
பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலைச் செய்யப்பட்ட வவுனியா மாணவி ஹரிஷ்ணவியின் மரணத்திற்கு நீதிகோரியும், அந்த கொடூர சம்பவத்தினைக் கண்டித்தும் நாளை (புதன்கிழமை) வடமாகாணத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களை சீரழிக்கும் காமுகர்களுக்கு சட்டத்தில் இருக்கின்ற அதி உச்சபட்ச தண்டனையினை பெற்றுகொடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதை விரைவுபடுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது, சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு முழு அடைப்பு போராட்டமாக நடத்தப்படவேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து வடமாகாண வர்த்தக சங்கத்தினர் இதுவரையில் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்திற்கு வர்ததக சங்கம் ஒத்துழைத்திருந்ததுடன், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததன் காரணமாக வர்த்தக சங்கத்தினர் நான்கு தடவைகள் புலனாய்வாளர்களினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமையினால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து அவர்கள் தயக்கம் காட்டுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறபிடுகின்றன.
இதேவேளை நாளைய தினம் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தினை, பூரண ஹர்த்தாலாக அனுஷ்டிக்குமாறு வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.