போர்க் குற்றம், மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கை இன்னும் உறுதியான வடிவத்தை வெளியிடாமையினால் மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் நடைபெறும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் வரைவு வேலைத்திட்டத்திலேயே இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வு 2016 ஆம் ஆண்டு ஜுன் 13ம் திகதி ஆரம்பமாகி ஜுலை முதலாம் திகதிவரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளதுடன், ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வாய்மூல மேம்படுத்தல் விளக்கமளிப்பும் இடம்பெறவுள்ளது.
இதன்போது, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 30ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் அமுலாக்கம் தொடர்பில் வாய்மூல விளக்கமளிப்பு இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
முன்னதாக, இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அதன் பரிந்துரைகளின் அமுலாக்கம் தொடர்பில் 32வது அமர்வில் வாய்மூல தெளிவுபடுத்தல் ஒன்றையும், 34வது அமர்வில் விரிவான அறிக்கை ஒன்றையும் சமர்பிக்குமாறு மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகம் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.