
கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், கேலிச் சித்திரக் கலைஞருமான பிரகீத் எக்னலிகொடவை உயிருடன் தடுத்து வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள கிரிதலை மற்றும் அக்கரைப்பற்று இராணுவ முகாமிலிருந்து ஜனாதிபதி செயலகத்திலுள்ள அதிகாரிகள் சிலருக்கு தகவல்கள் பறிமாறிக் கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் இந்தத் தகவலை நீதவானிடம் தெரிவித்திருக்கின்றனர்.
பிரகீத் எக்னலிகொட கடத்தல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரின் தொலைபேசி உரையாடல்களை ஆராய்ந்த போது, அந்த நபர் ஊடகவியலாளர் எக்னலிகொட தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றிய அதிகாரிகள் சிலருடன் கலந்துரையாடியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்ற்புலனாய்வு அதிகாரிகள் ஹோமாகம நீதவானுக்கு தெரியப்படுத்தினர்.
அத்துடன் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயன்படுத்திய தொலைபேசி இணைப்புகளுக்கான சிம் அட்டைகளும் ஜனாதிபதி செயலாளரின் பெயரால் விநியோகிக்கப்பட்டவை என்பதும் தமது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றில் கூறியுள்ளனர்.
இதற்கமைய 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதிவரை கிரிதலை இராணுவ முகாமிலிருந்து அக்கறைப்பற்று முகாமுக்கு வந்து சென்றவர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்குமாறு ஹோமாகம நீதவான் ரங்க தஸநாயக்க, இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விடுத்தக் கோரிக்கைக்கு அமையவே இந்த உத்தரவை நீதவான் விடுத்திருக்கின்றார்.
அதேவேளை இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இராணுவ அதிகாரியிடம் மேலதிக விசாரணை நடத்துவதற்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.