இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க கோரிக்கை!

Black-Da
இலங்கையின் 68வது சுதந்திரதினத்தை தமிழ்மொழி பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடங்களான வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கரிநாளாக’ அனுஸ்டிக்குமாறு- கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு கிழக்கு மாகாண சங்கங்கள் நேற்று அழைப்பு விடுத்துள்ளன. வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கூடிக் கலந்தாலோசித்து இந்த முடிவை அறிவித்துள்ளனர்.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஏழு வருடங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் இலங்கை அரசாங்கமானது, ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்கள் தொடர்பில் ‘பொறுப்புக்கூறல் மற்றும் பரிகாரநீதி’ வழங்கல் செயல்பாட்டு முன்னெடுப்புகளை இன்று வரையும் இதயசுத்தியுடன் மேற்கொள்ளாத நிலைமைகளைக் கண்டித்து, 68வது சுதந்திர தினமாகிய பெப்ரவரி 4 அன்று, வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் சமநேரத்தில் கறுப்பு பட்டியணிந்து காலையிலிருந்து மாலை வரை அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும், நாடு முழுக்கவும் சிறைச்சாலைகளுக்குள் உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் சமநேரத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரிடம் தமது உறவுகளை ஒப்படைத்த கண்கண்ட சாட்சிகளாகவும், பொலிஸ் மற்றும் முப்படைகளும் சந்தேகத்தின் பெயரில் விசாரணைக்காக தமது உறவுகளை வலிந்து கூட்டிச்சென்றதை நேரில் கண்ட உறவுகளாகவும் தாங்கள் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இராணுவத்தின் எந்தப்பிரிவிடம்? எந்த அதிகாரியிடம்? அல்லது எந்த இராணுவச் சிப்பாய்யிடம்? எந்த இடத்தில்? எச்சந்தர்ப்பத்தில்? எப்போது தமது உறவுகளை கையளித்தோம்? அல்லது தமது உறவுகளை எங்கு? எப்படி? எப்போது? அழைத்துச் சென்றனர்? என்பதை தம்மால் மிகத்தெளிவாக கூறவும் – அடையாளம் காட்டவும் முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நாட்டில் இரகசிய முகாம்கள் காணப்பட்டிருப்பதற்கான மறுதலிக்க முடியாத வகையிலான ஆதாரங்கள் உள்ளதாகவும், ஐக்கியநாடுகள் சபையின் நிபுணர் குழுவும் – கண்காணிப்புக் குழுவும், இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளும் இதனை உறுதிசெய்துள்ளனர் என்றும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
இதற்கமைய,
தமது உறவுகள் இதுநாள் வரையும் எந்த இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்?
அந்த இரகசிய முகாம்கள் இலங்கையின் எந்தெந்த பகுதிகளில் செயல்படுத்தப்பட்டன?
அந்த இரகசிய முகாம்களை நிர்வகித்துக்கொண்டிருந்தவர்கள் யார்?
கையளிக்கப்பட்ட, கைதுசெய்யப்பட்ட, கடத்தப்பட்ட தமது உறவுகளை சித்திரவதைகளுக்கு உட்படுத்தி படுகொலை செய்தவர்கள் யார்?
சர்வதேச போர் நியமங்களையும், மனித உரிமைப் பிரகடனங்களையும் மீறி தமது உறவுகளை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை?
மனிதத்துவத்துக்கு எதிரான இவ்வாறான வன்முறைகள் குற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள் எவ்வாறானவை?
என்பன தொடர்பில் தமக்கு துரிதமானதும், நீதியானதுமான பதிலை, பொறுப்புக்கூறலை தெரிவிக்குமாறும் அவர்கள் கோரினர். குறித்த இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ‘சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப்பிழைத்திருப்போர்’ பற்றிய தமது உறவுகளின் பெயர் விவரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கூடவே, காணாமலாக்கப்பட்டவர்களில் பெருமளவானோர் இறந்திருக்கலாம் என்றால், ‘அவ்வாறு இறந்தவர்கள் யார்? எஞ்சியிருப்போர் எங்கிருக்கின்றார்கள்?’ என்பது பற்றியும் உடனடியாக பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்களுக்கு கையொப்பமிட்டு மகஜர் ஒன்றையும் நேற்று அனுப்பி வைத்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila