
தமிழர்களின் பூர்வீக பூமியான வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அங்கு பௌத்த மதத்தினை பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக நவசம சமாஜக் கட்சியின் பொருளாளர் வல்லிபுரம் திருநாவுக்கரசு குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், இரு பிரதான கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்துகின்ற போதிலும், இரு கட்சிக்குள்ளும் இருக்கும் முரண்பாடுகளை அவதானிக்க முடிவதாகவும் கூறினார்.
இரு கட்சிகளும் 2020 இல் தனித்து ஆட்சியமைக்கும் நோக்கில் செயற்படுவதால், இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்குமா? என்றும் சந்தேகம் வெளியிட்டார்.
மேலும் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அப்பிரதேசங்களில் இன்னமும் தமது கைங்கரியங்களை அதிகரித்துக்கொள்ளும் முயற்சியிலேயே செயற்படுவதாகவும், அண்மையில்கூட இராணுவத்தினரால் கிளிநொச்சியில் பௌத்த விகாரையொன்று அமைக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மகாபோதியிலிருந்து வெள்ளரசு மரக்கிளையொன்றையும் கொண்டு வந்து அங்கு நாட்டியுள்ளனர் என்றும் கூறினார்.
அதுமாத்திரமன்றி கரையோரப்பகுதியிலும் கடற்படையினர் பௌத்த விகாரைகள் அமைக்கும் பயணியினை மேற்கொண்டு வருவதாகவும், பௌத்தமதம் புனித மானமதமாகும். எனினும், தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடபகுதியில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.