பூகோள ஒழுங்கின்மை காரணமாக, யாழ். குடாநாடு கடலால் கழுவிச் செல்லப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டியுள்ள ஐங்கரநேசன், இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கொள்ளும் வழிமுறையொன்றை உடனடியாக தேட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். வட மாகாணசபையில், ஐங்கரநேசனால் வெளியிடப்பட்ட இந்த கருத்து தொடர்பில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் முன்னாள் வேந்தரும் புவிச்சரிதவியல் பேராசிரியருமான செனவி எப்பிடவத்தவிடம் விசாரித்த போது, 'யாழ்ப்பாணம் எதிர்நோக்கும் இந்த ஆபத்து, தற்போது ஆரம்பமாகிவிட்டது' எனக் குறிப்பிட்டார். 'யாழ்ப்பாணம் முழுவதும் காணப்படும் சுண்ணாம்புக் கற்கள், கடல் நீரில் கரைந்து செல்வதால் பாரிய அருவிகள் தோன்றி, சாதாரண நீர் அனைத்தும் கடல் நீருடன் கலந்துவிடும். இதனால், நிலத்துக்கடியில் உள்ள நீரை மக்கள் எந்தளவுக்கு பயன்படுத்துகின்றனரோ அதைவிட மேலதிகமாக, கடல்நீருடன் குடிநீர் கலந்துவிடும்' என்றும் அவர் கூறினார். 'ஆதிகால யாழ்ப்பாண வாசிகள், துலாவைப் பயன்படுத்தியே தங்களுக்குத் தேவையான நீரை நிலத்துக்கடியிலிருந்து பெற்றுக்கொண்டனர். அந்த நீர் இறைக்கும் முறையால் நிலத்தடி நீர் எந்நேரமும் ஊற்றெடுத்துக் கொண்டிருந்ததுடன் அந்நீர் சுத்தமாக்கப்பட்டுக் கொண்டும் இருந்தது. இருப்பினும், அங்கு வாழும் மக்களின் தொகை குறைவாகவே காணப்பட்டமையினால் அதிகளவு நீரைத் தேடி நிலத்தை மென்மேலும் தோண்ட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், யாழ் குடாநாடு எதிர்நோக்கியுள்ள இந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின் அங்குள்ள மக்கள் பயன்படுத்தும் நீருக்கு சமனான நீரை வெளியிலிருந்து விநியோகிக்க வேண்டும்' என்று சுட்டிக்காட்டிய பேராசிரியர், 'அதற்காக கடல் நீரையோ அல்லது களப்பு நீரையோ சுத்தப்படுத்தியேனும் அல்லது வேறு மாவட்டங்களில் இருந்தேனும் யாழ்ப்பாணத்துக்கு குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இருப்பினும் இதற்கு பாரியளவு நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டி ஏற்படும்' என்றும் குறிப்பிட்டார். 'யாழ்ப்பாண மக்களுக்குத் தேவையான குடிநீரை எவ்வகையிலேனும் பெற்றுக்கொடுக்க முடியுமாயினும் அவர்களின் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை பெற்றுக்கொடுப்பது கடினமான செயலாகும். எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தின் கடல் மட்டம் 50 சென்றிமீற்றரினால் அதிகரிக்குமாயின் யாழ் குடாநாடு, கடலில் மூழ்கும் அபாயத்தை ஒருபோதும் தடுக்க முடியாது' என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். 'தற்போதுள்ள நிலைமையை அவதானிக்குமிடத்து இந்த ஆபத்து, கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வருகின்றது என்றே கூறலாம். இதனைத் தடுக்கக்கூடிய வழிமுறை என்று எதனையும் தெளிவாகக் கூறிவிட முடியாது' எனவும் பேராசிரியர் மேலும் கூறினார். |
யாழ்.குடாநாடு கடலில் மூழ்கும் ஆபத்து! - விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Related Post:
Add Comments