கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சந்திப்பில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தார்.
அவரின் கருத்தை வழி மொழிந்ததாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானாவும், வடகிழக்கு இணைப்பிற்கு தயக்கமின்றி நாம் ஆதரவு வழங்குவோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
வடக்கு கிழக்குக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பல ஆண்டு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வினை வழங்க வேண்டும்.
அதனூடாக மீண்டுமொரு இனமோதல் நாட்டில் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு எம்மிடம் மாற்றுக் கருத்தில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனாலும் ஒரு சமூகத்தின் மீது இன்னுமொரு சமூகத்தின் மேலாதிக்கத்தை நிலை நாட்டும் வகையிலான வடக்கு கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் சமூகம் உடன்பாடில்லை என்பதை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி என்ற வகையில் பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களும் தமிழர் அரசியல் தலைமைகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பு வாதாடி வருகிறது.
அரசியல் தீர்வென்பது நிரந்தர தீர்வாக அமைய வேண்டும் என்றால் அது எல்லா சமூகத்தவர்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுக்கின்ற தீர்வாக அமையப் பெற வேண்டும்.
வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுகின்ற போது முஸ்லிம் சமூகம் தமிழர் சமூகத்தால் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக அடக்கி ஒடுக்கி ஆளப்படுகின்ற நிலை உருவாகுமென்பதில் எந்த ஜயமும் இல்லை.
வடக்கு கிழக்கு இணைக்கப்படாமல் பிரிந்திருக்கும் இன்றைய சூழ் நிலையிலும் கூட, வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் தமிழர்களால் அடக்கி ஒடுக்கி ஆளப்படுகிறார்கள்.
தமிழர் பகுதிகளுக்குள் முஸ்லிம்கள் தமது தேவைகளுக்காக காணிகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு காணிகளை கொள்வனவு செய்தாலும் அந்த காணிகளுக்குள் தமது வாழ்விடங்களை அமைத்து வாழ முடியாத, பயிர் செய்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழர் ஆளுகைக்குற்பட்ட சந்தைகளில் பல ஆண்டுகளாக தொழில் செய்து வந்த முஸ்லிம் வியாபாரிகள் தமிழர் தரப்பினரால் துரத்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தமிழர் பகுதிகளுக்குள் இருக்கின்ற தமது சொந்த நிலங்களுக்குள் கூட மீள் குடியேறி வாழ முடியாத நிலையில் உள்ளனர்.
அவ்வாறு மீள் குடியேற முனைந்தால் முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான அடக்கு முறைகளை முஸ்லிம் சமூகம் வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கும் நிலையிலேயே தமிழர் தரப்பிலிருந்து சந்தித்து வருகிறது.
ஒரு சமூகத்தை அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக அடக்கியாள முற்படுகின்ற சமூகத்துடன் தனது மேலாதிக்கத்தை இன்னுமொரு சமூகத்தின் மீது நிலை நிறுத்த முற்படுகின்ற சமூகத்துடன் எவ்வாறு முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்புடன் வாழ்வது என்பதை பிரதியமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களும் தமிழர் தலைமைகளும் மீண்டுமொரு முறை சிந்திக்க வேண்டும்.
வடக்கு கிழக்குக்கான அரசியல் தீர்வு தொடர்பிலான முன்னெடுப்புக்களும் பேச்சுக்களும் இடம்பெறுகின்ற நிலையில் முஸ்லிம் சமூகம் இவ்வாறான புல்லுருவிகளின் கருத்துக்களுக்கு பின் நிற்காமல் வடக்கு கிழக்கு பிரிந்திருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலும் முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு விடையங்களிலும் எமதுரிமைகளை பெற்றிட ஒன்றிணைந்து குரலெலுப்ப வேண்டுமென்பது எமது கோரிக்கையாக இருக்கிறது.