
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி
கட்சிகளுக்கு இடையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான ஆசன பங்கீடு தொடர்பில் நிலவி வந்த பிரச்சினைகள் சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்புகொண்ட தமிழரசுகட்சி பா.உ.சுமந்திரன் கூட்டமைப்பு உடைந்தால் எல்லோருடைய வசதி வாய்ப்புக்கள் மற்றும் உங்கள் பதவி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவிகூட பறிபோய்விடும் என விளக்கியிருந்ததாகவும் அதனடிப்படையில் தாமும் விட்டுக்கொடுப்புக்கு தயார் என சுமந்திரன் தெரிவித்திருந்ததாக ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இன்று ரெலோ சம்மதம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இன்று ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளோடு கலந்துரையாடியதன் அடிப்படையில் இந்தப் பிரச்சினை சுமுகமாக முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தற்போது கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளும் அறிவித்துள்ளன.
இதன் பிரகாரம் தேர்தலுக்கான விண்ணப்பங்கள் இலங்கை தமிழரசு கட்சியின் பெயரிலும், வீட்டுச் சின்னத்திலும் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று எட்டிய ஆசனப்பங்கீட்டு விபரம் தமிழ் கிங்டொத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது அதன்படி
மாவட்டரீதியில் இணக்கம் காணப்பட்டுள்ள ஆசனப்பங்கீட்டு விபரம்
.
💥💥யாழ்ப்பாணம்
நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர், வல்வெட்டித்துறை நகரசபை என்பன ரெலோவிற்கு வழங்கப்பட்டுள்ளன. வேலணை பிரதேசசபையின் பிரதி தவிசாளரும், அங்கு 40% வேட்பாளர்களும்.
யாழ் மாநகரசபையின் பிரதி மேயர் ரெலொவிற்கு.
நல்லூர் பிரதேசசபை, வலி கிழக்கு, கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேசசபையும் ரெலோ, தமிழரசுக்கட்சி தலா இரண்டு வருடம் பங்கிடுவார்கள். நல்லூர், கரவெட்டி தெற்கு மேற்கு முதல் இரு வருடம் தமிழரசுக்கட்சிக்கு. இந்த மூன்று சபைகளில் ரெலோ, தமிழரசுக்கட்சி தலா 40%, 20% புளொட்டிற்கு.
யாழ்ப்பாணத்தில் ஒரு சிக்கல் நிலை நீடிக்கிறது. புளொட் உடுவில்,வட்டுக்கோட்டை தொகுதிகளை கோரியது. எனினும் மானிப்பாய் தொகுதியே தர முடியுமென தமிழரசுக்கட்சி கூறியுள்ளது. இந்த இரண்டு தொகுதியும் கிடைக்காவிட்டால், யாழ்ப்பாணத்தில் தேர்தலில் இருந்து ஒதுங்கவுள்ளதாக புளொட் கூறியுள்ளது.
💥💥கிளிநொச்சி
கிளிநொச்சியின் மூன்று சபைகளான கரைச்சி பூநகரி, பச்சிலைப்பள்ளி மூன்று சபைகளின் தவிசாளர்களும் தமிழரசுக்கட்சி. புளொட், ரெலோவிற்கு மூன்றின் உப தவிசாளர்களும். இங்கு தமிழரசுக்கட்சிக்கு 60%, மற்றைய இரண்டு பங்காளிகளிற்கும் தலா 20% ஒதுக்கப்பட்டுள்ளது.
💥💥வவுனியா
நெடுங்கேணி பிரதேசசபை தமிழரசுக்கட்சிக்கு. வவுனியா நகரசபை மேயர் தமிழரசுக்கட்சி. பிரதி மேயர் புளொட். வவுனியா தெற்கு பிரதேசசபை, செட்டிக்குளம் பிரதேசசபையையும் ரெலோ, புளொட் தலா இரண்டு வருடங்கள் பங்கிடும்.
💥💥மன்னார்
மன்னாரில் மன்னார் நகரசபை, மாந்தை மேற்கு ரெலோவிற்கு. மன்னார் பிரதேசசபை, நானாட்டான் பிரதேசசபை தமிழரசுக்கட்சிக்கு.
💥💥மட்டக்களப்பு
களுவாஞ்சிக்குடி, போரதீவு பிரதேசசபைகள் ரெலோவிற்கு. மட்டு நகரசபை பிரதிமேயரும் ரெலோவிற்கு. செங்கலடி புளொட்டிற்கும் தமிழரசுக்கட்சிக்கும் பங்கிடப்படும்.
ஆரையம்பதி புளொட்டிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வவுணதீவு பிரதேசசபையின் உப தவிசாளர் புளொட்டிற்கும் வழங்கப்படவுள்ளது.
💥💥அம்பாறை
திருக்கோவில், காரைதீவு பிரதேசசபைகள் ரெலோவிற்கு. கல்முனை எதிர்கட்சி தலைவர் பதவியும் ரெலோவிற்கு. அங்கு கிடைக்கும் 8 உறுப்பினர்களில் 5 ரெலோவிற்கும், 3 தமிழரசுக்கட்சிக்கும். நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு பிரதேசசபைகள் தமிழரசுக்கட்சிக்கு.
💥💥முல்லைத்தீவு
புதுக்குடியிருப்பு தமிழரசுக்கட்சி. கரைத்துறைப்பற்று பிரதேசசபை ரெலோ, புளொட் பங்கிடும். உப தவிசாளர் தமிழரசுக்கட்சிக்கு. மாந்தை கிழக்கு ரெலோ, துணுக்காய் தமிழரசுக்கட்சிக்கு.
💥💥திருகோணமலை
அங்குள்ள மூன்று சபைகளிலும் தமிழரசுக்கட்சியே தவிசாளர் பதவியையும், உப தவிசாளர் பதவிகளையும் பெறும். ஏனைய கட்சிகளுடன் பேசி, உறுப்பினர்களை நியமிக்கலாமென முடிவாகியுள்ளது.