மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சுமணரத்ன தேரர் தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் வார்த்தைப் பிரயோகங்களை கொட்டித் தள்ளியுள்ளார்.
ஒரு புத்தபிக்கு தன் வாயால் வந்ததை கேட்போர் செவிகளை மூடவைக்கும்,
அந்தளவுக்கு கெட்ட வார்த்தைகளால் தமிழ் மக்களை - தமிழ் அதிகாரிகளை அவர் தூற்றியுள்ளார்.
ஒரு விகாரையின் தலைமை பிக்குவாக இருந்து கொண்டு தமிழ் மக்கள் அனைவரும் புலிகள் என்று கூறி தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு பெரும் வன்முறையைத் தூண்ட முற்பட்ட அந்தத் தேரரை பொலிஸார் கூட தடுத்து நிறுத்த முற்படவில்லை.
சட்டம், நீதி, ஒழுங்கு, பாதுகாப்பு என்று கூறிக் கொள்கின்ற போதிலும் ஒரு புத்தபிக்கு எது செய்தாலும் அதனைத் தடுக்கும் திராணி பொலிஸாருக்கு இல்லை என்ற நிலைமை இங்கு இருப்பதைக் காண முடிகின்றது.
ஒருவரை தகாத வார்த்தைகளால் ஏசினால், அது நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டால் அதற்கு சிறைத் தண்டனை உண்டு என்று சட்டம் கூறுகிறது.
எனவே தமிழ் மக்களைக் கண்டபாட்டில் ஏசியும் தமிழ் அதிகாரிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டியும் இன வன்முறையைத் தூண்டும் வகையிலும் தமிழர்கள் மீது அபாண்டமான குற்றம் சுமத்தியமை தொடர்பிலும் சுமணரத்ன தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். எனினும் இந்த வழக்கை பொதுமக்கள் தாக்கல் செய்வது என்பது சாத்தியமற்றது.
ஆகையால் இந்த வழக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய துரைராசசிங்கம் தாக்கல் செய்வதே பொருத்துடையது.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய வல்லமை நிறைந்த சட்டத்தரணிகள் இந்த வழக்கில் முன்னிலையாகி வாதிட வேண்டும்.
சுமணரத்ன தேரர் தகாத வார்த்தைகளைக் கொட்டித் தீர்ப்பது ஒளிநாடாக்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
எனவே தேரர் ஏசிய வார்த்தைகள் ஒளிநாடாவில் பதிவாகியுள்ளதால் அவர் மீதான குற்றத்தை நீதிமன்றில் நிரூபிப்பது சுலபமானது.
ஆகையால் அவர் மீதான வழக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் தாக்கல் செய்வார் என நம்பலாம்.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்குள் இருக்கக்கூடிய சிரேஷ்ட சட்டத்தரணிகள் தேரரை வழக்குக்கு இழுக்காமல் விடமாட்டார்கள் என்றும் நம்ப முடியும்.
ஏனெனில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை அணுகி அவர்களின் சம்மதத்தைப் பெற்று மாணவர்களின் கொலை வழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட சட்டத்தரணிகள் வாதிடவுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் செய்தமையால் குறித்த வழக்கை முன்னெடுக்க இருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர்கள் சடுதியாக ஒதுங்கிக்கொண்டார்கள். அவர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் ஒதுங்க வேண்டியதாயிற்று.
கொலையுண்ட மாணவர்களின் வழக்கு விடயத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை ஓரங்கட்டுவதன் பொருட்டே இவ்வாறு நடந்தது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தாலும் அது சரியா? தவறா? என்பதை சுமணரத்ன தேரர் தொடர்பில் கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்தே கூற முடியும்.
ஆக சுமணரத்ன தேரர் மீது வழக்குத் தொடுக்க மேற்குறிப்பிட்டவர்கள் முன்வரவில்லை என்றால், அதன் பொருள் என்ன? என்பது நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.