தமிழின அழிப்பு நினைவுநாள் – மே18
விழிமூடிய எம் உறவுகளுக்காய் விளக்கேற்றுவோம்
தமிழ்த் தேசிய இனத்தின் விழுதுகளாய், இழந்துவிட்ட எம் இறைமையையும், தொலைந்துபோன வசந்தம் நிறைந்த எம் இனத்தின் பெருவாழ்வையும் பெற்றுக் கொள்வதற்காக உலக நாடுகளைப் போலவே நாமும் விருப்பும், அவாவும் கொண்ட உண்மையான காரணத்தைச் சுமந்து கொண்டமைக்காகவே, காலத்திற்குக் காலம் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் எம்மினத்தை கொன்றொழித்து வந்த தொடர் செயற்பாட்டின் உச்ச அடையாளமாகவே ஆன்மாவை நெருடும் 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் விழிமூடிப்போன உறவுகளின் ஐந்தாம் ஆண்டு நினைவில் விளக்கேற்றுவோம்! தலைசாய்ப்போம்!! உணர்வுக்கு உரமேற்றுவோம்!!!
எரிகுண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும், நச்சுக் குண்டுகளையும் மக்கள் வாழ்விடங்கள் மீது தொடர்ச்சியாக வீசி ஈவிரக்கமற்ற முறையில் எம்மினத்தைக் கொன்று குவித்துவிட்டு, இன்று இறந்துபோன எம் மக்களுக்காய் விளக்கேற்றவோ, நினைவுகூரவோ தடைகளையும், வன்முறைகளையும் பிரயோகித்தபடி, மாறாகத் தமிழர் தாயகப் பகுதியிலேயே இராணுவ வெற்றியையும், தீவிரமாகக் கொன்றொழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு வெற்றிக் கேடயங்களையும் வழங்கி, பிரமாண்டமான விழா எடுத்து, மகிழ்ந்து களிகூரும் ஸ்ரீலங்கா அரசானது, தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையோ, உலக நாடுகளின் தமிழருக்குச் சார்பான நியாயக் கருத்துக்களையோ ஒரு பொருட்டாக கொள்ளாத காடைத்தனம் தொடர்வதை சுட்டி நிற்கின்றது.
தமிழ் மக்களை தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்குள்ளும், அடிமைத் தனத்திற்குள்ளும் வைத்திருப்பதையே தீவிர இலக்காகக் கொண்ட ஸ்ரீலங்கா அரசானது உலக நாடுகளையும் உள் நாட்டு மக்களையும் நன்கு திட்டமிட்டு ஏமாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இதன் பிரதானமான செயற்பாடாகவே புலிகளின் மீள் எழுகை என்ற செய்தியைப் பரப்பி அப்பாவித் தனமான மக்களைச் சிறைபிடிப்பதும், சித்திரவதை செய்வதும், கொலைசெய்வதும் என எம்மண்ணில் தொடர்கின்றது.
ஸ்ரீலங்கா இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு என்ற தொனியில் தமிழினம் மீதான சிங்களக் கலப்பையும், இனச் சுத்திகரிப்பையும், தமிழ் இளையோரைப் போதைப்பொருள் அடிமைகளாக்கி, பாலியல் பலவீனங்களுக்கு இட்டுச் செல்லும் ஆபாசத் திரைப்பட இறுவெட்டுக்களை சர்வசாதரணமாகவே வினியோகித்தும், தமிழ் தேசிய இனத்தின் பண்பாட்டு விழுமியங்கள் சீரழிக்கப்பட்டு வருகின்றது. தமிழரின் பூர்வீக வாழ்விடங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாகவும், கடல் வளங்கள், விளைநிலங்கள், வன வளங்கள் எல்லாமே சிங்கள முதலாளித்துவ அடக்குமுறைக்குள் இட்டுச் செல்லப்படுவதும், இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அன்பான உறவுகளே! முள்ளிவாய்க்கால் பேரவலத்தோடு, தமிழினம் முற்று முழுதாகவே தோற்கடிக்கப்பட்டு. சிங்களப் பொளத்த மேலாதிக்க ஆளுகைக்குள் அடிமைப்படுத்தப்பட்டு விட்டது என எண்ணிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களின் எண்ணம் கனவாகமட்டும் இருக்கட்டும். வீழ்தவர்கள் வீழ்;ந்தவர்களாகவே அல்லாமல், மீண்டும் எழுந்து நிமிர்ந்த பல நாடுகளின் வரலாறு போன்றே நாமும் நிமிர்ந்தெழுவோம். அறிவியல் கூர்மையுடைய எம்மினத்துக்கு, விடுதலை நோக்கிய நகர்வை உலகம் விரும்பும் வழிமுறையில் முன் கொண்டு செல்லும் வல்லமை உண்டு என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
உலகம் எமக்கான நீதியைப் பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் மாத்திரம் இருந்து விடாமல் அவை வீண்போகால் இருக்க வேண்டுமாயின், சோர்வின்றித் தொடர்ச்சியாக உலக மனச்சாட்சியை உலுப்பும் சக்தியாக உலகப் பரப்பெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் இருக்கவேண்டும்.
“போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது.’’ என்ற வாக்கியத்துக்கேற்ப, தாயகத்தில் வாழும் எம் உறவுகளின் தற்போதய போர்வடிவம் மௌனம்தான். இவ் வடிவம்தான் அச் சூழலுக்கு பொருத்தமானதாகவும் பல உயிர்களின் காப்புக்கும் தேவையாகின்றது. தாயகம் தவிர்ந்த ஏனைய உலக நாடுகளில் வாழும் எம் தமிழ் உறவுகள் இடைவிடாத, தொடர்ச்சியான சாதகப் பொறிமுறைகள் ஊடாக எம் உரிமைக்கான போரைத் தொடர்வோமென, முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் விழிமூடிப்போன எம் உறவுகளின் நினைவில் விளக்கேற்றி உறுதிகொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு
யேர்மனி