மகிந்த ராஜபக்சவின் துணையுடன் ஆட்சியமைக்கப்படுவதை நான் விரும்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நண்பகல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினரைச் சந்தித்துப் பேசியிருந்தார். இந்தச் சந்திப்பில் பேசிய அவர்,
தற்போதைய ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்தாலும், மகிந்த ராஜபக்சவின் துணையுடன் ஆட்சியமைக்கப்படுவதை தாம் விரும்பவில்லை.
தற்போதைய கூட்டு அரசாங்கம் இன்னும் சில மாதங்களுக்குத் தொடரும், இதில் இதனை விரும்புபவர்கள் இணைந்திருக்க முடியும். விரும்பாதவர்கள் சுதந்திரமாக வெளியேறலாம்.
தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அவசரப்பட்டு தீர்மானங்கள் எதனையும் எடுக்க வேண்டாம் என்றும், இன்னும் ஒரு மாதம் பொறுத்து இருங்கள்.
அதன் பின்னர் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நிலைத்திருப்பதா? இல்லையா? என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
எதிர்வரும் நாட்களில் தான் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றமும் அதில் ஒன்று என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க, தற்போதைய சூழலில் அரசாங்கத்தை மாற்றுவது, மகிந்த ராஜபக்சவின் பொதுஜன முன்னணிக்கு கிடைத்த வெற்றியாக அமைந்து விடும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், இதனால் கூட்டு அரசாங்கம் தொடரும் அறிகுறிகள் தென்படுவதாகவும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add Comments