போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த வீடற்றவர்களுக்கு 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ், உலோகங்களால் ஆன தயார்நிலைப் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய வம்சாவளி கோடீஸ்வரரரான லக்ஸ்மி மிட்டலுக்குச் சொந்தமான லக்சம்பேர்க்கைச் சேர்ந்த ஆர்சிலோர் மிட்டல் நிறுவனத்தின் மூலமே, இந்த தயார்நிலைப் பொருத்து வீடுகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
உலோகங்களாலான இந்த வீடுகள் வடக்கு மாகாணத்தின் காலநிலை மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்றதல்ல என்று விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மாதிரி வீடு ஒன்று அமைக்கப்பட்டு, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
25 ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்தினரின் பிடியில் இருந்த காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி உள்ளிட்ட இரண்டு பாடசாலைகள் மற்றும் வலி.வடக்கு. வலி.கிழக்கில் 700 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வுக்கு வந்திருந்த போதே, சிறிலங்கா அதிபர் இந்த மாதிரி வீட்டைத் திறந்து வைத்து குடும்பம் ஒன்றிடம் கையளித்தார்.
இந்த நிலையில், நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த வீடுகளை அமைக்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த வீடுகள் இவை எமது காலநிலைக்கு, சூழலுக்கு, கலாசாரத்துக்கு, வாழ்க்கை முறைக்கு ஏற்றவையல்ல. செலவினமும் அதிகம்.ஒரு வீட்டுக்கு ஏற்படும் செலவைக் கொண்டு இரண்டு அல்லது மூன்று வீடுகளை கட்டிக் கொடுக்க முடியும்.
தளபாடங்கள், தொலைக்காட்சி, சூரியமின்கலம், எரிவாயுக் கொள்கலன் போன்றன, மீளக்குடியேறும் இடம்பெயர்ந்த மக்களுக்கு புதிய பிரச்சினையை ஏற்படுத்தும்.இந்த வீடுகளைக் கட்ட பயன்படுத்தும் உலோகங்களைப் பெறும் வாய்ப்புகள் இல்லை என்பதால், திருத்த வேலைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாது.
எரிவாயு உருளைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இடம்பெயர்ந்தவர்கள் தான் தமது சொந்தப் பணத்தில் அதற்கான எரிவாயுவை நிரப்ப வேண்டும். எத்தனை பேரால் எரிவாயு நிரப்ப முடியும்?
அவர்கள் எரிவாயு அடுப்பகளைப் பயன்படுத்த விரும்பாமல், தமது வழமையான சமையல் முறைக்கு சென்றால், இந்த வீடுகள் அதற்கேற்றவாறு அமையவில்லை.எமது பொறியாளர்கள் இதனைப் பார்வையிட்டு பொருத்தமற்றவை என்று பரிந்துரைத்துள்ளனர்.” என்றும் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.