யுத்தத்தின் பின்னர் பொறுப்புக்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை (ஜனாதிபதி தெரிவிப்பு)


யுத்தத்தின் பின்னர் தமது பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றாமையே, இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டு வருவதற்கு காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னரான பொறுப்புக்கள் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பட்சத்தில், இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று கொண்டு வந்திருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தான் ஆட்சி பீடம் ஏறி ஒரு வருட காலப் பகுதிக்குள் பல சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதிபலனை மக்கள் விரைவில் உணர்ந்துக் கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தேசிய நல்லிணக்கம், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
தாய் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே தமது பொறுப்பு என கூறிய ஜனாதிபதி, அதற்கான உயிர் தியாகம் செய்யவும் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக தான் பணியாற்றவில்லை எனவும், நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்காகவே தான் பணியாற்றுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஒரு வருட காலப் பகுதியில் என்ன செய்தீர்கள், என்ன விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன என பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த வருடம் தேர்தலுக்கான வருடம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த காலப் பகுதியில் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டிருக்கும் எனவும் கூறினார்.
அத்துடன், அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இந்த தருணத்தில், தான் நாட்டிற்கு எதிராக செயற்படுவதாக சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தனக்கு பின்னர் தான் எவ்வாறு இருப்பது என்பதனை விடவும், நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும், நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்துவதற்காக தனக்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய ஒவ்வொரு தரப்பினரையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டி, தனது மனமார்ந்த நன்றியை இதன்போது தெரிவித்துக் கொண்டிருந்தார்.
இதேவேளை,  மைத்திரிபால சிறிசேன அமைச்சராக பதவி வகித்த காலப் பகுதியில் அவரை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிவராஜா ஜெனிவின் இன்று ஜனாதிபதி முன்னிலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் மேடைக்கு அழைத்து வரப்பட்டிருந்த சிவராஜா ஜெனிவினுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் சிநேகபூர்வமாக கலந்துரையாடி, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila