காட்டூன் – நன்றி தினக்குரல்
2016 பிறந்துவிட்டது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வாய்ப்பாட்டை இன்றும் கேட்க முடிகிறது.
நல்லாட்சி அரசு தங்களின் முதலாவது பதவிக் காலப் பூர்த்தியைக் கொண்டாடுகிறது. அதன் ஓர் அம்சமாக யாழ்ப்பாணத்தில் அரசாங்க முன்னெடுப்பில் பொங்கல் விழா நடத்தப்படுகிறது.
மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்தைப் பொறுத்தளவில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியே கொண்டாட்டங்களை நடத்துவது நன்றாகத் தெரிகிறது. இதன் பின்னணி என்னவென்பது புரியாத ஒன்றல்ல.
தமிழ் மக்களின் – அதிலும் யாழ்ப்பாணத்தாரின் மனங்களை வென்றுவிட்டால் பல பிரச்சனைகளுக்கு முடிவாகி விடுமென இவர்கள் நினைக்கிறார்கள்.
இந்தாண்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் திட்டத்தை நல்லாட்சி அரசு நிறைவுபடுத்த விரும்புகிறது. இதற்காக, தற்போதைய நாடாளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாக இயங்கவுள்ளது.
சிறிமாவோ பண்டாரநாயக்கா மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா காலங்களில் அரசியலமைப்புச் சபை இயங்கியது போலல்லாமல், வித்தியாசமானதாக இதனை அமைக்க அரசாங்கம் விரும்புகிறது.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளிலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவே இச்சபையின் இயங்குதளமாக அமையுமெனக் கூறப்படுகிறது.
ஆனாலும் இதுபற்றிய சரியான விளக்கம் எதனையும் இதுவரை அரச தரப்பு தெரியப்படுத்தவில்லை.
மகிந்த அணி என்று கூறப்படும் பல கட்சி உறுப்பினர்களைக் கொண்ட எதிரணி புதிய அரசியலமைப்புச் சபை உருவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
ஜி.எல்.பீரிஸ், விமல் வீரவன்ச, தினே~; குணவர்த்தன, உதய கம்மன்பில போன்ற சிங்கள கடும்போக்காளர்கள் புதிய அரசியல் அமைப்பு எவ்வாறானது என்று தெரியாமலே அதனை எதிர்த்து வருகின்றனர். புதிய அரசியல் அமைப்பில் வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைக்க வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குரல் கொடுத்துள்ளது.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் 1987ல் இணைக்கப்பட்ட இரண்டு மாகாணங்களுக்குமான ஒரு மாகாணசபை அப்போது உருவாக்கப்பட்டது. 1990 மார்ச் மாதம் அப்போது பிரதமராகவிருந்த ஆர்.பிரேமதாசா இந்திய இராணுவத்தை வெளியேற்றியதோடு இந்த மாகாணசபை ஆட்சியுரிமையை இழந்தது.
மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் ஜே.வி.பி. தாக்கல் செய்த வழக்கொன்றில் அன்றிருந்த பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா வழங்கிய தீர்ப்பானது, இணைந்திருந்த வடகிழக்கை பிரித்துவிட்டது.
நீதித்துறைக்குள் மகிந்தவின் அரசியல் வகித்த செல்வாக்கே இப்படியான தீர்ப்பை வழங்க வழிவகுத்ததென்பது வரலாறு. இப்போது மீண்டும் இரு மாகாணங்களையும் இணைக்க வேண்டுமென கூட்டமைப்பு கேட்கின்றது.
இது நடவாத காரியமென்று சிங்கள அமைச்சரொருவர் உடனடியாகவே பதிலளித்துவிட்டார். சிலசமயம் அரசாங்கம் இந்த இணைப்புக்கு ஆதரவாக இருந்தாலும் மகிந்த அணி மட்டுமன்றி, முஸ்லிம் காங்கிரசும் இறுதிவரை இதனை எதிர்த்தே தீரும்.
வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண நிர்வாகம் அமுலில் இருந்தவேளையிலேயே இதனை எதிர்த்தவர்கள் இவர்கள்.
உயர்நீதிமன்றத் தீர்ப்பு வடக்கையும் கிழக்கையும் பிரித்தபோது அதனை மனப்பூர்வமாக வரவேற்றவர்கள் இவர்கள்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறையுடன் இணைந்ததாக முஸ்லிம்களுக்கான தனிஅலகு நிர்வாகமொன்றைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்கள் இவர்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் சிங்கள அரசாங்கங்களுடன் சேர்ந்து இயங்க விரும்புமே தவிர, தமிழர்களுடன் அல்ல என்பதை தொடர்ந்து அவதானித்து வரலாம்.
2012ல் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலாம் இரண்டாம் இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் முறையே பதினொன்று மற்றும் ஏழு இடங்களை வென்றபோது இரண்டும் சேர்ந்து ஆட்சியமைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால் அதனை விரும்பாத முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சேர்ந்து ஆட்சியமைத்தது. இதனால் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகும் நிலையேற்பட்டது.
இத்தகைய பின்னணியைக் கொண்ட முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து இணக்கமான அரசியல் தீ;ர்வுக்கு வழி திறக்கலாமென்ற நம்பிக்கையில் கூட்டமைப்பு இப்போதும் இருக்கிறது.
இதன் அடிப்படையிலேயே சில நாட்களுக்கு முன்னர் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
‘பேச்சுவார்த்தை சுமுகமாக இடம்பெற்றது. தொடர்ந்தும் பேசுவோம்” என்று பொதுப்படையாக இரு தரப்பினரும் கூறினாலும், செயற்பாட்டில் அப்படியெதுவுமில்லை.
இணங்கிப் போவது போன்று முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பத்தில் சைகை காட்டினாலும், இறுதியில் ஏதாவதொரு பொறிவைத்து அதனை முஸ்லிம் காங்கிரஸ் உடைத்துவிடும்.
இவ்வேளையில் இலங்கையின் முன்னைய சமாதான முயற்சிகளின் பழைய கூட்டாளிகள் மீண்டும் அந்நாட்டுக்கான தங்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஒரு வருடத்துள் அமெரிக்க ராஜதந்திரிகள் அடிக்கடி அங்கு சென்று வந்தனர். கூட்டமைப்பினரையும் தவறாது இவர்கள் சந்தித்துப் பேசுவதுண்டு.
இந்தச் சந்திப்புகளும் பேச்சுவார்த்தைகளும் தமிழர் தரப்பை மென்போக்கில் நகரச் செய்வதற்கு உதவுகின்றனவே தவிர, அரசாங்கத்தை சரியான வழிக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிப்பதுபோலத் தெரியவில்லை.
ஒருகாலத்தில் சமாதானத் தூதுவராகவும், சமாதானப் புறாவாகவும் பார்க்கப்பட்ட நோர்வே மீண்டும் இலங்கைக்குள் பிரவேசம் செய்துள்ளது.
2005ல் மகிந்தவினால் ஒருதலைப்பட்சமாக முறிக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தையின் பின்னர் அந்தப் பக்கமே திரும்பியும் பார்க்காத நோர்வே மீது வைத்திருந்த நம்பிக்கையை தமிழ் மக்கள் முற்றாக இழந்துவிட்டனர். அமெரிக்காவின் ஷமறுமுகம்| அல்லது ஷமறைமுகம்| நோர்வே என்று அரசியல் வல்லாளர்கள் கூறுவதுண்டு.
அமெரிக்க அதிகாரிகளின் அடுத்தடுத்த பயணங்களின் பின்னர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் பேர்ச் பிரென்ட் அங்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரைச் சந்திப்பதற்கு முன்னர் கூட்டமைப்பின் சம்பந்தனை நோர்வே அமைச்சர் சந்தித்துப் பேசியுள்ளார். கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் அணுகுமுறையை நோர்வே வரவேற்பதாக அமைச்சர் கூறினாரென்று சம்பந்தன் வாய்மொழிந்துள்ளார்.
நோர்வே பார்க்கும் அந்த அணுகுமுறை மீண்டும் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதா அல்லது சரணாகதி அரசியலா என்பது காலம் வரும்போது தெரியவரும்.
ஒரு தசாப்தத்துக்கு முன்னர் தோல்வியைக் கையிலேந்தியவாறு ஓட்டம் பிடித்த நோர்வே பத்தாண்டுகளின் பின்னர் அமெரிக்கா திறந்துவிட்ட கதவு வழியாக பழைய உறவை மீண்டும் புதுப்பிக்க முயல்கிறது.
இந்தப் பாதையின் வழியாகத்தான் இந்தாண்டில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமென சம்பந்தன் நம்பிக்கை கொண்டுள்ளாரெனின், அவரது சோதிடமானது தோல்வி கண்ட சறுக்கல் குதிரையின் மீதான புதிய சவாரியாகவே அமையும்.