நன்னீர்த் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடலிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(வெள்ளிக்கிழமை) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர்கள் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டிலும், வடமராட்சி அபிவிருத்தி ஒன்றியம், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையிலும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தாளையடி கடற்கரையில் புறப்பட்ட ஊர்வலம் மருதங்கேணி பிரதேச செயலகம் வரையில் சென்று அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கடல்நீரை நன்னீராக்கும் இந்தத் திட்டத்தினால் கடல் அதிகளவில் உப்பாவதாகவும், இதனால் மீனவர்கள் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்திருந்தனர். ‘எமது பிரதேசத்தை ஒருமுறையேனும் திரும்பிப்பார்’, ‘வடமாகாண சபையே! ஏன் எம்மை கொல்லத் துடிக்கின்றாய்?’,’அரசியல்வாதிகளே தவறிழைக்காதீர்கள்’, ‘வடமராட்சி கிழக்கை ஒதுக்காதே’, ‘எமது வளங்கள் எமக்கு வேண்டும்’ ஆகிய கோசங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது எழுப்பியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஏற்பாட்டாளர்கள் சிலர் பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரனுடன் கலந்துரையாடியிருந்ததுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்குவதற்கான மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.
Related Post:
Add Comments