நிலத்தின் தன்மை யாருக்கு உண்டென்ற உண்மையை பாரதி மிகத் தெளிவாகக் கூறியுள்ளான்.
மண்ணின் தன்மை பயிருக்கும் அவற்றின் விளைபொருளுக்கும் உள்ளது போல மண்ணின் தன்மை மனிதர்களுக்கும் இருக்கவே செய்கிறது.
இதனாலோ என்னவோ ஊர்க்குணம் என்று நாம் கூறிக்கொள்வதுண்டு. சில ஊர்களுக்கு புதிதாகப் போகின்றவர்கள் அல்லது புதிய இடத்தில் கூடியிருப்பவர்கள் அந்த இடத்தின் தன்மைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வர்.
உதாரணத்துக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற போதும் கொழும்பில் இருக்கின்ற போதும் ஒத்த குண இயல்பைக் கொண்டிருக்க மாட்டார்.
யாழ்ப்பாணத்தில் ஒருவிதம்; கொழும்பில் இன்னொரு விதமாக நடந்து கொள்வார்.
இதேபோல அரச அலுவலகங்களில் வேலை செய்கின்றவர்கள் வெளியில் ஒருவிதமாகவும் அலுவ லகத்தில் இன்னொரு வடிவத்திலும் செயற்பட்டுக் கொள்வர்.
இவற்றுக்கு மேலாக, சிலர் தமக்கு உதவி பெறு கின்றபோது கடுமையான ஆலாவர்ணங்கள் செய்து தங்கள் காரியத்தை முடித்துக்கொள்வர்.
மற்றவர்கள் யாரேனும் உதவி கேட்டால் அதை மிகச் சாதாரணமாக தட்டிக்கழித்து விடுவர். இப்படியாக ஒவ்வொரு தன்மை.
இதை நாம் சொல்லும்போது ஐயா! பத்திரிகைக் காரர்கள் மட்டும் ஒரேகொள்கை கொண்டவர்களாக்கும் என்று நீங்கள் முணுமுணுப்பதும் தெரிகிறது.
பத்திரிகையாளர்களும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றால் போல் அந்தச் செய்தி வந்தது எனக்குத் தெரியாது; செய்தி விடயங்களில் நான் தலையிடுவதே இல்லை; அப்படியா செய்தி வந்தது; இருக்காதே! இப்படியான வார்த்தைகளைக்கூறி கடினமான வேளைகளில் தங்களைப் பாதுகாத்துக் கொள் வதும் உண்டு.
எனினும் மக்களுக்கு எல்லாம் நன்கு தெரியும் என்பதுதான் உண்மை.
இது ஒருபுறமிருக்க சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, போர்க்குற்ற விசாரணை நடத்த உள்ளோம் என்று கூறியுள்ளதுடன் போர்க் குற்ற விசாரணையை சர்வதேசத்தின் பங்களிப்பு டன் செய்வோம் என்றும் உறுதிப்படுத்திய அவர் ஆறுமாத காலத்துக்குள் போர்க்குற்ற விசாரணை ஆரம்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இங்குதான் நிலத்தின் தன்மை தெரிகிறது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமர வீர, இலங்கையில் இருக்கும்போது போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்க குறைந்தது இரண்டு வருடங்கள் தேவை என்று கூறியிருந்தார். அதே அமைச்சர் மங்கள சமரவீர இப்போது அமெரிக்காவில் வைத்து ஆறு மாதத்துக்குள் போர்க்குற்ற விசாரணை ஆரம்பிக்கப்படும் என்கிறார்.
இதேவேளை போர்க்குற்ற விசாரணையின் போது சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை என்று இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார்.
இதை இலங்கையில் வைத்து அது ஜனாதிபதி மைத்திரியின் தனிப்பட்ட கருத்து என்று கூறாத அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவில் வைத்துக் கூறுகிறார் அது ஜனாதிபதியின் தனிப்பட்ட கருத்து என்று.
ஆக, நாட்டுக்கு நாடு கருத்துக்கள் மாறுபடுவதன் பின்னணியிலும் நிலத்தின் தன்மை உண்டோ அல்லது இலங்கையில் பிறந்து ஆட்சிபீடத்தில் அமர்ந்தால் உள்நாட்டில் ஒருகதை வெளிநாட்டில் இன்னொரு கதை என்ற இயல்பா? என்பதை இன்னும் ஆறுமாதங்களில் கண்டுகொள்ளலாம்.