ஒன்றிணைந்த வடக்கு – கிழக்கு அதிகார பகிர்வு மிக்க சமஷ்டி! (கருத்தறியும் குழுவிடம் மக்கள் வலியுறுத்து)

வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த தேசத்தில் அதிகாரப்பகிர்வுடன் கூடிய சமஸ்டியே தமிழ் மக்களுக்கு ஒரே அரசியல் தீர்வென புதிய அரசியல் மாற்றம் தொடர்பில் கருத்தறியும் குழுவிடம் பொதுமக்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்திற்கான மேற்படி அமர்வு நேற்றைய தினம் காலை ஒன்பது மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து கூறிய பொதுமக்களினாலேயே மேற்படி அரசியல் தீர்வு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வா காலம் முதற் கொண்டு தமிழ் மக்கள் சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வையே வலியுறுத்தி வருகின்றனர். எனினும் தமிழ் மக்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு காலம் காலமாக வருகின்ற சிங்கள ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்டு வருகின்றது.
காணி, பொலிஸ் அதிகாரம் கொண்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை அலகு கொண்ட முறைமையே எமக்கு வேண்டும். முதலமைச்சர் நிதியமானது அதிகாரங்களுடன் ஆரம்பிக்கப்பட்டல் வேண்டும். மத்திய அரசினால் நியமிக்கப்படுகின்ற எந்த ஆளுநரும் மாகாணங்களின் அதிகாரங்களில் தலையீடு செய்யக்கூடாது.
வடக்கு கிழக்கு இணைப்பினையே தமிழ் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனையே கடந்த காலங்களை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் நிரூபித்தும் வருகின்றனர். வடகிழக்கு இணைப்பு தொடர்பில் மாற்றுக்கருத்துக்கள் இருக்குமாயின் தற்போது பிரிந்துள்ள இரு மாகாணங்களில் தனித்தனியாக பொது மக்கள் அபிப்பிரயாக வாக்கெடுப்பு நடாத்தல் வேண்டும்.
எமது நிலங்கள் தற்போது சிங்கள மயமாக்கப்பட்டு வருவதால் முதலில் எமது தாயகத்தின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படல் வேண்டும். சிங்கள குடியேற்றம், காணி அகரிப்பு என்பவற்றால் எமது தாயகம் குறுக்கப்பட்டு செல்கின்றன. ஆகையால் வடகிழக்கு இணைப்புக்கு முன்னதாக எல்லை மீள் நிர்ணயம் கட்டாயம் வேண்டும்.
முதலில் நாங்கள் நோயினை அறிய வேண்டும். அதன் பின்பு நோயின் தன்மையை அறிய வேண்டும். இதன் பின்னரே மருந்திட வேண்டும். வரலாற்றில் என்ன தமிழ் தரப்பில் கோரப்பட்டது, அவர்களது கோரிக்கைகள் என்ன என்பவை தொடர்பில் ஆராயப்படல் வேண்டும். இதன் மூலமே தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை வழங்க முடியும்.
வடகிழக்கில் உள்ள போர் வெற்றி தோல்வி சின்னங்கள் அகற்றப்பட வேண்டும். பௌத்த மதத்தினை சிறுபான்மை மக்கள் மீது அடக்குமுறை மேற்கொள்வதற்கு பயன்படுத்துவதை உடன் நிறுத்த வேண்டும். மேலும் மலிவான அரசியல் தேவைகளுக்கும் பௌத்தம் பயன்படுத்தப்படுவது புதிய அரசியல் அமைப்பின் மூலம் தடைசெய்யப்படல் வேண்டும்.
நாடு மதசார்பின்மையை நோக்கி முன்னேற வேண்டும், படைகள் என்ற கட்டமைப்பை விட மக்களுக்கே முன்னுரிமை என்ற ஒழுங்கு கொண்டுவரப்படல் வேண்டும். தமிழ் பெண்கள் எமது விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்திருந்த போதிலும் தமிழ் தேசிய அரசியலில் ஆண்களே தலைமை வகிக்கின்றனர். இந்த நிலை மாற்றப்படல் வேண்டும்.
இந்த நிலை தான் நாடு முழுவதும் உள்ளது, உள்ளூராட்சி தேர்தல்களில் கட்டாயம் முப்பது வீதம் பெண்கள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ள போதிலும், அது எந்தளவிற்கு பின்பற்றப்படுகின்றன என்பது சந்தேகமே, குறிப்பாக இவ்வாறான அதிகாரம் குறைந்த இடங்களிலேயே சமத்துவம் பற்றி காலம் காலமாக வருகின்ற அரசுகளினால் பேசப்படுகின்றன.
நாட்டின் மீ உயர் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்திலும் பெண்கள் பிரதிநித்துவம் ஐம்பது வீதமாக அதிகரிக்கப்படல் வேண்டும். மொழியை பொறுத்தமட்டில் தமிழ் மொழி அரச கரும மொழியாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்படல் வேண்டும். இந்த சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு உள்ள போதிலும் நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை . இதனை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய கீதத்தை பொருத்தமட்டில் தமிழ் பிரதேசங்களில் அனைத்து அரச கரும நிகழ்வுகளிலும், நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ் தேசிய கீதமும் முடிவில் சிங்களத்திலும் தேசிய கீதம் இசைக்கப்படல் வேண்டும். இதே போல் சிங்கள பிரதேசத்தில் நிகழ்வின் ஆரம்பத்தில் சிங்களத்திலும் முடிவில் தமிழிலும் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்படல் வேண்டும். என்ற சட்டமூலம் புதிய அரசியல் அமைப்பில் கொண்டுவரப்படல் வேண்டும்.
எமது தலைவர் செல்வநாயகம் சமஸ்டியை விரும்பி மக்கள் ஆணையை பெற்றார். இதனை முன்னாள் ஜனாதிபதி பண்டாரநாயக்க ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன சமஸ்டியை மறுத்தார். தற்போது மீண்டும் தமிழ் மக்களினால் சமஸ்டி கோரப்படுகிறது. ஆகையால் எமக்கான தீர்வு சமஸ்டி மூலமே வழங்கப்பட முடியும் என தமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila