
இலங்கை அரசியல் வரலாற்றில் மூன்றாவது முறையாக முக்கியத்துவமிகுந்த அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கம் வெளிப்படையாகவே முயற்சிக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்பானது, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்வதும், நாடாளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக வலிமை சேர்ப்பதும், தேசிய பிரச்சனைக்கு தீர்வைக் காண்பதுமாகும் என்று கூறியிருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒருமித்த மனதோடு புதிய அரசியலமைப்பை கொண்டுவர விரும்புகின்றார்கள். அதற்கு அனைத்துக் கட்சிகளையும், பொது அமைப்புக்களையும் பங்களிப்புச் செய்து உதவுமாறு பகிரங்க கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். அரசின் இந்த முயற்சியானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானத்தை காலம் தாழ்த்தும் ஒரு தந்திரோபாயமாக இலங்கை அரசாங்கம் பயன்படுத்தவே முயற்சிக்கின்றது என்றும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு தீர்வொன்றை வழங்குவதை இழுத்தடிப்புச் செய்வதற்கே என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. மறுபக்கத்தில் கடும்போக்கு சிங்கள அமைப்புக்களோ, புதிய அரசியலமைப்பானது தேவையற்றது என்றும், இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு என்பதை அரசியல் ரீதியாக மாற்றியமைக்க இடமளிக்க முடியாது என்றும் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கியிருக்கின்றார்கள். ஆளும் அரசின் பிரதான பங்காளியாக இருக்கும் சுதந்திரக் கட்சியோ, புதிய அரசியலமைப்பானது வடக்கு கிழக்கு மாகாணங்களை அரசியல் ரீதியாக இணைப்பதாகவோ, ஒற்றையாட்சியை மறுக்காததும், பௌத்த சிங்களக் கொள்கைகளை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் கூறியிருக்கின்றது. புதிய அரசியலமைப்பு தொடர்பாக சுதந்திரக்கட்சியின் முழுமையான ஒப்புதலை அக்கட்சியின் தலைவர் என்றவகையில் ஜனாதிபதி முழுமையாக பெற்றுக் கொள்ளவில்லை என்பதையும் அறியமுடிகின்றது. இதற்கிடையே மகிந்தவின் ஆதரவாளர்களான ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் இனவாதக் கண்ணோட்டத்துடனான வழமையான பிரசாரங்களை செய்துவருகின்றனர். இதற்கிடையே ‘ நாங்கள் சிங்கத்தின் இரத்தம்’ என்று அர்த்தப்படுத்தும் வாசகமான ‘சிங்க லே’ பிரசாரங்களும் தொடர்கின்றன. இவற்றையெல்லாம் தவிர்த்து அரசாங்கம் கொண்டுவரப்போவதாக அறிவித்திருக்கும் புதிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் வார்த்தைப் பிரயோகங்களை கூர்ந்து ஆராய வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரங்களை இல்லாமல் செய்வது, நாடாளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றியமைப்பது, தேசிய பிரச்சனைக்கு தீர்வைக் காண்பது என்றே கூறியிருக்கின்றார்கள். இதில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை முதல் இரண்டு விடயங்களும் முக்கியத்துவமற்றதாகும், தேசிய பிரச்சனைக்கு தீர்வைக்காண்பதாகும் என்று கூறப்பட்டிருப்பதே எமது அக்கறைக்குரியதாகவுள்ளது. தேசிய பிரச்சனைக்கு தீர்வு என்பதை அரசாங்கம் ‘தேசிய இனப்பிரச்சனைக்கு’ என்று கூறியிருக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிடாமல் இருப்பதற்கு பல காரணங்களை அரசாங்கம் கூறலாம். இனப்பிரச்சனைக்கு தீர்வு என்றால் சிங்கள மக்கள் கொதிப்படைந்து விடுவார்கள் என்பதாலா அப்படி குறிப்பிடவில்லை. அல்லது தேசிய பிரச்சனை எனும்போது இனப்பிரச்சனை மட்டும்தானா என்பதை தெளிவு படுத்த அரசு அஞ்சுகின்றதா என்ற கேள்வியும் இருக்கவே செய்கின்றது. இதை ஒரு சர்ச்சையாக பார்க்காமல் தமிழ் மக்கள் நிதானமாக ஆராய்வதாக இருந்தால் தேசிய பிரச்சனை என்பதை, தேசிய இனப்பிரச்சனை என்று அர்த்தப்படுத்திக் கொண்டு அது தொடர்பான எமது நிலைப்பாட்டை அரசுக்கு முன்வைக்க வேண்டும். இவ்விடயத்திலாவது அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொது இணக்கத்திற்கு வரவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையின் நியாயத்தையும், அதன் உள்ளடக்கத்தையும் தெளிவாக முன்வைக்க வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு புதிய அரசியல் அமைப்பின் ஊடாகவே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அந்த அரசியல் தீர்வானது, கடந்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறு ஈடற்ற இழப்புக்களை சந்தித்து தமிழ் மக்கள் அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டங்களை ஏன் நடத்தினார்கள் என்பதை ஆராய்ந்து போராடும் அவசியத்தை உருவாக்கிய காரணங்களை இல்லாது செய்யும் வகையிலும், காலத்துக்குக் காலம் மத்தியில் ஆட்சிக்கு வரும் அரசுகள் நினைத்தால் பிடுங்கிக் கொள்ளும் வகையிலான வலிமையற்ற அரசியல் சட்டமாக இருக்காமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் இழப்புக்களுக்கும், துயரங்களுக்கும் நிரந்தர பரிகாரங்களையும், நியாயங்களையும் பெற்றுக் கொடுப்பதாக புதிய அரசியலமைப்பு திருத்தம் அமையவேண்டும். தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் தம்மைத்தாமே ஆளுகின்ற வகையிலும், அச்சமற்று பாதுகாப்பாக வாழ்வதை உறுதிப்படுத்துவதாக புதிய அரசியலமைப்பு திருத்தம் அமைய வேண்டும். இந்த நிலைப்பாட்டை புதிய அரசியலமைப்பு வரைபுக்கு முன்னர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று சாதிக்க தமிழ் அரசியல் தரப்புகள் முயற்சிப்பார்களா?அல்லது தமிழ் தரப்புகள் இதற்குள்ளும் வெட்டி ஓடி அரசியல் செய்வார்களா?
- ஈழத்துக்கதிரவன் -