கெளரவர் தலைவர் துரியோதனன் பாண்டவர்களுக்குச் செய்த கெடுதிகள் ஏராளம். ஆட்சியைத் தனதாக்குவதற்காக பாண்டவர்களை வனம் ஏகச் செய்தான். எல்லாத் துன்பங்களையும் அனுபவித்த பாண்டவர்கள் யுத்தம் நடப்பதை ஒரு போதும் விரும்பிலர்.
யுத்தம் நடந்தால் மனித உயிர்கள் பலியாகும். பாவம் நடந்தேறும் என்பதாலேயே யுத்தத்தை வெறுத்தனர். இதன் காரணமாக பாண்டவர்கள் ஐந்து ஊர் தந்தால் போதும் என்று துரியோதனனிடம் கேட்டனர். அவன் மறுத்துரைத்தான்.
பரவாயில்லை! ஐந்து ஊர் தரத் தவறினும் ஐந்து வீடாவது தந்தால் அதுபோதும் என்று பாண்டவர்கள் கெஞ்சினர். ஐந்து வீடு அல்ல; ஐந்து சதமும் தர முடியாது என்று துரியோதனன் கூறிவிட, குரு சேத்திரத்தில் வலம்புரிச் சங்கின் நாதம் ஒலிக்கிறது.
தர்மத்தின் பிறப்பிற்கானதாக வலம்புரியின் ஒலி அமைந்தது. ஆக, ஐந்து வீடு தராததன் அடிப்படையில், போர் நடந்தது. கெளரவர் சேனை மாண்டது. பாண்டவர்கள் பாரதத்தை ஆண்டனர். ஆக, பாண்டவர்கள் விட்டுக் கொடுத்த பின்பு யுத்தம் நடத்தி தமது பிரச்சினைக்குத் தீர்வு கண்டனர்.
ஆனால் இலங்கையில் யுத்தம் முடிந்த பின்பு தான் தீர்வு பற்றியே சிந்திக்கப்படுகிறது. வெல்ல வேண்டியவர்கள் தோற்றதனால் வந்த வினை இது. இருந்தும் போருக்கு முன் விட்டுக் கொடுப்பது நியாயம். போர் முடிந்த பின்பு விட்டுக் கொடுப்பது நியாயமன்று.
பாண்டவர்கள் ஐந்து வீடு கேட்டனர் போரைத் தடுப்பதற்காக. தருமரிடம் அப்படியோரு அறம். இங்கோ யுத்தம் முடிந்து விட்டது. இழந்தவர்கள் தமிழ் மக்கள். குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் தமிழினத்தை கொன்றொழித்தவர்கள். இருந்தும் சர்வதேசத்தின் ஓரக்கண் பார்வை தமிழ் மக்களுக்கு இழப்பைத் தந்த தரப்பு சுதந்திரமாகத் திரிவதற்கு வழி வகுத்தது.
இத்தகைய நிலையில், இன அழிப்புப் போரில் உயிரிழப்புகளையும் சொத்தழிவுகளையும் சந்தித்த தமிழினம் எதைக் கொடுத்தாலும் வாங்கும் என்ற நிலைமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் ஒரு போதும் ஏற்படுத்தி விடக் கூடாது.
போரில் பாதிக்கப்பட்ட தரப்பிற்கே நீதி கிடைக்க வேண்டும். உரிமை கொடுக்கப்பட வேண்டும். எனினும் இரா.சம்பந்தரோ, போரில் வென்றவர் எதைத் தந்தாலும் வாங்குவதே தோற்றவனின் கடமை என்று நினைக்கின்றார் போலும்.
இதனால் சம்பந்தரை வைத்துக் கொண்டு சப்புச் சவலான தீர்வை வழங்கி விடுவதற்கு அரசு திட் டம் தீட்டுவது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.
வடக்குக் கிழக்கு இணைப்பும் இல்லை. சமஷ்டியும் இல்லை. காணி, பொலிஸ் அதிகாரம் இல்லை. கிராம இராச்சியம் தந்தாலே போதும் என்பதுதான் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் நிலைப்பாடாக இருந்தால், தமிழ் மக்கள் இதுவரை சந்திக்காத துரோகத்தனம் ஒன்றை விரைவில் சந்திக்கவுள்ளனர் என்ற எச்சரிக்கையை எவரும் துணிந்து கூறலாம்.
நாங்கள் தமிழர்கள்; இந்த மண்ணின் சொந்தக்காரர்கள்; இனத்தின் பெயரால் நாங்கள் அழிக்கப்பட்டவர்கள்; அடக்கப்பட்டவர்கள். இந்தக் கொடூரம் இனியும் தொடராமல் இருக்க வேண்டுமாக இருந்தால், தனிநாடு என்பதைத் தவிர மற்று எதையும் வழங்குவதற்கு அரசு தயாராக இருக்க வேண்டும் என்பதுடன் அதை வலியுறுத்த தமிழ்த் தரப்பு இம்மியும் தவறி விடக்கூடாது.