் மிக மிகக் கவனமாக இருப்பதும் கட்டாயம்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila