
ஆயுத மோதல்களின்போது பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நீதி வழங்கப்படுவதற்குரிய நடவடிக்கைகள் இந்தக் காலத்தில் வழங்கப்பட வேண்டும். அத்துடன், அத்தகைய பாதிப்புக்கள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்ற உத்தரவாதம் நடைமுறையில் கைக்கொள்ளப்பட வேண்டும்.
அத்தகைய உத்தரவாதமானது, நிரந்தரமானதோர் அரசியல் தீர்வாக அமைய வேண்டும் என்பது நீதிக்கான நிலைமாற்றுக் காலத்தின் முக்கிய குறிக்கோள், அதி முக்கிய எதிர்பார்ப்பாகும்.
அரசியல் முரண்பாட்டின் விளைவாக எழுந்த ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்ததன் பின்னர், நாட்டில் நிலையான அமைதியை நிலைநாட்ட வேண்டிய தேவை, மோதல்களில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினருக்கும் தவிர்க்க முடியாததாகியிருக்கின்றது.
இந்த நிலையான அமைதியானது, உண்மை, நீதி, நிவாரணம், மீள்நிகழாமை என்ற நான்கு தூண்களில் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பது இராஜதந்திரிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் முடிவாகும்.
மோதல்களின்போது அல்லது மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் உண்மையாகவே என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும். அந்த உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும். நிலை குலைந்து போயுள்ள பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்குரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இத்தகைய பாதிப்புக்கள் மீண்டும் நிகழாமல் உறுதி செய்யப்பட வேண்டும் என்று, நிரந்தரமானதோர் அமைதிக்கான நான்கு தூண்களின் செயற்பாடாக நிரந்தர அமைதி சமாதானத்திற்கான நிபுணர்கள், செயற்பாட்டாளர்களினால் வரையறுக்கப்பட்டிருக்கின்றது.
இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால் - ஆயுத மோதல்களின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவை தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு நியாயமான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அந்த விசாரணை வெளிப்பாடுகளின் அடிப்படையில் நிரந்தரமான அமைதியை நிலைநாட்டும் வகையில் ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இந்தப் பொறுப்பினை அரசாங்கம் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் - என குறிப்பிடலாம்.
யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்தபின்னர், கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த விடயங்கள் பல்வேறு வழிகளில் பலப்பல விதங்களில் பேசப்பட்டிருக்கின்றன. விவாதிக்கப்பட்டிருக்கின்றன. உள்ளூரிலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை மையப்படுத்தி சர்வதேச மட்டத்திலும் பல தரப்பினராலும் கலந்துரையாடப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற இந்த நடவடிக்கைகளின் ஒரு முக்கியமான கட்டமாக எதிர்வரும் ஜுன் மாதத்தில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு கருதப்படுகின்றது.
இதனையொட்டி, நாட்டில் நிரந்தர அமைதியை உருவாக்கும் நோக்கில், முதற்படியாக காணாமல் போனோருக்கான நிரந்தர செயலகம் ஒன்றை அமைப்பதற்குரிய சட்ட வரைபை அமைச்சரவை அங்கீகரித்திருக்கின்றது.
நீதிக்கான நிலைமாற்றத்தின் நம்பிக்கைக்குரிய பொறிமுறையின் முதற்கட்ட நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. இது, மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறும் செயற்பாட்டின் உறுதியானதொரு நடவடிக்கையாகும் என்றும் அரசாங்கம் குறித்து காட்டியிருக்கின்றது.
காணாமல் போனோருக்கான நிரந்தர செயலகம்
காணாமல் போனோருக்கான அலுவலகம் எத்தகையதாக அமைந்திருக்கும் என்பது குறித்து அரசாங்கம் விபரங்களை வெளியிட்டிருக்கின்றது. காணாமற்போன ஆட்கள் அலுவலகம் என்ற சொற்பதத்தினால் காணாமல் போனோருக்கான அலுவலகத்தைக் குறித்துக் காட்டியுள்ள அரசாங்கம் அது ஒரு நீதித்துறை பொறிமுறையல்ல என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. ஆயினும், இந்த அலுவலகத்தின் நடவடிக்கைகளின் மூலம் வெளிப்படுகின்ற நிலைமைகளானவை மற்றொரு பொறிமுறையால் கவனிக்கப்படும் என்று கூறியிருக்கின்றது.
'எவ்வாறாயினும் காணாமல்போன ஆட்களுக்கான அலுவலகமானது, நீதிக்கான பாதிக்கப்பட்டவரின் உரிமையில் எவ்வழியிலும் தடங்கலாக இருக்கமாட்டாது. காணாமல்போன ஆட்களுக்கான அலுவலகத்திற்கு முன்னே தோன்றும் எல்லா பாதிக்கப்பட்டவர்களும், ஒரு வழக்குத்தொடுக்கும் அதிகாரசபையின் முன்னே தோன்றி நீதியை நாடுவதற்கான, அவர்களது பாராதீனப்படுத்த முடியாத உரிமை குறித்து அவர்களுக்கு அறிவிக்கப்படும்.
'பாதிக்கப்பட்டவரின் அறிவதற்கான உரிமைக்காக காணாமல்போன ஆட்களுக்கான அலுவலகம் செயற்படும் என்பதுடன், ஒரு நீதிமன்றத்தைப் போன்று குற்றத்தை நிரூபிப்பதை நோக்கி விசாரணைகளில் கவனம் செலுத்தப்படமாட்டாது. காணாமல்போன ஆளின் கதியைக் கண்டுகொள்வதன் மீதே கவனம் செலுத்தப்படும். பயனுள்ள தகவல்களை வெளிப்படுத்தும் நம்பிக்கையில், காணாமல் போனோருக்கான அலுவலகத்திற்கு வெளிப்படுத்தப்படும் இரகசியங்களுக்கான பாதுகாப்பை இந்த அணுகுமுறை உத்தரவாதப்படுத்துகின்றது.'
கிட்டத்தட்ட காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஒத்ததாகவே காணாமற் போனோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகளும் அமைந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகின்றது. ஆனால், அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் இருந்து இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் வேறுபட்டிருக்கும் என்று அரசாங்கம் உறுதியாகக் கூறுகின்றது.
'ஒரு சந்தேகத்திற்குரிய குற்றச்செயல் இருக்குமாயின், காணாமல்போனோருக்கான அலுவலகமானது, உரிய குற்றவியல் விசாரணையை மேற்கொள்ளும். உரிய அதிகாரசபைக்கு, காணாமற்போன ஆளின் சிவில் நிலைத் தகவல்களை அறிவிக்கும். சாட்சிகளின் சாட்சியங்களும் அவர்களின் இணக்கத்துடன் உரிய அதிகார சபைக்கு அனுப்பப்படும்.
ஒரு சவக்குழி மீதான அகழ்வை மேற்கொள்வதற்கு உரிய நீதிவானால் வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அல்லது ஒரு சட்ட அமுலாக்கல் அதிகார சபையால் ஒரு தேடுதலை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால், இந்த மேலதிக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களானவை வழக்குத் தொடுக்கும் அதிகார சபையினாலும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்' என்றும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஒரு சவக்குழி மீதான அகழ்வை மேற்கொள்வதற்கு உரிய நீதிவானால் வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அல்லது ஒரு சட்ட அமுலாக்கல் அதிகார சபையால் ஒரு தேடுதலை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால், இந்த மேலதிக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களானவை வழக்குத் தொடுக்கும் அதிகார சபையினாலும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்' என்றும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நாட்டின் நிரந்தர அமைதிக்கான நான்கு அம்ச செயற்பாடுகளில் ஒன்றாகிய காணாமல் போனோருக்கான அலுவலகத்தை நிறுவும் நடவடிக்கையை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் ஜுன் மாத அமர்வுகளைக் கவனத்திற் கொண்டே மேற்கொண்டிருக்கின்றது என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறுகின்ற செயற்பாட்டை உளப்பூர்வமாகச் செயற்படுத்துவதாக இருந்தால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அளித்த உறுதிமொழிக்கு அமைவான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாகவே தொடங்கிச் செயற்படுத்தியிருக்க வேண்டும்.
மே மாதத்தின் இறுதியில் ஜுன் மாதம் பிறப்பதற்கு சில நாட்களே உள்ள நிலைமையிலேயே அரசாங்கம் காணாமல் போனோருக்கான அலுவலகத்தை அமைப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றது. இந்த அங்கீகாரத்தைத் தொடர்ந்து காணாமல் போனோருக்கான அலுவலகத்தை நிறுவுவதற்குரிய சரியான இறுதி சட்ட வரைபு எப்போது தயாராகும், அது எப்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்படும் என்பது தெளிவற்றதாகக் காணப்படுகின்றது.
மே மாதத்தின் இறுதியில் ஜுன் மாதம் பிறப்பதற்கு சில நாட்களே உள்ள நிலைமையிலேயே அரசாங்கம் காணாமல் போனோருக்கான அலுவலகத்தை அமைப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றது. இந்த அங்கீகாரத்தைத் தொடர்ந்து காணாமல் போனோருக்கான அலுவலகத்தை நிறுவுவதற்குரிய சரியான இறுதி சட்ட வரைபு எப்போது தயாராகும், அது எப்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்படும் என்பது தெளிவற்றதாகக் காணப்படுகின்றது.
மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதற்காக விசாரணை பொறிமுறையொன்றை நிறுவுவதில் அரசாங்கம் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாக சர்வதேசத்திற்குக் காட்டுவதற்கான ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகவே இதனை நோக்க வேண்டியிருக்கின்றது. பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். உண்மையான நிரந்தர அமைதியை நோக்கிய உளப்பூர்வமான செயற்பாடாக இதனை நோக்க முடியவில்லை.
தமிழ் அரசியல் தரப்பின் செயற்பாடுகள்
யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களாகின்றன. ஆயினும் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டு இடம்யெர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் உள்ள சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. அதேநேரம் தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி, யுத்தமோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் பொதுமக்களின் காணிகளை, முப்படையினரின் தேவைகளுக்காக அபகரிக்கும் நடவடிக்கைகள் தடங்கலின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து அவர்களை மீள்குடியேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் ஆமை வேகத்திலேயே இடம்பெற்று வருகின்றன. அதனைத் துரிதப்படுத்துவதில் அரசாங்கம் ஏனோதானோ என்ற போக்கிலேயே செயற்பட்டு வருகின்றது.
ஏற்கனவே படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து அவர்களை மீள்குடியேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் ஆமை வேகத்திலேயே இடம்பெற்று வருகின்றன. அதனைத் துரிதப்படுத்துவதில் அரசாங்கம் ஏனோதானோ என்ற போக்கிலேயே செயற்பட்டு வருகின்றது.
பொறுப்பு கூறும் விடயத்தில் கவனம் செலுத்தி அரசாங்கம் தனக்கு இசைவான முறையிலேயே, நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதேநேரம், சர்வதேசத்திற்கு முன்னேற்றகரமான செயற்பாடுகளில் தான் ஈடுபட்டிருப்பதாகக் காட்டிக்கொள்வதிலும் சாதுரியமான நகர்வுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இந்தச் சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளான தமிழ் அரசியல் தரப்பினரின் செயற்பாடுகள் திருப்தியளிக்கத்தக்க வகையில் காணப்படவில்லை என்றே பாதிக்கப்பட்ட தரப்பினர் கருதுகின்றனர்.
சர்வதேச விசாரணை பொறிமுறையே வேண்டும் என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மிகவும் உறுதியாகச் செயற்பட்டிருந்தது. கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த அரசியல் உறுதி நிலைமை வைரம் பாய்ந்ததாகக் காணப்பட்டது என்றே கூற வேண்டும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இது விடயத்தில் மிகவும் இறுக்கமான கொள்கைப் பிடிப்போடு செயற்பட்டிருந்தார். அதற்காக அவர் உறுதியாகக் குரல் கொடுத்து வந்திருந்தார்.
ஆயினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர், சர்வதேச விசாரணையே தேவை என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுதி நிலை நீரில் நனைந்த களிமண்ணாகத் தளர்ந்து போயுள்ளது. சர்வதேச விசாரணை அவசியமில்லை. உள்ளக விசாரணையே நடத்தப்படும் என்று நல்லாட்சிக்கான புதிய அரசாங்கம் எடுத்த நிலைப்பாட்டை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுவிட்டது.
சர்வதேச விசாரணையை வலியுறுத்திய சர்வதேசமும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையும் அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு இணக்கம் தெரிவித்திருந்தமை வேறு விடயம். ஆயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இறுக்கமாகச் செயற்பட்டிருக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தாகும்.
சர்வதேச விசாரணையை வலியுறுத்திய சர்வதேசமும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையும் அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு இணக்கம் தெரிவித்திருந்தமை வேறு விடயம். ஆயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இறுக்கமாகச் செயற்பட்டிருக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தாகும்.
அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு பச்சைக் கொடி காட்டிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, கலப்புப் பொறிமுறை அவசியம் என்பதை வலியுறுத்தியிருந்தது. அதனை ஏற்பதிலும் அரசாங்கம் பின்னடித்தபோது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கே ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தது. அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து நியாயப்படுத்தும் போக்கையே அது கைக்கொண்டிருந்தது.
புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இருப்பது வேறு. பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகச் செயற்படுவது வேறு. தாயும் பிள்ளையானாலும்கூட, வாயும் வயிறும் வேறல்லவா? தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீதான அதீத நம்பிக்கை வைத்துச் செயற்படுவதாக தமிழ் மக்கள் எண்ணத் தொடங்கியிருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்காகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்புச் செயற்படுகின்றது. பாடுபடுகின்றது என்பதெல்லாம் சரி. ஆனால் அவ்வாறு அது செயற்படுகின்றது என்பது மக்களுக்குத் தெரியவேண்டும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அவ்வாறே செயற்படுகின்றது என்பதை அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் நடக்க வேண்டியது அவசியமாகும்.
பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்பு
நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் அனைத்திலும் பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி பங்களிப்பு இருப்பது அவசியம். விசாரணைப் பொறிமுறையோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அந்தக் கட்டமைப்பை உருவாக்கும்போது பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் மற்றும் எண்ணங்கள் உள்வாங்கப்படுவது அவசியம் என்று சர்வதேசம் வலியுறுத்துகின்றது. காணாமல்போனோருக்கான அலுவலகத்தை உருவாக்கும் விடயம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி இத்தகைய கருத்து உள்வாங்கலுக்கான சந்திப்பு ஒன்று வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.
காணாமல் போனோரின் உறவினர்களான 65 பேர் வரையில் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி, கொழும்பு மற்றும் தென்பகுதியைச் சேர்ந்தவர்களான படைவீரர்களின் குடும்பத்தினரும் இதில் இடம்பெற்றிருந்தனர். காணாமல்போனோருக்கான அலுவலகத்தை உருவாக்கும் விடயத்தில் அப்போது அவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.
அரசாங்கம் அமைக்கவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகத்தை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கத் தரப்பில் வெளியிடப்பட்டிருந்த உத்தேச ஆலோசனைகளில் பலவற்றில் அவர்கள் திருத்தம் வேண்டும் என்று கோரியிருந்தனர். சிவில் அமைப்பினருடைய முன் முயற்சியிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
ஆனால் அரசியல் மட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் தமிழ் அரசியல் பிரதிநிதிகளினால் வெளிவிவகார அமைச்சிடம் காணாமல்போனோருக்கான அலுவலகத்தை உருவாக்கும் விடயத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. அரசியல் தலைவர்களின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் அல்லது அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அரச தரப்பினரைச் சந்தித்து நேரடியாகத் தங்களுடைய கருத்துக்களை முன்வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களினால் வெளிவிவகார அமைச்சு சந்திப்பில் நேரடியாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் உத்தேச திட்ட ஆலோசனைகளில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனவா என்பது தெரியாமல், அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த சிவில் அமைப்பினரும், காணாமல் போனோரின் உறவினர்களும் கவலையடைந்திருக்கின்றனர். அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகப் பொறிமுறைக்கான வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்ன என்பது பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் காணாமல் போனோரின் உறவினர்களும், அவர்களுடைய பங்களிப்புக்காகச் செயற்பட்டிருந்த சிவில் அமைப்பினரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்படைந்திருக்கின்றனர். இந்த விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நேரடியாகப் பங்கேற்றிருந்தால், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை அந்த வரைபில் உள்ளடக்குவதற்கு வசதியாக இருந்திருக்கும் என்ற கருத்தும் நிலவுகின்றது.
மொத்தத்தில் காலம் கரைந்து கொண்டிருக்கின்றது. நீதிக்கான நிலைமாற்றுக் காலத்தின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டியதுடன், நிலைமாற்றுக் காலத்தின் பலாபலன்களை உச்ச அளவில் பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்வதற்குரிய முயற்சிகள் முழு வேகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமும் நேர்ந்திருக்கின்றது.
அதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் 2016 ஆம் ஆண்டு அரசியல் தீர்வு எட்டப்படும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ள நிலையில் (அது அவருடைய கணிப்பாகவும் இருக்கலாம்) அந்த எதிர்பார்ப்பை சீராக நிறைவேறுவதற்குரிய செயற்பாடுகளில் சிவில் அமைப்புக்களானாலும் சரி எந்த பொது அமைப்புக்களானாலும் சரி அவற்றுடன் நெருங்கிக்கை கோர்த்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அர்த்தமுள்ள வகையில் செயற்பட வேண்டும். இது காலத்தின் தேவையாகும். காலம் கடந்த பின்னர் கவலைப்பட நேரிடலாம். எனவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வது நல்லதல்லவா?