பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் மற்றும் கோப்ரல் தர அதிகாரிகள் இருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளனர்.
முன்னைய அரசின் மூத்த அதிகாரியின் உத்தரவின் படியே, இந்த வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப்பிரிவின் லெப்.கேணல் அதிகாரி ஒருவர் தங்களை இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தியதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதேவேளை, ஒரு வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாக கொண்டு, முன்னைய அரசின் அந்த மூத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், விஞ்ஞான ரீதியாகவும் ஏனைய பல சாட்சியங்களும் இதற்கு தேவை என்றும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாட்சியங்கள் குறித்த சந்தேகநபருடன் ஒத்துப்போகும் பட்சத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் சம்பவத்தில், முக்கிய பங்கு வகித்த அந்த மூத்த அதிகாரி கடந்த வாரம் ஹோமகம நீதிமன்றத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்டம் நடத்திய சில பௌத்த பிக்குகளுடன் மிக நெருக்கமான தொடர்பை பேணி வந்தவர் என்றும் சிறிலங்கா காவல்துறை தரப்பு கூறியுள்ளது.
இந்தச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதனை குழப்பும் வகையிலேயே திட்டமிட்டு நீதிமன்றம் முன்பாக அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொலை செய்யப்பட்டு அவரது உடல் திருகோணமலை கடலில் வீசப்பட்டதாக ஆரம்பத்தில் தகவல்கள் கிடைத்த போதும், இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அதற்கான எவ்வித சாட்சியங்களும் கிடைக்கவில்லை என்றும், எனினும் ஊடகவியலாளர் கடத்தப்பட்ட பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்பது சாட்சியங்களுடன் கண்டுபிடிக்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.