பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி ஹரிஷ்ணவியின் மரணத்திற்கு நீதி கோரியும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்த வலியுறுத்தியும் நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக வடக்கு மாகாணம் முழுவதும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இன்று காலை முதல் வட மாகாணத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், தனியார் பேரூந்து சேவை ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் எமது மாவட்ட பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு யாழ் ஆசிரியர் சங்கம் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண வணிகர் சங்கத்தினர் மற்றும் யாழ் பல்கலைக்கழகம் என்பன இணைந்து அழைப்பு விடுத்திருந்தன
போராட்டத்தினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்த போதிலும், அரச பேரூந்துகளைப் பயண்படுத்தி போக்குவரத்து சேவையினை ஈடுசெய்ய அரசாங்கம் முயற்சித்திருந்தது.
முல்லைதீவும் முடங்கியது : மாணவியின் கொலைக்கு நீதி கிடைக்குமா? (ஐந்தாம் இணைப்பு)
வவுனியா மாணவியின் மரணத்திற்கு நீதிகோரும் வகையில் வடமாகாணத்தில் நடைபெறும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும், போராட்டங்கள் இன்று (புதன்கிழமை) முல்லைதீவு மாவட்டத்திலும் நடத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் அண்மையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி ஹரிஷ்ணவியின் மரணத்திற்கு நீதி கோரியும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்த கோரியும் இன்று பூரண எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று காலை முதல் முல்லைத்தீவில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதாகவும், தனியார் பேரூந்து சேவை முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் இலங்கைப் போக்குவரத்து சபை பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
ஹரிஷ்ணவிக்கு நீதிகோரும் போராட்டத்தினால் செயலிழந்து நிற்கிறது கிளிநொச்சி மாவட்டம் (நான்காம் இணைப்பு)
பாலியல் வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஷ்ணவியின் படு கொலையை கண்டித்து, இன்று (புதன்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்திலும் பூரண கடையடைப்பு மற்றும் பணிபகிஷ்கரிப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரச திணைக்களங்கள் வழமைபோல் இயங்குகின்றபோதிலும், குறைந்தளவான மக்களே சேவைகளை பெற்றுக்கொள்ள வருவதை காணக்கூடியதாக இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
ஹரிஷ்ணவியின் படுகொலையைக் கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டமையினால், பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை.
அத்தியாவசிய தேவைகளிற்காக மருந்தகங்கள், தேனீர் சாலைகள் திறந்துள்ள போதிலும், ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அரச பேரூந்துகள் சேவையில் ஈடுபடுகின்ற போதிலும், தனியார் பேரூந்துகள் இன்று சேவையில் ஈடுபடாமல் அவர்களும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனால் மக்கள் போக்குவரத்து செய்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவும் செயலிழந்தது : ஹரிஷ்ணவிக்கு நீதி கோரி முழு அடைப்பு போராட்டம் (மூன்றாம் இணைப்பு)
பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஷ்ணவியின் படு கொலையை கண்டித்து, இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்படுகின்ற எதிர்ப்பு நடவடிக்கையின் காரணமாக வவுனியா மாவட்டம் முற்றாக செயலிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
வவுனியா மாணவி ஹரிஷ்ணவி பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து வவுனியாவில் பூரண கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
‘சமூக வன்முறைக்கு எதிரான மக்கள் அமைப்பு’ விடுத்த வேண்டுகோளுக்கு அமைய வவுனியா மாவட்டத்தில் சிங்கள பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களை தவிர அனைத்து தமிழ் முஸ்லீம் வர்த்தகர்களும், வர்த்தக நிலையங்களை பூட்டி நீதிகோரும் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தனியார் பேரூந்துகள், முச்சக்கர வண்டிகள், வவுனியா இ.போ.சாலை பேந்துகள் சேவையில் ஈடுபடாத நிலையில் ஏனைய மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட இலங்கை பேரூந்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது.
இதன்போது, தனியார் மற்றும் அரச வங்கிகள் வழமைப்போல் இயங்கியதுடன், அரச திணைக்களங்களில் குறைந்தளவான ஊழியர்களே பிரசன்னமாகியிருந்தனர்.
பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த போதிலும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான சங்கீத செயன்முறை பரீட்சைகள் நடைபெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
ஹரிஷ்ணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும்! மன்னாரில் முடங்கியது தனியார் பேரூந்து சேவை (இரண்டாம் இணைப்பு)
இன்று காலை 6 மணிமுதல் மன்னார் தனியார் பேரூந்து சங்கத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான சகல விதமான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு மற்றும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு போக்குவரத்தை மேற்கொள்ளவிருந்த அரச திணைக்கள அதிகாரிகள், மாணவர்கள், மற்றும் கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
மற்றும் உள்ளூர் சேவைகளும் இடம் பெறாமையினால் தூர இடங்களில் இருந்து பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் தாமதித்த நேரத்திலேயே பாடசாலைக்கு செல்லக்கூடியதாக இருந்தது.
எனினும் மன்னாரில் அரச போக்குவரத்து சேவையின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சேவைகள் வழமை போல் இடம் பெற்று வருகின்றன. மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
பாலியல் வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படு கொலையை கண்டித்து வடமாகாணத்தில் பூரண கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் மன்னார் மாவட்டத்தில், தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் மாத்திரமே தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹரிஷ்ணவியின் மரணத்திற்கு நீதி கோரிய போராட்டத்தினால் யாழ்ப்பாணம் ஸ்தம்பிதம்
பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஷ்ணவியின் படு கொலையை கண்டித்து, இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணம் இன்று முற்றாக ஸ்தம்பிதமடைந்தது.
இன்று காலை முதல் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, சிறுவர் பெண்கள் பாராமரிப்பு அமைப்பான ஆறுதல் அமைப்பினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.