அண்மையில் யாழ்ப்பாணத்தில் பேருந்துப் போட்டியால் நடந்த விபத்தால் ஒரு அப்பாவிச் சிறுவன் கொல்லப்பட்டிருந்தான். பேருந்துப் போட்டி என்பது போக்குவரத்து சட்டங்களை மீறும் செயல். உரிய நேர அட்டவணையை பின்பற்றாமல் வெறும் வருமானத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு, அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் நிகழ்வது.
இதனால் ஒன்றை ஒன்று முந்தும் பேருந்துப் போட்டி வடக்கின் பிரதான வீதிகளில் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் சிறு சிறு விபத்துக்களாவது நாள்தோறும் நடக்கின்றன. இதனால் பேருந்தில் செல்பவர்கள் பெரும் அச்சத்திற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாக வேண்டியுள்ளது.
பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தில் உள்ள பயணிகளை கருத்தில் எடுக்காமல் விடமாட்டேன் என்ற மூர்க்கத்தில் ஒருவரை ஒருவர் முந்துகின்றனர். ஆனால் பேருந்துக்குள் உள்ள பயணிகள் அங்கும் இங்கும் வீசப்படுகின்றனர். நடத்துனர்கள் தொலைபேசியின் வழியாக பின்னால் வரும் பேருந்துகள் குறித்து தகவல்களை சேகரிக்கின்றனர்.
பேருந்துகள் முந்திச் செல்வதால் பலர் பேருந்துகளை தவறவிடுகின்றனர். இதனால் பலருடைய செயற்பாடுகள் பாதிக்கின்றன. மக்களை ஏற்றுவதைக் காட்டிலும் விரைவில் செல்ல வேண்டும் என்றும் சில பேருந்துகள் ஓட்டத்தில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அரச பேருந்துகள்தான் செயற்படுகின்றன. இதற்கு மாறான ஒரு செயற்பாட்டை இன்றைக்கு மன்னார் யாழ் வீதியில் காண்டேன்.
மன்னார் யாழ்ப்பாணம் போக்குவரத்துக்கு இரண்டு மணிநேரம் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. பூநகரியிலிருந்து மன்னார் வரையான பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி. அங்கிருக்கும் ஒரே ஆறுதல் போக்குவரத்தே. முழங்காவில் போன்ற பகுதிகளில் இருந்தெல்லாம் கிளிநொச்சிக்கு அவசரமாக வரவேண்டும் என்றால் மிகவும் கடினம்.
யாழ் மன்னார் வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் அரச பேருந்துகளும்சரி தனியார் பேருந்துகளும்சரி மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்படுகின்றன. வேலைக்குச் சொல்லும் ஒரு நபருக்காக இரண்டு மூன்று நிமிடங்கள் பேருந்தை நிறுத்தி அவரை ஏற்றிச் செல்லுவதும் போட்டியின்றி பேருந்துகள் சந்திக்கும் முக்கிய பகுதிகளில் மக்களை வெவ்வேறு இடங்களுக்கு ஏற்றிச் செல்வதும் என்று வேறு வீதிகளில் காணாத இயல்பை காணமுடிந்தது.
பல்லவராயன் கட்டு சந்தியில் பல்லவராயன் கட்டியிலிருந்தும் ஜெயபுரத்திலிருந்தும் வரும் பேருந்துகளுக்காக காத்திருந்து பயணிகளை பரஸ்பரம் பேருந்துகள் ஏற்றிச்செல்கின்றன. இங்கு தனியார் மற்றம் அரச பேருந்துகள் ஒற்றுமையுடன் பயணிகளின் நலன் கருதி செயற்படுவதைக் காண முடிந்தது. மிகவும் ஒழுங்கோடு நடக்கிறது இந்தச் செயற்பாடு.
நவீனத்துவ பாதிப்புக்கள் எதுவுமற்ற நகரங்களற்ற இந்த வீதியில் பயணிக்கும்போது மக்களும் அவர்களின் உரையாடல்களும் அவர்களின் உரையாடலில் உள்ள விடயங்களும் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கும் பயணிகளுக்கும் இடையில் உள்ள உறவும் மிகவும் நெருக்கம் கொண்டாகவும் அர்ததம் கொண்டதாகவும் இருக்கிறது.
மிகவும் பின் தங்கிய இந்தப் பகுதிகளில் இதுபோன்ற போக்குவரத்துதான் மக்களுக்கு பெரும் உதவியாய் அமைவதாக பேருந்தில் பயணித்த ஒருவர் குறிப்பிட்டார். உண்மைதான். இந்த இயல்பை ஏனைய பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் பின்பற்றினால் விபத்துக்களை தடுக்கலாம். உயிர் இழப்புக்களை தடுக்கலாம். சேதங்களை தடுக்கலாம். நல்ல போக்குவரத்தை மேற்கொள்ளலாம். இனிய பேருந்து பயணத்தை பயணிகளும் உணரலாம்.