தமிழ் மக்கள் பாவம் என்று சொல்வதைத் தவிர இன்று வேறு எந்த வார்த்தையும் எவரிடமும் இல்லை. அந்தளவிற்கு ஈழத் தமிழினத்தின் நிலைமை உள்ளது.
ஒரு காலத்தில் சிங்கள ஆட்சித் தலைமைகள் எங்களை ஏமாற்றினார்கள். தமிழ்த் தலைவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து இனத்துக்காகப் போராடினர். தமிழ்த் தலைவர்களுக்குப் பின்னால் தமிழ் மக்கள் அணி திரண்டு நின்றனர்.
ஆனால், இன்றைய நிலைமை அதுவல்ல. தமிழ்த் தலைவர்களில் யாரை நம்புவது என்பதாக நிலைமை உள்ளது. கட்சித் தொண்டர்கள் என்று எவரும் கிடையாது.
தேர்தலில் வெற்றி பெறுவதாக இருந்தால்; சாராயம், கொத்துரொட்டி, இலஞ்சம் என்பவற்றுக்காக பண த்தை தாராளமாக இறைக்க வேண்டும் என்பதே யதார்த்தம்.
கோடிக்கணக்கான பணத்தைச் செலவிட்டு எம்.பி பதவியை பெறுவதென்பது தனி மனிதர்களால் சாத் தியமற்றது எனும்போது, ஆளுந்தரப்புடன் ஒப்பந்தம் செய்து, நீ காசை இறை; நான் உனக்காக தமிழ் இனத்தையே விற்று விடுவேன் என்று உறுதிமொழி வழங்கி பதவி பெறும் அளவிலேயே எங்கள் தமிழின த்தின் நிலைமையாயிற்று. இதனால்தான் தமிழினம் பாவம் என்று சொல்லவேண்டியுள்ளது.
இதற்கு அப்பால், ஒரு காலத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் சில சமயங்களில் சோர்வுற்றாலும் இளை ஞர்கள் அவர்களுக்கு உற்சாகம் கொடுத்தனர்.
இளைஞர் படை இருக்கும் போது நீங்கள் எதற்குத் தயங்க வேண்டும் என்ற கேள்வி தமிழ்த் தலைவர்களை நிமிர வைத்தது.
கூடவே, தமிழ்ப் புத்திஜீவிகள் தமது அரசியல் தலை வர்களுக்கு நல்ல ஆலோசகர்களாக இருந்தனர். இத னால் அன்றைய தமிழ் தலைவர்கள் சோரம் போகாமல் தமது அரசியல் நடவடிக்கைகளை தமிழினத்துக்காக முன்னெடுத்தனர்.
ஆனால், இன்றைய நிலைமை மிகவும் வேதனைக் குரியது.ஒரு லப்டொப்புக்காக விலை போகின்ற ஒரு சில மாணவர்கள் இருக்கின்ற காலம்.
விடுதலைப்புலிகளுடன் கூடிக்குலவியிருந்த புத்தி ஜீவிகள் சிலர் தங்கள் சுயநலத்துக்காக இன்று ஆளுந் தரப்பு விசுவாசிகளாகி எல்லாவற்றையும் நாசமறுக்கத் தலைப்படும் கேவலம் நடக்கின்ற நேரமிது.
ஆகையால், தமிழினத்தின் எதிர்காலம் என்பது மிகவும் பயங்கரமானதாக - ஆபத்தானதாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
இவ்விடத்தில்தான் தமிழ்ப் புத்திஜீவிகள் உள்ளிட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம், தமிழினத்தை ஒன்றுபடுத்தி; ஓரணியில் நிறுத்தி தமிழ் மக்களின் உரிமை ஒன்றே எங்களின் அசையாத இலக்கென ஒருமித்து குரல் கொடுக்கச் செய்தாக வேண்டும்.\\\\
இதுவே, அதற்கான சந்தர்ப்பம். இச்சந்தர்ப்பத்தை தவறவிட்டால் எங்கள் வாழ்வுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த பிள்ளைகள் பாவங்கள்; அவர்களின் குடும்பங்கள் பாவங்கள்; போர் நடந்த போது எங்களுக் காக உயிர்விட்ட தமிழ் மக்கள் பாவங்கள் என்பதாக நிலைமை முடிந்து விடும்.
ஆகையால், தமிழருக்குத் தமிழர் விரோதிகள் என்ற சூழ்நிலைக்கு இம்மியும் இடங்கொடாமல் பார்த்துக் கொள்வது எங்கள் அனைவரதும் தார்மிகக் கடமை.