2016 : தீர்வு கிடைக்குமா? – நிலாந்தன்

கடந்த ஆண்டு பொதுத்தேர்தலின் போது தனது பிரசாரத்தை திருகோணமலையில் வைத்துத் தொடங்கிய சம்பந்தர் வரும் ஆண்டில் நாங்கள் பயணத்தை முடிக்கப் போகிறோம் என்று தெரிவித்திருந்தார். அதாவது இந்த ஆண்டளவில் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டடையப்போவதாக அவர் கூறியிருந்தார். அப்பொதுத்தேர்தலில் கூட்டமைப்புக்குக் கிடைத்த மக்கள் ஆணையை ஒரு தீர்வுக்காக தமிழ் மக்கள் வழங்கிய ஓர் ஆணையாகவும் எடுத்துக்கொள்ளலாமா? ஆயின் இந்த ஆண்டு ஒரு தீர்வுக்குரிய ஆண்டா? அல்லது இக்கேள்வியை பின்வருமாறு மறுவளமாகக் கேட்கலாம் இவ் ஆண்டில் ஒரு தீர்வைப் பெறுவதற்குரிய ஏதுநிலைகள் உண்டா?
அவ்வாறான ஏது நிலைகள் நான்கு பரப்புக்களில் காணப்பட வேண்டும். முதலாவது அனைத்துலகப் பரப்பு. இரண்டாவது பிராந்தியப் பரப்பு. அதாவது இந்தியப் பரப்பு. மூன்றாவது தமிழ்ப்பரப்பு. நான்காவது தென்னிலங்கை.
முதலில் அனைத்துலகப் பரப்பைப் பார்க்கலாம். கடந்த ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் பின் இலங்கைத் தீவு ஒப்பீட்டளவில் அதிக பட்சம் மேற்கு நாடுகளுக்குத் திறக்கப்பட்டு விட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட வாசலானது சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த பொதுத்தேர்தலோடு மேலும் பெருப்பிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தோடு இலங்கைத்தீவின் வலுச்சமநிலையானது மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் சாதகமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு முழுவதிலும் அந்த வலுச்சமநிலையானது படிப்படியாக ஸ்திரம் அடைந்து வருகிறது. இப் புதிய வலுச்சமநிலையின் ஸ்திரத்தை பிரதானமாக இரண்டு தரப்புக்களே குழப்ப முடியும். முதலாவது மகிந்த தரப்பு. இரண்டாவது தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய தரப்புக்கள்.
மகிந்த இப்பொழுது ஒருவித தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார். அவரையும் அவருடைய குடும்பத்தவர்களின் கழுத்தையும் சுற்றி இறுக்கப்படும் வழக்குகளில் இருந்து தன்னையும் தனது குடும்பத்தவர்களையும் பாதுகாத்துக்கொள்வதற்காக அவர் புதிய அரசாங்கத்தோடு சில விடயங்களில் சுதாகரிக்கத் தொடங்கிவிட்டார். எனவே மகிந்தவை மேலும் மேலும் தற்காப்பு நிலைக்குத் தள்ளுவதன் மூலம் ஆட்சிமாற்றத்திற்குப் பின்னரான வலுச்சமநிலையை மேலும் ஸ்திரப்படுத்தலாம் என மேற்கு நாடுகள் நம்புகின்றன.
அதைப்போலவே தமிழ் மக்கள் மத்தியிலும் ஏதோ ஒரு தீர்வை நோக்கி நிலைமைகளை நகர்த்துவதன் மூலம் தமிழ்த் தரப்புக்களால் புதிய வலுச்சமநிலை குழப்பப்படாது பார்த்துக்கொள்ள மேற்கு நாடுகள் முற்படுகின்றன. இதனால் ஒரு தீர்வை நோக்கி நகர வேண்டிய தேவை மேற்கு நாடுகளுக்கு உண்டு. குறிப்பாக கடந்த பொதுத்தேர்தலில் கூட்டமைப்புப் பெற்ற வெற்றியை பாதுகாக்க வேண்டும் என்று மேற்கு நாடுகளும், இந்தியாவும் சிந்திக்கின்றன. அந்த வெற்றியானது தீர்வின் வழிகளை இலகுவாக்கி இருப்பதாக மேற்கு நாடுகளும் இந்தியாவும் நம்புகின்றன. மாற்றத்தின் வலுச்சமநிலையையும், தமிழ் மக்களுக்கான தீர்வையும் எந்த ஒரு பொதுப் புள்ளியில் சந்திக்கச் செய்யலாம் என்பதே இப்பொழுது அவர்களுக்கு முன்னால் உள்ள சவாலாகும். நிலைமாறு காலகட்ட நீதிக்கான முன்னகர்வுகள் போர்க்குற்ற விசாரணைக்குரிய கலப்புப் பொறிமுறை, ஒரு தீர்வைப்பெறுவதற்கான முன்னெடுப்புக்கள், நல்லிணக்க முன்னெடுப்புக்கள் ஆகிய நான்கையும் ஆகக் கூடிய பட்சம் சமாந்தரமாக முன்னெடுக்கலாமா? என்றும் முயற்சிக்கப்படுகிறது.
அதாவது ஆட்சி மாற்றத்தைப் பலப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களுக்கு ஏதோ ஒரு தீர்வைக் கொடுக்க வேண்டியிருக்கிறது.
அடுத்த தரப்பு இந்தியா. இந்தியாவும் இது விடயத்தில் மேற்குநாடுகளைப் போலவே சிந்திக்க முடியும். மாற்றத்தின் வலுச்சமநிலையைப் பாதுகாக்கவேண்டிய தேவை இந்தியாவுக்கும் உண்டு. முக்கிய தருணங்களில் கொதித்தெழும் தமிழகத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுக்கும் இலங்கைத்தீவில் ஏதோ ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்திய இலங்கை உடன்படிக்கையை ஒரு தொடக்கமாகக் கொண்டு ஒரு தீர்வை நோக்கி நகர்வதை இந்தியா விரும்பக்கூடும். எனவே இந்தியாவின் நோக்குநிலையில் இருந்து பார்த்தாலும் ஏதோ ஒரு தீர்வு தேவைப்படுகிறது.
மூன்றாவது தரப்பு தமிழ்த்தரப்பு. தமிழ் மக்களின் ஆகப்பிந்திய ஆணையைப் பெற்ற கூட்டமைப்பு இந்த ஆண்டை தீர்வுக்குரிய ஆண்டாக அறிவித்திருக்கிறது. விக்னேஸ்வரனும் அவரைப்போல சிந்திப்பவர்களும் மாற்றத்தின் வலுச்சமநிலையைக் குழப்பிவிடக்கூடாது என்ற கவலை மேற்கு நாடுகளுக்கும் உண்டு. இந்தியாவுக்கும் உண்டு. கூட்டமைப்பின் தலைமைப்பீடத்திற்கும் உண்டு. கடந்த சில தசாப்தங்களில் சிங்கள மக்கள் மத்தியில் எந்தவொரு தமிழ் தலைமையும் பெற்றிராத ஒரு மதிப்பை சம்பந்தர் பெற்றிருக்கிறார் என்று தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு தொழிற்சங்கவாதி கூறினார். இப்படியொரு மதிப்பைப் பெருக்குவதன் மூலம் தீர்வின் வழிகளை இலகுவாக்கிக்கொள்ளலாம் என்று சம்பந்தர் நம்பக்கூடும்.
கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது சம்பந்தரிடம் மிக உச்சமான பேரம் இருந்தது. அந்தப் பேரத்தைப் பயன்படுத்தி சிங்களத் தலைவர்களையும் மேற்கத்திய மற்றும் இந்தியத் தரப்புக்களையும் ஏதோ ஒரு தீர்வை நோக்கி வளைக்க முயன்றிருக்கலாம். ஆனால் சம்பந்தர் அந்தப் பேரத்தைப் பயன்படுத்தவில்லை. மகிந்தவைக் கவிழ்ப்பதற்கான முன்னோடிச் சந்திப்புக்களில் ஒன்றின் போது திருமதி. சந்திரிக்கா சம்பந்தரிடம் கேட்டாராம் “இதற்கு முன்பிருந்த எல்லா சிங்களத் தலைவர்களும் தாம் எழுதிய உடன்படிக்கைகளை பின்னாளில் தாங்களே கைவிட்டிருக்கும் ஒரு பின்னணியில் எழுதப்படாத ஓர் உடன்படிக்கைக்கு நீங்கள் தயாராகக் காணப்படுகிறீர்களே?” என்ற தொனிப்பட. அதற்கு சம்பந்தர் சொன்னாராம் “எவ்வளவு மையைக் கொட்டி உடன்படிக்கை செய்கிறோம் என்பதை விடவும் எவ்வளவு நம்பிக்கைகளை பரஸ்பரம் கொண்டிருக்கிறோம் என்பதே இங்கு முக்கியம்” என்ற தொனிப்பட. அத்தகைய நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் அவர் இந்த ஆண்டைத் தீர்வுக்குரிய ஆண்டாக அறிவித்தாரா?
நான்காவது சிங்களத் தலைவர்களின் தரப்பு. நேற்றுடன் நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டுவிட்டது. அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்படும் போது அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்படும் என்று தெரிகிறது. அதாவது ஏதோ ஒரு தீர்வை நோக்கி நிலைமைகள் நகரத் தொடங்கிவிட்டன. இந்த அடிப்படையில் கூறின் 1987 ஆம் ஆண்டைப்போலவே 2009 ஆம் ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு நிர்ணயகரமான ஆண்டாக அமையப்போகிறதா?
சரியாக ஓர் ஆண்டுக்கு முன் இதே காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலையொட்டி தமிழ்மக்களின் பேரம் பேசும் சக்தி ஒப்பீட்டளவில் உயர்வாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ ரணில் விக்ரமசிங்கவின் பேரம் பேசும் சக்தி ஒப்பீட்டளவில் உயர்வாகக் காணப்படுகிறது. ஆட்சி மாற்றத்தின் பின் இலங்கைத்தீவு அதன் அனைத்துலகக் கவர்ச்சியைப் படிப்படியாக மீளப்பெற்று வருகிறது. அரபு வசந்தங்களோடு ஒப்பிடுகையில் இலங்கைத்தீவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் போது ஒருதுளி இரத்;தம் கூடச் சிந்தப்படவில்லை. மிகவும் சுமூகமாக நிகழ்ந்த இந்த ஆட்சிமாற்றமானது இலங்கைத்தீவின் அனைத்துலகக் கவர்ச்சியை உயர்த்தியிருக்கிறது. சதிப்புரட்சிகள் எதுவுமின்றி சுமூகமாக ஆட்சிகள் கைமாறும் அளவிற்கு இலங்கைத்தீவின் ஜனநாயகப் பாரம்பரியம் இப்பொழுதும் பலமாக உள்ளது என்று மேற்கு நாடுகள் நம்பக்கூடிய விதத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.இது இச்சிறிய தீவின் கவர்ச்சியை கூட்டியி;;;ருக்கிறது. இச்சிறிய தீவை நோக்கி அதிகரித்த அளவிலும் குறுகியகால இடைவெளிக்குள்ளும் வந்துபோகும் இராஜதந்திரிகளின் தொகையும் அவர்களுடைய பதவி நிலைகளும் அதை நிரூபிப்பதாக உள்ளன. இவ்வாறு இலங்கைத்தீவின் கவர்ச்சி அதிகரிக்கிறது என்றால் புதிய அரசாங்கத்தின் கவர்ச்சி அதிகரிக்கின்றது என்றே பொருள்;. அதாவது ரணிலுக்கு மவுசு கூடுகிறது. எனவே அவருடைய பேரமும் அதிகரித்து வருகிறது. தன்னுடைய பேரம் அதிகரித்துவரும் ஒரு காலச்சூழலில் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை கண்டடைவதற்கு ரணில் முயற்சிப்பார்.
மாற்றத்தைப் பலப்படுத்துவதென்றால் ரணிலைப் பலப்படுத்த வேண்டும். அதற்காக மேற்கும், இந்தியாவும் ரணிலில் தங்கியிருக்க வேண்டும். இது அவருடைய பேரத்தை அதிகப்படுத்தும். தங்களுடைய பேரம் அதிகமாக இருக்கும் ஒரு காலகட்டத்தில் சிங்களத் தலைவர்கள் தமிழ்மக்களை நோக்கி இறங்கி வருவார்களா? அல்லது தமிழ் மக்களை தங்களை நோக்கி இறங்கிவரக் கேட்பார்களா?
சிங்கள மக்களுக்கு விருப்பமில்லாத ஒரு தீர்வை கொடுக்காமல் விடுவதற்குத் தேவையான பலம் ரணிலுக்குக் கைகூடி வருகிறது. ஒருபுறம் மாற்றத்தைப் பாதுகாப்பதற்காக ரணிலைப் பலப்படுத்தவேண்டிய தேவையில் இருக்கும் மேற்கு நாடுகளும் இந்தியாவும் தீர்வு விடயத்தில் அவர் மீது அதிகரித்த அழுத்தங்களைப் பிரயோகிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இன்னொருபுறம் இப்பொழும் ஒரு சவாலாகக் காணப்படும் மகிந்தவைக் காரணம் காட்டியே தீர்வின் பருமனையும் அடர்த்தியையும் குறைக்க அவரால் முடியும்.
ரணிலுடைய நோக்கு நிலையிலிருந்து சிந்தித்தால் அவருக்கு மைத்திரியும் தேவை. மகிந்தவும் தேவை. அவரைப் பொறுத்தவரை மகிந்த ஒரு தேவையான தீமை. மகிந்த தனது ஆட்சிக்குச் சவாலாக இல்லை என்று நம்பும் அளவிற்கு மகிந்தவை பலவீனப்படுத்தும் அதே சமயம் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தொடர்ந்தும் உடைத்து வைத்திருக்கும் அளவிற்கு பலத்தோடு இருப்பதை ரணில் விரும்புகிறார். எனவே மகிந்தவை வைத்து அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உடைந்த நிலையிலேயே பேண முடியும். அதேசமயம் மகிந்தவை ஒரு சாட்டாகக் காட்டி இனப்பிரச்சினைக்கான தீர்வின் உள்ளடக்கத்தைக் கோறையாக்கலாம். அதன் மூலம் சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்களைக் குறிப்பிடத்தக்க அளவு திருப்திப்படுத்தலாம். தான் கொடுக்க விரும்பாத ஒரு தீர்வை மகிந்தவைக் காரணமாகக் காட்டி பழியை மகிந்தவின் மீதே போட்டுவிட்டு தப்பிக்கொள்ள ரணில் முயற்சிப்பார்.
இப்படிப்பார்த்தால், தென்னிலங்கையில் மகிந்தவின் அரசியல் தொடர்ந்தும் தணிந்த சுவாலையாகப் பேணப்படுவதற்குரிய நிலைமைகளே அதிகம் தென்படுகின்றன. ஜே.வி.பியைச் சேர்ந்த ஒரு தமிழ் முக்கியஸ்தர் ஒருவரும் இதையொத்த கருத்தை நண்பர் ஒருவரோடு பகிர்ந்திருக்கிறார். “மைத்திரியும் சந்திரிகாவும் மகிந்தவை இயலுமானவரை தோற்கடிக்க விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர் மீள எழுந்தால் அவர்களே முதற்பலிகள். ஆனால் ரணிலோ மகிந்தவை ஒரு கட்டத்திற்கு மேல் பலவீனப்படுத்த விரும்பவில்லை…..”என்று. இது ஒரு விதத்தில் நன்றிக்கடனும் கூட. கடந்த காலங்களில் ரணிலினுடைய தலைமைக்கு எதிராக இரண்டாம் நிலைத் தலைவர்கள் சதி செய்ய முற்பட்டபோதெல்லாம் அத்தகவல்களை மகிந்த தனது ஒற்றர்கள் மூலம் அறிந்து ரணிலுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்திவிடுவார் என்று ஒரு கதை தென்னிலங்கையில் பிரதானிகள் மத்தியில் கூறப்படுவதுண்டு. அது ஒரு வர்க்க உறவு மட்டுமல்ல. அதற்குமப்பால் ரணிலின் தலைமையின் கீழ் யு.என்.பி ஆனது ஒரு பலமான எதிர்க்கட்சியாக மேலெழாது என்று மகிந்த நம்பினார். எனவே ரணிலைத் தொடர்ந்தும் யு.என்.பி.க்கு தலைவராக வைத்திருப்பதன் மூலம் ஒரு பலவீனமான யு.என்.பி. யை அரங்கில் பேண முடியும் என்று மகிந்த நம்பினார்.
அன்றைக்கு பலவீனமான ஒரு யு.என்.பி.யை தொடர்ந்தும் பேணும் பொருட்டு மகிந்த ரணிலைப் பாதுகாத்தார். அதைப்போலவே இப்பொழுது பலவீனமான ஒரு எஸ்.எல்.எவ்.பி. யைப் பேணுவதற்காக மகிந்தவை குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாதுகாக்க ரணில் முற்படக் கூடும்.
எனவே மேற்கண்டவைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியவரும். சரியாக ஒரு ஆண்டுக்கு முன் தமது பேரம்பேசும் சக்தி ஒப்பீட்டளவில் உயர்வாக இருந்த காலப்பகுதியில் தமிழ் தலைமைகள் தமது பேரத்தை கூட்ட முற்படவில்லை. ஆனால் இப்பொழுதோ சரியாக ஓர் ஆண்டிற்குப் பின் பேரம் தலைகீழாக மாறியிருக்கிறது. சிங்களத் தலைமைகளின் பேரம் ஒப்பீட்டளவில் அதிகரித்துவரும் ஓர் உலகச்சூழலில் தமிழ் மக்கள் கனவு காணும் ஓர் உச்சமான தீர்வைக் கண்டடைவதென்றால் ஏதாவது அதிசயங்கள், அற்புதங்கள் தான் நடக்கவேண்டும்.
-நிலாந்தன்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila