அவ்வாறு இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை நோக்கியே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகிறது என்று முகப்புரையில் வருவதை ஏன் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் எதிர்த்தார்கள்? அல்லது சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரோடு சேர்ந்து ஒரு பகுதி ஐக்கியதேசியக் கட்சியினரும் அதற்கு மறைமுகமாக ஆதரவளித்தார்களா?
சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் பிரேரணையின் முகப்புரையை எதிர்த்ததற்கு வெளிப்படையான காரணமாகக் கூறத்தக்கது பேரினவாத மனோநிலை தான். ஆனால் அதைவிட ஆழமான கட்சிசார் நலன்களும் அதில் உண்டு.
முதலாவதாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைக் கண்டு பிடித்தால் அதன் பெருமைகள் அனைத்தும் ஐக்கியதேசியக்கட்சிக்கே போய்ச்சேரும். ஏற்கனவே இலங்கைத்தீவில் இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட தீர்வுக்கான இரண்டு முயற்சிகளுமே ஐக்கியதேசியக் கட்சியினர் காலத்தில் தான் இடம்பெற்றன. மேற்கத்தையச் சார்புடைய ஐக்கியதேசியக் கட்சியானது இதுவரையிலும் இரண்டு தீர்வு முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது. மேற்கு நாடுகள் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினைக்கு ஏதோ ஒரு தீர்வைக்கொண்டுவர விரும்புகின்றன. ஸ்திரமற்ற இலங்கைத்தீவைப் பிராந்திய சக்திகள் பங்கிடக்கூடும் என்ற அச்சம் மேற்கு நாடுகளுக்கு உண்டு. இப்பொழுதும் ஒரு புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் இணைக்கவேண்டும் என்று மேற்கு நாடுகள் விரும்புகின்றன. மைத்திரி – ரணில் அரசாங்கத்தைச் சுற்றியிருந்து பாதுகாத்து வரும் லிபறல் ஜனநாயக வாதிகளும், அரசியலமைப்பு உருவாக்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்படுவதை விரும்புகிறார்கள்.
இந்நிலையில் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட்டால் அது ஐக்கியதேசியக்கட்சியைப் பலப்படுத்தி விடும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் அஞ்சுகிறார்கள். ஏற்கனவே இரண்டாகப் பிளவுண்டிருக்கும் சுதந்திரக்கட்சியானது மேலும் பலவீனம் அடைவதோடு அதன் ஒரு பகுதி ஐக்கிய தேசியக்கட்சிக்குள் கரைந்துபோய் விடும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள். இது முதலாவது காரணம்.
இரண்டாவது காரணம் ராஜபக்~ சகோதரர்களின் அரசியல் முதலீடு எனப்படுவது யுத்தவெற்றிவாதம்தான். யுத்தவெற்றிவாதமும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் ஒன்றாக இருக்க முடியாது. அப்படி இருக்குமானால் அது தமிழ்மக்களை அரசியில் தீர்வு மூலமும் தோற்கடிக்கும் ஒரு நகர்வாகவே இருக்கும். எனவே, யுத்த வெற்றிவாதத்தை அடித்தளமாக வைத்துக்கொண்டு அரசியல் செய்வதென்றால் இனப்பிரச்சினைக்கு குறைந்தபட்சம் திருப்திகரமான ஒரு தீர்வு கூட வரக்கூடாது. இது இரண்டாவது காரணம்.
மூன்றாவது காரணம் மைத்திரி – ரணில் அரசாங்கத்தையும், தமிழ்மக்களையும் இதன்மூலம் மோதவிடலாம். இப்போதிருக்கும் அரசாங்கம் தமிழ்மக்களாலும் தெரிவுசெய்யப்பட்ட ஓர் அரசாங்கம் தான். தமிழ்மக்கள் வாக்களித்திருக்காவிட்டால் ஆட்சி மாற்றமே நடந்திருக்காது. எனவே, மளித முகத்துடன் காணப்படும் இனவாதத்தின் மனித முகமூடியைக் கிழிப்பதற்கு மகிந்த அணி முயற்சிக்கிறது. தமிழ்மக்களாலும் தெரிவுசெய்யப்பட்ட இந்த அரசாங்கத்தை தமிழ்மக்களுக்கு எதிராகத் திருப்புவதற்கு இது உதவும் என்ற எதிர்பார்ப்போடு;.
மேற்கண்டவை நாடாளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றுவதற்குரிய பிரேரணையின் முகப்புரையை ஏன் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் நீக்கக் கோரினர் என்பதற்குரிய பிரதான காரணங்களாகும். அதேசமயம் தமிழ்மக்களின் வாக்குகளினாலும் வெற்றிபெற்ற மைத்திரி – ரணில் அரசாங்கமானது எந்த அடிப்படையில் முகப்புரையை நீக்க சம்மதித்தது? ஆட்சி மாற்றத்தின் பங்காளியாகவிருந்து புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்படும் என்று தமது வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டிய கூட்டமைப்பு இதுதொடர்பில் என்ன சொல்லப்போகிறது?
இப்போதைக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுண்ட நிலையிலேயே பேணும் ஒரு உத்தியாக ரணில் விக்கிரமசிங்க மேற்படி விட்டுக்கொடுப்புக்குச் சம்மதித்தார் என்றும் வருங்காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அவர் சுதந்திரக்கட்சியினரை வெட்டியாடுவார் என்றும் ஒரு விளக்கத்தைத் கூறப்போகிறார்களா? அல்லது சிங்களத் தலைவர்கள் வழமைபோல ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறப்போகிறார்களா?
அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால் முகப்புரை இல்லாத ஒரு தீர்மானத்தின் மூலம் நாடாளுமன்றம் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ்மக்களின் பேரம்பேசும் சக்தி எந்தளவுக்கு குறைந்து செல்கிறது என்பதை உணர்த்தும் ஒரு பாரதூரமான குறிகாட்டி இது. சுதந்திரக்கட்சியினர் ஊகிப்பது போல மைத்திரி – ரணில் அரசாங்கமானது தொடர்ந்தும் தமிழ்வாக்குகளில் தங்கியிருக்கப் போகிறது என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் கிடையாது. முழுக்க முழுக்க சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் ஒரு தீர்வை அவர்கள் முன்வைப்பார்களாக இருந்தால் அவர்கள் தமிழ்மக்களில் தங்கியிருக்கவேண்டிய தேவை கிடையாது. புதிய அரசியலமைப்பை அமுல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறவேண்டி வந்தாலோ அல்லது நாடு முழுவதுக்குமான வெகுசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டி வந்தாலோ அவர்கள் அச்சமடையத் தேவையில்லை.
அதாவது தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்றே ராஜபக்~ சகோதரர்களை அனைத்துலக நெருக்கடிகளிலிருந்து முதலில் விடுவித்தார்கள். அதன் பின் தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்றே மாற்றத்தைப் பலப்படுத்தினார்கள். அதன் பின் அனைத்துலக விசாரணையை உள்நாட்டு விசாரணையாகச் சுருக்கினார்கள். இப்பொழுது ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்பொழுது இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கவேண்டும் என்ற முகப்புரையை நீக்கிவிட்டார்கள். சிங்களத் தலைவர்கள் எப்பொழுதும் தெளிவாகவும், தீர்க்கதரிசனமாகவும் சிந்தித்து முடிவெடுக்கிறார்கள். ஆனால் தமிழ்த் தலைவர்கள்?
கலாநிதி. நீலன் திருச்செல்வம் கொல்லப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு சந்திப்பில் உரையாற்றியுள்ளார். இதன் போது “சிங்களத் தலைவர்கள் தனிப்பட்ட உரையாடல்களின் போது மிகவும் தாராளத்தன்மை மிக்கவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆனால் பொதுவெளியில், அரசியலில் அவர்கள் அவ்வாறல்ல” என்ற தொனிப்பட நீலன் பேசியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் நீலன் சொன்னதைத்தான் சில மாதங்களுக்குப் பின் கூட்டமைப்பின் தலைவர்களும் சொல்லவேண்டி வருமா?
முகப்புரை இல்லாத ஒரு தீர்மானத்தின் மூலம் நாடாளுமன்றம் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டுள்ளமை குறித்து கூட்டமைப்பினர் இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக எதையும் தெரிவித்திருக்கவில்லை. ஆனால் இந்த இடத்தில் தமிழ் மக்;கள் மற்றொரு பயங்கரமான அனுபவத்தை இங்கு ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். நாலாம் கட்ட ஈழப்போரின் போது புலிகள் இயக்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளுக்குப் பகிரங்கமாகவும், உத்தியோகபூர்வமாகவும் பெயர் சூட்டப்படவில்லை என்பதே அது. அதாவது பெயரிடப்படாத ஒரு படை நடவடிக்கை மூலமே தமிழ்மக்களின் வன்சக்தி தோற்கடிக்கப்பட்டது. இப்பொழுது முகப்புரை இல்லாத ஒரு தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது?