காலி கடற்படை முகாம் தாக்குதல் வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு!


காலி கடற்படை முகாம் தாக்குதல் வழக்கில் அரச தரப்பின் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை காலி மேல் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார். 2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி காலி தெற்கு கடற்படை முகாமை தாக்கி, கடற்படையைச் சேர்ந்த கனக சுரங்கவிற்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன், 22 பேருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி கொலை செய்வதற்கு முயற்சித்ததாக 23 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் காலி மேல் நீதிமன்றில் 2010ம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
காலி கடற்படை முகாம் தாக்குதல் வழக்கில் அரச தரப்பின் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை காலி மேல் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார். 2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி காலி தெற்கு கடற்படை முகாமை தாக்கி, கடற்படையைச் சேர்ந்த கனக சுரங்கவிற்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன், 22 பேருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி கொலை செய்வதற்கு முயற்சித்ததாக 23 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் காலி மேல் நீதிமன்றில் 2010ம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

உள்நாட்டு யுத்தத்தின் இறுதி காலகட்டமான 2009ல் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்ட கந்தையா இளங்கோ மற்றும் காலியை பிறப்பிடமாகக் கொண்ட நால்வருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிரிகளால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களும், 77 சாட்சிகளும், 27 தடயப்பொருட்களும் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் அரச தரப்பு சான்றாக பெயரிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2014ம் ஆண்டு முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பயங்கரவாத தடைப்பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு இந்த வழக்கின் முதலாம் எதிரியான கந்தையா இளங்கோவினால் சுயவிருப்பில் வழங்கப்பட்டதாக அரசதரப்பால் முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மைத்தன்மை தொடர்பிலான விசாரணையில் அரசதரப்பின் சாட்சியங்களும், எதிரி தரப்பு சாட்சியங்களும் விசாரித்து நிறைவடைந்தன.
இந்நிலையில், அரச சட்டத்தரணி தனது சமர்ப்பணத்தில் “முதலாம் எதிரியான கந்தையா இளங்கோ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர் என்பதுடன் தெல்லிப்பளையை பிறப்பிடமாகக் கொண்ட இந்த எதிரி புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்து புலித் தலைமையகத்தின் கட்டளையின் பிரகாரம் செயற்பட்டவராவார்.
மேலும் அரச படைகளுக்கு எதிராக யுத்தக்களத்தில் தாக்குதல்களை நடாத்திய போது கண்ணிவெடியில் சிக்கியே இந்த எதிரி ஒரு காலை இழந்துள்ளார். எதிரியின் உடலில் உள்ள காயங்கள் ஆயுதப் பயிற்சியினாலும், ஆயுதப் போராட்டத்திலும் ஏற்பட்ட காயங்கள் என்பதுடன் பொலிஸாரின் எந்த விதமான சித்திரவதையும், அச்சுறுத்தலும் இல்லாமல் சுய விருப்பத்திலேயே எதிரி குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டது.
எனினும், அரச சட்டத்தரணி முன்வைத்த சமர்பணத்திற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த முதலாம் எதிரியின் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தனது சமர்பணத்தில் “அரச சட்டத்தரணியின் சமர்ப்பணம் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ள முடியாததும் சட்டரீதியற்றதுமான வாதமாகும். இந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை முதலாம் எதிரியான கந்தையா இளங்கோவினால் உதவிப் பொலிஸ் அத்தயட்சகருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலம் சுயவிருப்பில் வழங்கப்பட்டதா? இல்லையா? என்பதை மட்டுமே தீர்மானிக்க நடைபெறும் விசாரணையாகும்.
இது பிரதான வழக்கு விசாரணையல்ல என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவருவதோடு, இந்த வழக்கின் முதலாம் எதிரி தனது சாட்சியத்தில் தான் சுய விருப்பத்தில் எந்த வாக்குமூலமும் பொலிஸாருக்கு வழங்கவில்லையெனவும், 2009ம் ஆண்டு பயங்கரவாத பொலிஸார் தன்னை பூசா முகாமிற்கு கொண்டு வந்து தடுத்து வைத்து விசாரணை நடத்தியபோது விசாரணையாளரான இம்தியாஸ் “தன்னிடம் அரசாங்கம் 12,000 போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கியுள்ளது.
உமக்கு ஒரு காலும் இல்லை. நீ உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் காண்பிக்கும் இடத்தில் கையெழுத்து வைத்தால் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் உனக்கு விடுதலை வாங்கித் தருவார். அல்லது புனர்வாழ்விற்கு அனுப்புவார்கள்” என தனக்கு வாக்குறுதி வழங்கியதால், தன்னை விடுதலை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கையெழுத்து வைக்கும்படி காட்டிய இடத்தில் கையெழுத்து வைத்ததாக சாட்சியமளித்துள்ளார்.
மேலும் எதிரி தனது சாட்சியத்தில் தனக்கு எவ்வாறு உடலில் காயங்கள் ஏற்பட்டன, எந்த சூழ்நிலையில் தனது காலை இழக்க நேரிட்டது என்பதை தனது சாட்சியத்தில் குறிப்பிடும் போது,“விமான குண்டுத் தாக்குதலிருந்து தப்பிக்க தானும், மக்களுடன் சிதறி ஓடியபோது தான் கண்ணிவெடியில் சிக்கி காலை இழந்ததுடன், உடலில் பல காயங்கள் ஏற்பட்டதாகவும், நூற்றக்கணக்கான பொது மக்களும் படு காயங்களுக்கு உள்ளானார்கள்” எனவும் கூறியுள்ளார்.
மேலும் எதிரியின் சாட்சியத்தினை குறுக்கு விசாரணை செய்த அரச சட்டத்தரணி,எதிரியை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர் என்பதை நிரூபிக்க முயற்சித்தாரே தவிர எதிரியால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயவிருப்பில் வழங்கப்பட்டதா? இல்லையா என்பதை மட்டுமே தீர்மானிக்க நடைபெறும் விசாரணையென்பதை கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் எதிரியால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயவிருப்பத்தில் வழங்கப்படவில்லை என்பதை சட்ட ரீதியாக எனது வாதத்தில் முன்வைத்துள்ளேன்”என தனது வாதத்தை சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா முன்வைத்தார்.
இதையடுத்து, இரு தரப்பினரதும் வாத பிரதிவாதங்களையடுத்து காலி மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன எதிரியின் சட்டத்தரணி கே.வி. தவராசாவின் சட்ட வாதத்தை ஏற்று அரச சான்றாக சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட எதிரியால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயவிருப்பில் வழங்கப்படவில்லையென அரச தரப்பு விண்ணப்பத்தை நிராகரித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் சிரேஸ்ட அரச சட்டத்தரணி மொகமட் பாரி முன்னிலையானதுடன், முதலாம் எதிரியின் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா முன்னிலையானார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila