தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டத்திற்கு முன்னையதான அகிம்சைவழிப் போராட்டங்களின் போதும் தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் உறுதியான போக்கைக் கொண்டிருந்தனர்.
அன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் பேரினவாத ஆட்சியாளர்களுடன் இணங்கிச் சென்றிருந்தாலும் அவற்றின் தாக்கம் தமிழ் அரசியல் தலைமைகளின் செயற்பாட்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
மாறாக தமிழ் அரசியல் தலைவர்கள் பல்வேறு சிரமங்களை-சிக்கல்களை எதிர்கொண்ட போதிலும் தமது கொள்கையில் இருந்து விலகாமல் உறுதியாக இருந்தனர். இந்த உறுதிப்பாடு சரியானதா? என்ற விவாதங்கள் இப்போது ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால் தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறலாகாது என்ற அடிப்படையிலும் தமிழ் மக்களின் உணர்வு எவ்வாறானதாக உள்ளதோ! அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது தமது கடமை என்ற அடிப்படையிலும் அன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் நடந்து கொண்டனர்.
இது தவிர தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள், பிரதிநிதிகள் என்ற நியமங்களில் இருந்தவர்கள் பேரினவாத ஆட்சியாளர்களுடன் எந்தவிதமான இரகசியத் தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை.
அரசின் சலுகைகளை பெறுகின்ற நோக்கம் அன்றைய தமிழ் அரசியல் தலைவர்களிடம் இல்லாமையால்,
அவர்கள் தேர்தல் பிரசார மேடைகளில் கூறியதையே தங்கள் அரசியல் வாழ்விலும் கூறிக் கொண்டனர்.
ஆனால், இன்றைய நிலைமை அதுவன்று. தமிழ் அரசியல் தலைமையில் கறுத்த ஆடுகளும் இருக்கவே செய்கின்றன. அரசு போடும் தவிட்டுக்கும் பிண்ணாக்குக்கும் கறுத்த ஆடுகள் அங்கும் இங்கும் ஓடித்திரிகின்றன. இதனால் தமிழ் மக்கள் ஏமாந்து போகின்ற பரிதாபத்துக்கு ஆளாகின்றனர். தமிழ் மக்களுக்காக-தமிழ் மக்களின் உரிமைக்காக பாடுபடுவோம் என்று கூறி பதவிபெற்ற பின்பு, ஆட்சியாளர்களுடன் இரகசிய உறவை மேற்கொண்டு இரட்டை வேடம் பூணும் தப்பான அரசியலால், தமிழ் மக்களின் எதிர்காலம் மிகவும் பாதகமாக அமையும் என்பது நிறுதிட்டமான உண்மை.
இவை ஒரு புறம் இருக்க, மறுபுறத்தில் தேர்தலில் வென்று பதவி பெற்றதும் அடுத்த தேர்தல் பற்றி சிந்திக்கின்ற கயமைத்தனம் எங்கள் அரசியல்வாதிகள் பலரிடம் ஏற்பட்டு விட்டமை மிகப்பெரும் அபத்தம்.
வாக்குறுதிகளை வழங்கி எமது மக்களை நம்ப வைத்து வாக்குகளைப்பெற்று பதவியைப் பிடித்த இளம் அரசியல்வாதிகள் கூட அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வெல்லது எப்படி என்று சிந்திக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாயின் தமிழினத்தை காப்பாற்றுவது யார் என்ற கேள்வி எழுவது நியாயமானதே.
பொதுவில் இளைஞர்கள் புதிய-தூய சிந்தனை செய்பவர்கள். நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பும் மக்களுக்காக அதீதமாக சேவையாற்ற வேண்டும் என்ற துடிப்பும் உள்ள வர்கள்.
ஆனால் இத்தகைய இயல்புடைய இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவது மக்களுக்கு மிகுந்த பலத்தைத் தரும் என்றால், இங்கோ அந்த நிலைமையும் நினைப்பும் தலைகீழாக உள்ளன.
இங்கு இளம் அரசியல்வாதிகள் அடுத்த தேர்தல் பற்றியும் அடுத்தது இதைவிட உயர்ந்த பதவியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாகவுமே இருக்கின்றனர். இதனால் வயதுக்கும் பதவிக்கும் அனுபவத்துக்கும் மதிப்பளிக்கத் தெரியாமல் தங்களின் பெயர்களை பிசக்கிக் கொள்கின்றனர்.
இந்நிலைமைகள் மாறவேண்டும் என்றால் தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டும்.