கன்மவினை பற்றி சைவ சித்தாந்தம் மிகத் தெளிவாகப் போதிக்கின்றது. இந்த உலகில் இடம்பெறும் அனைத்து வினைப்பயன்களுக்கும் கன்மாவே காரணம் என்பது சைவ சித்தாந்தத்தின் தத்துவம்.
இங்குதான் தன்னை அறிதல் என்ற விடயம் முக்கியம் பெறுகிறது. உன்னையே நீ அறிவாய் என்ற சோக்கிரட்டிஸின் தத்துவமும் இதன் வழி வந்தவைதான். ஆக, முதலில் தன்னை அறிதல் என்பது மிகவும் முக்கியமான விடயம். தன்னை அறியும் போதே தான் செய்தவை பற்றிய எண்ணங்கள் மீள்சிந்தனைக்கு ஆட்படும். இல்லையேல் செய்தவை எல்லாம் சரி என்றான ஒரு நிலைமை ஏற்படும்.
செய்தது எல்லாம் சரி என்ற நினைப்பு மனதில் ஏற்பட்டு விட்டால், பரிகாரம் காணுதல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும். எனவேதான் தலைவனாகிய இறைவனை அடைவதற்கு தன்னை அறிதல் அவசியம் என்று உணரப்படுகிறது.
எனினும் பலர் தான் செய்தவை அனைத்தும் சரியானவை என்று நினைத்துக் கொள்கின்றனர். இவர்கள் கன்மவினை பற்றி அறியாதவர்களாக இருப்பார்கள் என்றே பொருள்கொள்ள வேண்டும்.
சைவ சித்தாந்தம் கூறும் கன்மவினை பற்றி எல்லோரும் அறிந்து கொள்வதும் விளங்கிக் கொள்வதும் கடினம் என்பதால் பாவ, புண்ணியம் என்றவாறாக கன்மவினை விளக்கப்படுகிறது.
ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்வில் பாவம், புண்ணியம் என்ற இரு விடயங்களைத் தெரிந்து கொண்டு தனது செயற்பாடுகள் இந்த இரண்டுக் குள்ளும் எந்த வகைக்குள் இடம்பெறக்கூடியது என்பதை தன் புத்தியால் அறிந்து செயற்படுவானாயின் அவன் கன்மவினையில் இருந்து விடுபட முடியும்.
எனினும் அதிகாரம், பதவி, அறிவுச் செருக்கு, பணம் என்பன வந்து விட்டால் எல்லாவற்றையும் மறைத்து விடுகின்ற நிலைகளும் உண்டு.
இங்குதான் அதிகாரத்தில் இருந்தவர்கள், மக்களை வதைத்தவர்கள், மனித உயிர்களைக் கொன் றொழித்தவர்கள், அத்தகைய செயல்களுக்கு காரணமாக இருந்தவர்கள், இவர்கள் தங்கள் வாழ் நாளின் அந்திமப் பகுதியில் தாங்கள் செய்தவை அநியாயமானவை என்பதை உணர்ந்துள்ளனர். எனினும் கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பதாக அவர்களின் நிலைமை அமைந்து விடுகிறது.
நவாலியில் சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது நடந்த விமானக்குண்டுத் தாக்குதலில் போது அப்பாவிப் பொதுமக்கள் இறந்த செய்தி அறிந்து தான் அழுது குளறியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
இங்குதான் கன்மவினையின் அனுபவிப்பு உணரப்படுகிறது. நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானக்குண்டுத் தாக்குதல் நடந்தபோது, திருமதி சந்திரிகா குமாரதுங்கவே ஜனாதிபதியாக இருந்தார்.
சென்.பீற்றர்ஸ் தேவாலயம் மீது குண்டுத் தாக்குதல் நடந்த அன்றைய தினமே சந்திரிகா அம்மையார் மன்னிப்புக் கேட்டிருந்தால் அதன் நிலைமை வேறுவிதமாக கருதப்படும். ஆனால் இருபது வரு டங்களுக்குப் பின்னர் பதவியில் இல்லாதபோது நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது நடந்த தாக்குதல் அறிந்து அழுது துடித்தேன் என்பதை சொல்வதற்குள் கன்ம வினையின் அறுவடை ஆரம்பமாகியுள்ளது என்பது தெரிகிறது.
பரவாயில்லை, இப்போதாவது சந்திரிகா அம்மையார் தான் அனுபவிக்கும் வலியை வெளிப்படுத் தியிருந்தார். இன்னமும் சிலர் இன அழிப்பைச் செய்து விட்டு நெஞ்சை நிமிர்த்துகின்றனர். என்றோ ஒரு நாள் இவர்கள் தாம் செய்த கர்மவினையை அனு பவிப்பர். அப்போது இந்த மண்ணில் வீழ்ந்து அழுவர்; அழுந்துவார். இதுவே கன்மாவின் தத்துவம்.