தமிழ் மக்களின் ஒரே பலம் ஒற்றுமை என்பதை எவரும் மறந்து விடக் கூடாது. அந்த ஒற்றுமை குலைந்து போகுமாக இருந்தால், அதனால் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள்-தமிழினம் என்ற உண்மையையும் நாம் இவ்விடத்தில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனினும் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் ஒற்றுமையைக் குலைத்து அதில் இருந்து பதவியைப் பெற்றுக் கொள்ள நினைக்கின்ற கொடுமை நடந்தேறுகின்றது.
அண்மையில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை மதத்தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் இணைந்து அமைத்தனர். அந்த அமைப்பினர் இது ஓர் அரசியல் கட்சியோ மாற்றுத் தலைமையோ இல்லை அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ் மக்களின் நலன்களை கவனிக்கின்ற அமைப்பு என்று வெளிப்படையாகக் கூறிய போதிலும், இல்லை இது அரசியல் கட்சிதான்; மாற்றுத் தலைமைதான் என்று ஒரு சிலர் விடாப்பிடியாக நிற்கின்றனர்.
தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சி அல்ல என்று மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் வெளிப்படையாகக் கூறியுள்ளனர். தமிழ் மக்கள் பேரவையில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் இது அரசியல் கட்சி அல்ல தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் அமைப்பு என்று பட்டவர்த்தனமாகத் தெரிவித்துள்ளனர்.
இருந்தும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட்டு விடக் கூடாது; அவர்கள் ஒற்றுமைப் பட்டால் எங்கள் அரசியல் பிழைப்பு அம்போ என்றாகிவிடும் என்று பயம் கொண்டவர்கள் தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சி என்று விமர்சிக்கின்றனர்.
இங்குதான் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் பிரித்தாளும் தந்திரம் வெளிப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தருக்கு பின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியில் சிலர் தாமே என்று கற்பனை செய்து கொண்டு அதற்கேற்றால் போன்ற சூழமைவை ஏற் படுத்துவதற்காக சூழ்ச்சி செய்கின்றனர்.
இந்தச் சூழ்ச்சித் தனங்களை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எம்மைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் ஒற்றுமைப் பலம் உயர வேண்டுமாயின் வடக்கின் முதல்வர் விக்னே ஸ்வரனும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும் சந்தித்து தமக்குள் இருக்கக்கூடிய கருத்து முரண்பாடுகளை நிவர்த்திக்க வேண்டும்.
எனினும் பதவி ஆசை பிடித்த அரசியல்வாதிகள் சிலர், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரும் முதல்வர் விக்னேஸ்வரனும் சந்திப்பதை தடை செய்ய முயற்சிப்பர் என்பதும் உண்மை.
எதுவாயினும் தமிழ் மக்கள் பேரவையின் எதிர் காலப் பணி நிச்சயம் அந்த அமைப்பின் நோக்கத்தை வெளிப்படுத்தும். அதுவரை பொறுத்திருந்து பார்க்கமுடியாதவர்கள் கூக்குரல் இடட்டும். அதைப் பற்றி கவலை கொள்ளத்தேவையில்லை.
உண்மையும் நீதியும் எங்குள்ளதோ அங்கு இறை ஆசியும் தூய பணியும் வெற்றியும் இருக்கும் என்பதே உண்மை.