அன்று நான்; இன்று நீ; இதுவே கடவுளின் நியதி


அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற தத்துவம் எத்துணை ஆழமானது என்பதை எங்கள் வாழ்வில் நாம் அனுபவமாக கண்டு உணர்ந்துள்ளோம்.
எனினும் இத்தத்துவங்களை மறந்து போவது தான் நாம் செய்யும் மிகப்பெரும் தவறு. 

தசரத மன்னன் தெரியாமல் செய்த தவறால் முனிபுங்கவரின் முதல்வன் இறந்து போகிறான். புத்திரசோகம் தாழாத முனிபுங்கவரும் அவரின் பத்தினியும் எங்களைப் போல் நீயும் புத்திரசோகத்தால் இறக்கக் கடவீர் என்று சாபமிட, அதுவே தசரதனின் மரணத்துக்கு காரணமாகிறது. தான் பெற்ற இராமமைந்தன் காடேகிறான் என்ற செய்தி தசரதனின் உயிரைப் பறிக்கிறது. 

அதுமட்டுமல்ல; முனிபுங்கவரின் மரணச் சடங்கை செய்வதற்கு அவரின் மைந்தன் இல்லாது போனது போல,  தசரதனின் அந்திமக் கிரியைகளைச் செய்வத ற்கு உரியவனான இராமன் இல்லாமல் போனமை       மகாதத்துவம்.    

இந்தத் தத்துவங்கள் இதிகாசங்களுக்கு உரியவை என்று நினைத்து அதர்மவாழ்வு வாழ்ந்தால் அது அழிவையே தரும். பழி, பாவம், ஊழ்வினை, கன்மம், வினைப் பயன் என்ற சொற்பதங்கள் எங்களை நெறிப்படுத்துவதற்கானவை. இவை பற்றி எவரும் சர்வசாதாரணமாகக் கருதி விடக்கூடாது.
மனிதம், மக்கள், ஜீவகாருண்யம் என்ற சொற்பதங்கள் குறித்து ஆராய்ந்தால், இங்கு இனம், மதம், மொழி, நிறம் என்ற பேதங்களுக்கு அறவே இடமில்லை என்பதை உணரமுடியும். 

நீதி, சட்டம், பாதுகாப்பு என்பவையும் வலுவானவை. இவற்றில் பாகுபாடுகள், பக்கச்சார்புகள் நுழைந்து விட்டால் அது அறம் பிழைப்பதற்குக் காரணமாகிவிடும். 
ஆதலால்தான் அறம் பிழைத்தால் அதுவே கூற்று என்று கூறப்பட்டது. இதற்குச் சான்றாக எங்கள் நாட்டில் மட்டும் எத்தனையோ சம்பவங்களை நாம் பார்க்க முடிகிறது. 

விடுதலைப் புலிகளுடனான இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்து புலிகளை வென்று விட்டோம் என்று அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவுக்கு அறிவிப்புச் செய்த அன்றைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையில் அரைக்காற்சட்டையுடன் சாப்பாட்டுத் தட்டேந்தி வரிசையில் நின்று உணவு பெற்றதைக் கண்டவர்கள் நாங்கள்.
 
இப்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ­ தன் மகனின் கைது கண்டு கண்ணீர்விட்டு அழுகிறார். அடேங்கப்பா! இந்த மகிந்த ராஜபக்ச­வா கண்ணீர் விட்டு அழுவது!
மகிந்த ராஜபக்­சவையும் அவரது குடும்பத்தையும் எந்தக் கொம்பனாலும் எதுவும் செய்து விட முடியாது என்று நினைத்திருந்த காலங்கள் எப்படி மாறின?

இன்று வெலிக்கடச் சிறைச்சாலைக்குச் சென்று மகிந்த ராஜபக்­ச கண்ணீர் விடுகிறார் என்றால், அதற்குள் இருக்கக்கூடிய தத்துவம் புரிகிறதா? இல்லையா? அன்று மகிந்தவின் அரசால் வெலிக் கடச் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விட்ட கண்ணீர் இன்று மகிந்த குடும்பத்தையே கண்ணீர் விட வைக்கிறது.
ஆம், இதுதான் உலக நியதி என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் செயற்படுவதே நன்று. இதனையே  இறைவன் விரும்புகிறான். இல்லையேல் அறம் பிழைக்கும் போது அதுவே கூற்றுவனாக மாறும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila