தைப்பொங்கல் தினத்தில் பிரதமர் கூறிய துயரச் செய்தி


தேசிய தைப்பொங்கல் நிகழ்வு நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்தபோது அந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காணாமல்போனவர் கள் பெரும்பாலும்  இறந்திருக்கலாம் என்று கூறியமை தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல்போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்ட போது, காணாமல்போனவர்களின் உறவுகள் தங்களின் சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தனர்.

விசாரணை முடிவுகள் என்ன என்பதை அறிய ஆவலாக இருந்த நேரத்தில், காணாமல்போனவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்திருக்கலாம் என்று பிரதமர் ரணில் கூறியமை மிகப்பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை பிரதமர் ரணில் கூறிய செய்தி தகர்த்தெறிந்து விட்டது.  

காணாமல்போன தங்கள் உறவுகள் மீண்டு வருவர் என்று நம்பியிருந்த நேரத்தில், காணாமல்போன வர்களில் பெரும்பாலானவர்கள் இறந்து விட்டனர் என்று பிரதமர் ரணில் சர்வசாதாரணமாக கூறியமை இந்த நாட்டில் இறப்பை அறிவிப்பதிலும் இனத்துவப் பாகுபாடு உள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
காணாமல்போனவர்கள் சிங்களவர்களாக இருந்தால் அவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்து போயிருக்கலாம் என்ற செய்தியை சிங்கள மக்களின் பண்டிகைத்தினம் ஒன்றில் கூறினால் அதன் தாக்கம் எவ்வாறாக இருக்கும் என்பதை கூறியவர்கள் உணர்ந்திருப்பர். 

ஆனால் தமிழ் மக்கள் சிறுபான்மையினர். அவர்களின் மரணச் செய்தியை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சொல்லலாம் என்று ஆட்சித் தலைவர்கள் நினைப்பதுதான் இந்த நாட்டில் இருக்கக் கூடிய பேரவலமாகும். 

எதுவாயினும் காணாமல்போனவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். காணாமல்போன தமது உறவுகள் தொடர்பில் சாட்சியம் அளித்தவர்களுக்கு உரிய பதிலை வழங்குவது கட்டாயமானதாகும். இவற்றை வலியுறுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தலைமைக்கு உண்டு. இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைப்பது மகாதவறு.

காணாமல்போன தங்களின் உறவுகளுக்கு நடந் தது என்ன என்பதை அறிவதற்காக, வருடக் கணக்கில் கண்ணீர் விடும் பெற்ற தாயின்; கட்டிய மனைவியின்; உற்ற உறவினர்களின் ஏக்கம் தீர்க்கப்பட வேண்டும். 
இவற்றை விடுத்து எழுந்தமானமாக, காணாமல்போனவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்திருக்கலாம் என்றால்; அவர்களை கொன்றது யார்? காணாமல் போகச் செய்தது யார்? யாருடைய ஆட்சியில் இவை நடந்தன? இவற்றைச் செய்தவர்கள் இனங்காணப்பட்டார்களா? இதுபோன்ற பல கேள்விகளுக்கும் பதில் கூறியாக வேண்டும். 

இதைவிடுத்து காணாமல்போனவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்திருக்கலாம் என்றால் அதன் பொருள், நாங்கள் ஆட்சியாளர்கள்; நீங்கள் எங்களால் ஆளப்படுபவர்கள்; எனவே நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்டாக வேண்டும்; இது தான் சட்டமும் நியதியும் என்ற இறுமாப்பில் கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது. 

அதிலும் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் இருந்த மேடையில் அவருக்குப் புரியாத மொழியில் காணாமல்போனவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்துவிட்டனர் என்று பிரதமர் ரணில் கூறியமை வெளிநாட்டு சாட்சியத்தையும் பிற்காலத்தில் சான்றுப்படுத்துவதற்காகவா? என்று எண்ணத்தோன்று வதில் தவறில்லை. 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila