பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக்குவதற்கு பொது மக்களின் சுமார் 600 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருந்தபோதும் பொது மக்களின் எதிர்ப்பினால் அச்செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் வலி.வடக்கில் பகுதி பகுதியாக நடைபெற்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் பின்னர் காங்கேசன்துறைத் துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கான பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்துவதற்காக சுமார் 550 தொடக்கம் 600 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவ்வாறு சுவீகரிக்க இனங்காணப்பட்ட காணிகளை ஊடறுத்துச் செல்லும் வல்வை அராலி வீதியினையும் சேர்த்து சுவீகரிக்க திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இருந்த போதும் வலி.வடக்கு மக்கள் இச்சுவீகரிப்பிற்கு பெரும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். குறிப்பாக அண்மையில் நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக்குவதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன் சர்வதேச விமான நிலையம் வேண்டாம். தமக்கு தமது நிலம்தான் வேண்டும் எனத் தெரிவித்தும், சுவீகரிப்பிற்காக மேற்கொள்ளப்படும் காணி அளவீட்டினை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தியும் தீர்மானம் ஒன்றும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது. இத்தீர்மானத்தின்படி அக்கூட்டத்திற்கு தலமைதாங்கிய இணைத்தலைவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் ஆகியோர் இவ்விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசுவதாகவும், உடனடியாக நில அளவையினை நிறுத்துமாறு வலியுறுத்துவோம் என்றும் உறுதி வழங்கியிருந்தனர். இருந்தபோதும் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கென இனங்காணப்பட்ட காணிகள் எந்தவிதமான தடைகளும் இல்லாமல் அளவை செய்து முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.