புலம்பெயர் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அழுத்தம் தேவை


இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியல் அமை ப்புச் சீர்திருத்தம் என்ற விடயங்கள் இந்த ஆண்டின் பேசுபடு பொருளாகியுள்ளன. 
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்ற அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக உலக நாடுகள் இலங்கை அரசுக்கு சில கட்டாய அறிவுரைகளை வழங்கியுள்ளன.
இவற்றை நிறைவேற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு இலங்கை அரசுக்கு உண்டு. இதில் ஒன்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற விடயமாகும். 

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத்தவறி னால், அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரில் உலக நாடுகளைச் சமாளிப்பது முடியாத காரியம் என்ற அடிப்படையில், எப்பாடுபட்டாகிலும் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாக வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. 
இதன் காரணமாக 2016ஆம் ஆண்டில் ஏதோ ஒருவகையில் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாகுதல் என்ற விடயம் முன்னெடுக்கப்படுகிறது.

இதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை தீர்மானிக்கின்ற தமிழ் சக்திகளை தம் வசப்படுத்துவதில் அரசின் இராஜதந்திரம் கடுமையாக வேலை செய்யத் தலைப்பட்டுள்ளது.
அதாவது தமிழ் அரசியல் தலைமையை தம் வசப்படுத்தினால் எல்லாம் சரியாகி விடும் என்ற நினைப்போடு இலங்கை அரசின் காய்நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இக் காய்நகர்த்தலில் எங்கள் அரசியல் தலைமையைச் சேர்ந்த சிலர் சிக்குண்டுவிட்டனர் என்பதை இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும். தமிழ் அரசியல் தலைமையை தம்வசம் வளைத்துப்போட்டு, தருவதை வாங்குங்கள் என்று சொல்வதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

அரசின் இந்த ஏற்பாட்டை உடைக்கின்ற ஒரு சக்தியாக தமிழ் மக்கள் பேரவை உதயமாகியது.  தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு இப்படியாகத் தான் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவதற்கு தமிழர் தரப்பில் எவரும் இல்லை என்ற கட்டத்தில் தமிழ் மக்கள் பேரவையின் உதயம் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தவுள்ளதென்பதை அண்மைக் கால நிகழ்வுகள் உறுதிசெய்துள்ளன.

யுத்தத்தால் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள், சொத்தழிவுகள், இடப்பெயர்வுகள் என்ற மிகப் பெரியதொரு துன்பப்பட்டியல் எங்கள் கண்முன் இருக்கின்றபோது, எந்தத் தமிழ் அரசியல் தலைமையும் தன்னிச்சையாகச் செயற்பட முடியாது.

எனவே அனைத்துத் தமிழ்த் தரப்பும் ஒன்று பட் டுச் செயற்பட வேண்டும் என்பது இங்கு முக்கியமானது. இவ்விடத்தில்தான் எங்கள் புலம்பெயர் உறவுகளின் ஒன்றுபட்ட குரல் தேவைப்படுகிறது. 
வன்னிப்பெரு நிலப்பரப்பில் தமிழ் மக்களுக்கு நடந்த பேரழிவுகளை வெளிப்படுத்தி சர்வதேசத்தின் பார்வையை இலங்கை மீது திசை திருப்பியவர்கள் எங்கள் புலம்பெயர் உறவுகள். 

எனவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதற்கான ஆயத்தங்கள் நடக்கின்ற இவ்வேளையில், எங்கள் புலம்பெயர் உறவுகள் உலக நாடுகள் மூலமாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்ப தையும் தமிழினம் ஒன்றுபட்டு தமது உரிமையைக் கேட்பதற்கு வலியுறுத்தவும் முன்வர வேண்டும்.  இது காலத்தின் கட்டாய தேவை.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila