அரசியல் அமைப்புத் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அறியும் சந்திப்புக்கள் இன்றுடன் நிறைவடைகின்றது.
அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிக்கின்ற அரசின் முயற்சி எந்தளவு தூரம் வெற்றி அளித்தது என்பதற்கு அப் பால், கருத்தறியும் குழுக்களை சந்தித்த மக்கள், அரசியல் அமைப்பு சீர்திருத்தம் என்பதற்குப் புறம்பாக இந்த நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளையும் எடுத்துக் கூறியுள்ளனர்.
ஆக கருத்தறியும் குழுவானது தனது பணியில் பெருந்திரளான மக்கள் கூட்டத்தைச் சந்திக்க முடிய வில்லையாயினும் சந்தித்தவர்கள் கூறிய விடயங்கள் தொடர்பில் சிந்திக்கத் தலைப்படுமா? என்பதே இப் போது இருக்கக் கூடிய கேள்வி.
அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்திற்கு முன்னதாக அது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கண்டறிவது அல்லது பெற்றுக்கொள்வதென்பது முக்கியமான ஒரு விடயம்.
அதேநேரம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தில் எந்தளவு தூரம் முக்கியம் பெறும் என்பதைப் பொறுத்தே கருத்தறிவதன் வெற்றி தங்கியுள்ளது.
பொதுவில் பொதுமக்களுடன் இலங்கையில் நடந்த அத்தனை விசாரணைகளுக்கும் கருத்தறிவுகளுக்கும் தகவல் சேகரிப்புகளுக்கும் நடந்தது என்ன? என்று கேட்டால் எதுவுமே இல்லை என்பதாக பதில் இருக்கும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, பரணகம தலைமையிலான காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழு, அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நிபுணர்குழுவின் செயற்பாடுகள் என்பன மிக அண்மைக்காலத்தில் எங்கள் நாட்டில் நடந்து முடிந்தவை.
எனினும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகள், பரணகமவின் விசாரணை முடிபுகள் என்பவற்றுக்கு நடந்தது என்ன? என்றால் எதுவும் இல்லை.
விசாரணை என்ற பேரில் வந்திருக்கக் கூடிய ஆணைக்குழு, காணாமல் போன என் பிள்ளையை மீட்டுத்தரும்; விளக்கம் விசாரணையின்றி சிறைகளில் வாடும் நம்பிள்ளைகளுக்கு விடுதலை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு எங்கள் தந்தையரும் தாய் மாரும் அழுகண்ணீருடன் கதறிக்கதறி சாட்சியமளித்த போதிலும் எந்த மாற்றமும் நடக்கவில்லை.
மாறாக நீங்கள் தமிழர்கள். நாங்கள் உங்களை ஆள்பவர்கள். காலத்துக்குக் காலம் நாங்கள் விசாரணை நடத்துவோம். நீங்கள் எங்கள் முன் வந்து சாட்சியமளிக்கவேண்டும்.
நீங்கள் அழுவதைப் பார்த்து தமிழர்களின் அழுகை போதுமா? போதாதா என்று அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்போம்.
உங்கள் அழுகையில் எங்களுக்கு திருப்தி என்றால் அந்த அழுகை தொடர்ந்து பேணப்படும். அழுகை போதாதென்றால், அந்தோ தமிழர்கள் அழுகையைக் குறைத்துவிட்டார்கள். அவர்களுக்கு வசதிவாய்ப்புகள் வந்துவிட்டன போலும்.
எனவே அழுகையை அதிகரிக்க கைது, காணாமல் போதல் என்பவற்றை தொடர்க என்று கருத்துரைப் போம் என்பதாகவே, நடந்து முடிந்த விசாரணை குழுக்களின் முடிபுகள் இருப்பது போல உணர முடிகின்றது.
இந்த வகையில் அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் மீதான மக்களின் கருத்தறியும் பணியும் எப்படி முடியுமோ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.