“... சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர், சிவசிவ என்றிட சிவகதிதானே!” என்பது திருமூலர் கூறும் திருமந்திரம். பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் 10ஆம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
சைவ சமயத்தின் மிகப்பெரும் மருத்துவர் திருமூலர் என்றால் அதில் மிகையில்லை. எனினும் திருமூலரின் தெய்வீகம் நிறைந்த தத்துவப் பாடல்களை சைவ ஆலயங்களில் பாடுவதற்கு நாம் முன் வராதது பெரும் குறைபாடே.
பஞ்சபுராணம் ஓதுகின்றபோது தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் என்று வகுத்தவர்கள் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்திற்கு இடம்தராமல் விட்டமை துரதிர்ஷ்டமே.
எனினும் நம் முன்னோர்கள் அவ்வாறு ஆக்கிவிட்டார்கள் என்பதற்காக நாமும் அதை அப்படியே பின்பற்றாமல் பஞ்சபுராணம் என்பதற்கு அப்பால், ஆலயங்களில் ஓதுதற்குரிய திருமுறைகள் என்றொரு பட்டியலைத் தொகுத்து அவற்றை ஆலயங்களில் பஞ்சபுராணத்திற்கு மேலதிகமாக பாடுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
அப்போதுதான் திருமூலரின் திவ்விய பிரபந்தங்களின் தேன்சுவையை நாம் பருக முடியும். அழியின் உயிரால் அழிவர் திறம்பட ஞானம் சேரவும் மாட்டார் என்று திருமூலர் பாடிய திருமுறைக்குள் இருக்கக் கூடிய தத்துவம் சாதாரணமானதன்று. உறுதியான உடலில்தான் உறுதியான உள்ளம் இருக்க முடியும் என்பதை மருத்துவ உலகம் ஏற்றுள்ளது.
இந்த மருத்துவக் கருத்தையே திருமூலர் சுவாமிகள் உடம்பால் அழியின் உயிரால் அழிவர்... என் றுரைத்தார்.
ஆக, இன்று நாம் உடல் ஆரோக்கியம் பற்றி மாநாடு கூட்டிப் பேசுகின்றோம். ஆனால் மதுவையும் போதையையும் ஒழுங்கீனத்தையும் உடல் ஆரோக்கியத்தின் எதிரியாகப் பார்த்த திருமூலர் மனதை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியத்தையும் எங்ஙனம் மனச்செம்மை ஏற்பட முடியும் என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே நம் பெரும் சொத்தாகிய திருமந்திரத்தை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதற்கப்பால்,
நாளைய தினம் சிவராத்திரி விரத நாளாகும். சிவ விரதம் சைவச் சமயத்தவர்களின் உன்னதமான விரதம். சிவசிவ என்ற நாமத்தை நெஞ்சிருத்தி காயத்தைக் கோயிலாக்குவதற்குரிய இத் திருநாளில் நாம் நடந்து செய்கின்ற செயற்பாடுகள் சரியானதா? என்றுணர்தல் அவசியமாகும்.
இந்த வகையில் சிவராத்திரியில் மதுபாவனையும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதும் விரசச் செயல்களும் தாராளமாக நடந்தேறுகின்றன.
ஒரு புனிதமான சிவ விரத நாளில் எது நடக்கக் கூடாதோ அது நடப்பதாக இருந்தால் எங்கள் இளம் சமூகத்தின் எதிர்காலம் எங்ஙனம் அமையும் என்பதை எவரும் சொல்லித் தெரியவேண்டியதேவையிராது.
எனவே புனிதமான சிவராத்திரி நாளில் மதுப் பாவனைக்கும் விரசச் செயல்களுக்கும் முற்றாகத் தடைவிதிப்பது கட்டாயமானதாகும்.
இது விடயத்தில் சைவசமய அமைப்புகள் குரல் கொடுப்பது அவசியம். சமயம் என்பது மனிதர்களை பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்துவதாகும்.
இத்தகைய உன்னதமான செயற்பாடுளை செய்யும் பொருட்டு விரத வழிபாட்டு நாட்கள் வகுக்கப்பட் டுள்ளன.
இந்த நாட்களிலாவது இறைசிந்தனையை உள்ளத்திருத்தவேண்டும். இதைச் செய்வது எங்கள் அனைவரதும் தலையாய கடமையாகும் என்பதால் நாளைய சிவராத்திரி விரதநாளில் எல்லோரும் புனிதமாக இருந்து சிவசிந்தனையை மனத்திருத்து வோமாக.