இராணுவம் பிடித்த பிள்ளைகள் காணாமல் போனது எப்படி? - முல்லைத்தீவில் தாய்மார் கதறல்

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்த பின்னர் புலிகள் இயக்கத்தில் இருந்த எமது ஆண், பெண் பிள்ளைகளை எமது கண் முன்னால் இராணுவத்தினர் பிடித்துச் சென்றனர். அதன் பின்னர் எமது பிள்ளைகள் காணாமல் போனது எப்படி?
இவ்வாறு முல்லைத்தீவில் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கேள்வி கேட்டு காணாமல் போன உறவுகளின் தாய்மார் கதறி அழுதனர்.
இராணுவத்தால் பிடிக்கப்பட்ட எமது பிள்ளைகளை இறுதிப் போரில் உயிர் பிழைத்து இடம்பெயர்ந்து வந்த நாங்களும், எமது உறவினர்களும் ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் நேரில் கண்டோம்.
 
எமது பிள்ளைகளுடன் நாம் கதைப்பதற்கு இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் சாட்சியத்தின் போது தெரிவித்தனர்.
காணாமல் போன எமது பிள்ளைகள் இராணுவ முகாம்களில் அல்லது இராணுவத்தினரின் சித்திரவதை முகாம்களில் உயிருடன் இருப்பார்கள் என்றே நாம் நம்புகின்றோம்.
எனவே, எமது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்'' என்றும் ஆணைக்குழுவிடம் தாய்மார் மன்றாடிக் கேட்டுக்கொண்டனர்.
மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று தொடக்கம் இடம்பெற்று வருகின்றது.
இந்த அமர்வில் சாட்சியமளித்தவர்களே இவ்வாறு கதறி அழுது கோரிக்கை விடுத்தனர்.
காணாமல்போன விடுதலைப் புலிகளின் தளபதிகள் மற்றும் மூத்த உறுப்பினர்களின் மனைவியரும் இந்த அமர்வில் சாட்சியமளித்தனர்.
அரசால் வழங்கப்படும் எந்தச் சலுகைகளையும் பெற்றுக்கொள்ள நாம் தயார் இல்லை.
இராணுவத்தால் பிடிக்கப்பட்ட பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளே எங்களுக்கு வேண்டும். எங்கள் உறவுகளை மீட்டுத் தாருங்கள் என்று அவர்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.
இந்த அமர்வு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. நேற்று சாட்சியமளிக்க புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட முறைப்பாட்டாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இன்று புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகங்களுக்குட்பட்ட முறைப்பாட்டாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
நாளை துணுக்காய், மாந்தை கிழக்கு, கரைதுறைப்பற்று பிரதேச செயலகங்களுக்குட்பட்ட முறைப்பாட்டாளர்கள் சாட்சியமளிக்கவுள்ளனர்.
 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila