தமிழீழத்தில் நிகழ்ந்தது இனவழிப்பென்றும், அதற்குப் பன்னாட்டு நீதிவிசாரணை மூலமே பரிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றித் ஈழத்தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மிரளத் தொடங்கிய சி.வி.விக்கேனஸ்வரன், தமிழ் மக்களின் நம்பிக்கையைத் தவிடு பொடியாக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாளேந்திய சிங்கக் கொடியை ஏற்றியிருக்கின்றார்.
விக்னேஸ்வரின் செயற்பாடுகளைப் பார்க்கும் பொழுதும் ஜெயலலிதா அம்மையாரின் ஞாபகம்தான் வருகின்றது. ஒரு காலத்தில் விக்னேஸ்வரனைப் போன்று புலி எதிர்ப்பாளராக விளங்கிய அம்மையார், முள்ளிவாய்க்கால் இனவழிப்பு யுத்தத்தின் இறுதிக் காலங்களில் திடீரென ஈழத்தமிழர்கள் மீது பரிவும், பாசமும் கொண்டவராக மாறினார். மீண்டும் தமிழ்நாட்டு முதலமைச்சராகியதும் விக்னேஸ்வரனைப் போன்று தமிழீழத்தில் நிகழ்ந்தது இனவழிப்பு என்றும், அதற்குப் பரிகாரமாகப் பன்னாட்டு நீதிவிசாரணையே அமையும் என்றும் தீர்மானங்களை நிறைவேற்றினார். இதனால் உலகத் தமிழர்களின் இதயங்களில் ‘அன்னை’ என்ற இடத்தையும் பெற்றுக் கொண்டார். கடைசியில் என்ன நடந்தது? தனக்கெதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது தனக்குப் புலிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமன்றத்தில் மனுச்செய்து தனது உண்மையான முகத்தை ஜெயலலிதா அம்மையார் காண்பித்தார்.
ஆக, அம்மையாரை நம்பி ஏமாந்து போன தமிழர்களுக்கு இப்பொழுது அம்மையாரின் அடியொற்றி விக்னேஸ்வரனும் அல்வா கொடுத்துள்ளார். அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சம்பந்தரின் இணக்க அரசியலுக்கு மாற்றீடான ஒருவராக அல்லாது வெறுமனவே அவருக்கு மாற்றீடான ஒருவராக மட்டுமே விக்னேஸ்வரன் திகழ்கின்றார் என்பதையே அவரது சிங்கக் கொடியேற்றச் சாதனை உறுதி செய்கின்றது.
இவை போதாதென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி அவர்களின் பெயரில் தமிழீழத் தேசியத் தலைவர் மீதும், அவரது மூத்த புதல்வரான சார்ள்ஸ் அன்ரனி மீதும் சேறுபூசி ஒட்டுமொத்தத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வகையிலான நூல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்நூலை உண்மையில் தனது கைப்படத் தமிழினி எழுதினார் என்பதை விட, அதில் வேறு எவரோ இடைச்செருகல்களை மேற்கொண்டுள்ளார்கள் என்று ஐயப்படும் வகையிலேயே அக்கருத்துக்கள் அமைந்துள்ளன. ஒன்று தமிழினி உயிர்த்தெழுந்து வரவேண்டும். அல்லது அவர் எழுதியதாகக் கூறப்படும் நூலின் கையெழுத்துப் பிரதிகள் வெளிவர வேண்டும். இவை இரண்டில் ஏதாவது ஒன்று நிகழாத வரைக்கும் இதனையிட்டு மேலதிக கருத்துக்களை வெளியிடுவது பொருத்தமற்றது.
எது எவ்வாறிருப்பினும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள முடிகின்றது. தமிழீழத்திற்கான கருத்தியலைச் சிதைப்பதற்குக் கடந்த ஏழாண்டுகளாக எடுக்கப்பட்ட முயற்சிகள் எவையும் எதிர்பாராத பலனை அளிக்காத நிலையில் இப்பொழுது தமிழினி என்ற கூர்வாளைக் கையிலெடுத்துத் தனது திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சிங்களம் கனவு காண்கின்றது. ஏற்கனவே கர்ணன், தமிழக்கவி, கவியழகன் போன்றோரைப் பயன்படுத்தி சாதிக்க முடியாதவற்றை, இறந்து போன தமிழினியின் பெயரால் வெளிவந்திருக்கும் ஒரு பொத்தகமா (நூல்) சாதிக்கப் போகின்றது?
தமிழீழ தாயக நிலவரம் இவ்விதம் இருக்க, புலம்பெயர் தேசங்களில் தமிழீழத்தின் பிரதமர் என்று தனக்குத் தானே முடிசூடிக் கொண்டிருக்கும் விசுவநாதன் உருத்திரகுமாரனின் நயவஞ்சக அரசியலும் தொடர்ந்த வண்ணமுள்ளது. தமிழீழத்திற்கான கடவுச்சீட்டு, அடையாள அட்டை, சுதந்திர சாசனம் ஆகியவற்றின் வரிசையில் அடுத்தது தமிழீழ நாணயத்தையும் உருத்திரகுமாரன் வெளியிடுவார், அப்பொழுது வயிறு குலுங்கச் சிரிக்கலாம் என்று எல்லோரும் ஆவலோடு காத்திருக்க, சிங்களத்தின் சிறைகளில் வாடும் ‘தமிழர்கள் எவரும் அரசியல் கைதிகள் இல்லை, அவர்கள் எல்லோரும் போர்க் கைதிகள்’ என்று ‘விறுவிறுப்பான’ கண்டுபிடிப்பை தமிழீழத்தின் கனவுலகப் பிரதமர் வெளியிட்டுள்ளார்.
தனது இந்தப் புதிய கண்டுபிடிப்பிற்கு உருத்திரகுமாரன் கொடுத்திருக்கும் வியாக்கியானம்தான் இன்னும் வேடிக்கையானது. அதாவது சிறீலங்கா அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்தது ஒரு உள்நாட்டுப் போர் அல்ல என்றும், மாறாக அது ஒரு அனைத்துலகப் பரிமாணத்தைக் கொண்ட போர் என்றும், அந்த வகையில் சிங்கள தேசத்தின் சிறைகளில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் போர்க் கைதிகளாகவே கருதப்பட வேண்டும் என்றும் தனது புதிய கண்டுபிடிப்பிற்கு உருத்திரகுமாரன் வியாக்கியானம் கொடுத்துள்ளார்.
1949ஆம் ஆண்டு கைச்சாத்தாகிய ஜெனீவா சாசனம் போர்க் கைதிகள் என்று வரையறுக்கப்படுவோருக்குப் பல உரிமைகளையும், சலுகைகளையும், பாதுகாப்புகளையும் வழங்குகின்றது. அத்தோடு யுத்தம் முடிவடைந்ததும் போர்க் கைதிகள் அனைவரும் கிரமமாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் ஜெனீவா சாசனம் வலியுறுத்துகின்றது. அதேநேரத்தில் எதிரியால் சிறைப்பிடிக்கப்படும் அரச படை வீரர்கள் (போர் வீரர்கள் மட்டுமன்றி, அவர்களுக்கு உதவியாக ஆயுதம் ஏந்துபவர்கள் அல்லது ஆயுதம் ஏந்துவதற்கு உறுதுணையாக நிற்பவர்கள்) மட்டுமே போர்க் கைதிகளாக ஜெனீவா சாசனத்தில் வரையறுக்கப்படுகின்றனர்.
தனியரசுக்கான விடுதலைப் போராட்டங்களை முன்னெடுக்கும் பல தேசிய விடுதலை இயக்கங்கள், எதிரியால் சிறைப்பிடிக்கப்படும் தமது போராளிகளும் போர்க் கைதிகள் என்ற வரையறைகளுக்கு உட்பட்டவர்கள் என்று வாதிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும் இது அனைத்துலக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இதற்கு விதிவிலக்காக அனைத்துலக சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆயுதப் போராட்ட இயக்கங்களை சேர்ந்த போராளிகள் மட்டுமே தமது எதிரிகளிடம் சிறைப்படும் பொழுது போர்க் கைதிகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்வோமாக இருந்தால், ஜெனீவா சாசனத்தையும், அதனுடன் தொடர்புடைய அனைத்துலக சட்டங்களையும் ஏற்றுக் கொள்வதாக 1988ஆம் ஆண்டு மாசி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்திருந்தாலும், இறுதி வரை தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு தேசிய விடுதலை இயக்கமாக எந்தவொரு உலக நாடும் அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாக ஜெனீவா சாசனத்தில் போர்க் கைதிகளுக்கு வழங்கப்பட்டும் உரிமைகள், சலுகைகள், பாதுகாப்புக்கள் எவற்றையும் எதிரியிடம் சிறைப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளால் பெற முடியவில்லை. ஜெனீவா சாசனத்திற்கு மதிப்பளித்து அதன் விதிகளுக்கு இணங்கத் தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தினாலும்கூட, ஆயுத எதிர்ப்பியக்கம் என்ற ரீதியிலேயே இவ்வாறு அவை வலியுறுத்தினவே தவிர, ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்ற வகையில் அல்ல.
தவிர, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தை இரண்டு தேசிய இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் வெளிப்பாடாக உலக நாடுகள் ஏற்றுக் கொண்டாலும், இதனை இரண்டு அரசுகளுக்கு இடையிலான போராக அவை ஏற்கவில்லை. விளைவு: அனைத்துலக சட்டங்களின் படி தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஒரு உள்நாட்டு யுத்தம் என்ற குறுகிய வரையறைக்குள்ளேயே பார்க்கப்பட்டது. இதன் காரணமாகவே பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசர காலச் சட்டம் போன்றவற்றின் கீழ் போராளிகளையும், மக்களையும் சிங்களம் சிறையில் அடைத்து வதைத்த பொழுது, அவர்களின் உரிமைகள், சலுகைகள், அவர்களுக்கான பாதுகாப்புக்கள் பற்றி உலக நாடுகள் பேசவில்லை.
அத்தோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிங்களத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களில் பலர் ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள் அல்ல. போராளிகள் என்று தெரியாமலே அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும் சிறையில் இருக்கின்றார்கள்: வெறுமனவே சிறீலங்கா அரசாங்கத்தை விமர்சித்தவர்களும் சிறையில் இருக்கின்றார்கள்.
ஒரு கதைக்குத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு தேசிய விடுதலை இயக்கமாக உலக நாடுகள் ஏற்றுக் கொள்கின்றன என்று வைத்துக் கொள்வோம். அதன் படி எதிரிடம் பிடிபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் அனைவரும் போர்க் கைதிகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் போராளிகள் என்று தெரியாமல் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும், வெறுமனவே சிறீலங்கா அரசாங்கத்தை விமர்சித்தவர்களும் எந்த வரையறைக்குள் வருவார்கள்? ஆயுதம் ஏந்திப் போராடாத அல்லது ஆயுதப் போராட்டத்திற்கு உதவி புரியாத இவர்கள் எல்லாம் எவ்வாறு போர்க் கைதிகள் ஆவார்கள்? இங்குதான் உருத்திரகுமாரனின் நயவஞ்சனை அரசியல் பட்டவர்த்தனமாகின்றது.
யுத்தம் என்பது மாற்றுவழிகளில் முன்னெடுக்கப்படும் அரசியல் என்கின்றார் பத்தொன்பதாம் நூற்றாண்டில் யேர்மனியில் வாழ்ந்த போரியல் தத்துவாசிரியரான கார்ள் வொன் குளோஸ்விட்ச். இதன்படி பார்ப்போமானால் ஆயுதம் தாங்கிய தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஒரு அரசியல் எனலாம். இந்த வகையில் சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட போராளிகளும், அவர்களுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட பொதுமக்களும் (தமக்குத் தெரியாமலே), சிறீலங்கா அரசாங்கத்தை விமர்சித்தவர்களும் அரசியல் கைதிகள் என்று அழைக்கப்படுவதற்கே தகுதியுடையவர்கள். இந்தத் தெளிவு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைப் பீடத்திற்கு இருந்தது.
தவிர அரசியல் கைதிகள் என்று அழைக்கப்படுபவர்களை குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களாகவோ, அன்றி போரில் ஈடுபட்டவர்களாகவோ பார்க்கும் நடைமுறை உலகில் இல்லை. மாறாக தமது சிந்தனைச் சுதந்திரத்தை வெளிப்படுத்திய காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்களாக இவர்களைப் பார்ப்பதே உலக நடைமுறையாகும்.
ஆக, தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் கைதிகள் என்று விளிக்காது அவர்களைப் போர்க் கைதிகள் என்று விளிப்பதன் மூலம் ஒரு அப்பட்டமான நயவஞ்சனை அரசியலையே உருத்திரகுமாரன் புரிகின்றார் எனலாம். தமது சிறைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று சிங்கள அதிபர் மைத்திரிபால சிறீசேனவும், சிங்களத்திற்கு பல்லக்குத் தூக்கும் சுமந்திரனும் கூறுவற்குப் புதிய சொல்லாடல் மூலம் உருத்திரகுமாரன் செயல்வடிவமும் கொடுக்கின்றார் என்ற கூற வேண்டும்.
அந்த வகையில் விக்னேஸ்வரனின் சிங்கக் கொடியேற்றமும், தமிழினியின் பெயரில் வெளிவந்திருக்கும் பொத்தகமும் தமிழீழக் கருத்தியலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புக்களை விட, உருத்திரகுமாரனின் நயவஞ்சக அறிவிப்பால் தமிழர்களுக்கு, அதுவும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு, ஏற்படக் கூடிய பாதிப்புக்கள்தான் அதிகமானவை எனலாம்.
ஆயுதங்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இறக்குமதி செய்வதற்கு அனைத்துலக சட்டங்களில் இடம் உண்டு என்று நயவஞ்சக அறிவித்தலை வெளியிட்டு விட்டு, அனைத்துலக கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தாக்கியழிக்கப்பட்ட பொழுது மௌனமாக உருத்திரகுமாரன் இருந்ததும், போராளிகளையும், மக்களையும் மீட்பதற்கு அமெரிக்காவின் கப்பல் வருகின்றது என்று தனது உதவியாளர் வழுதி ஊடாகத் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களை உருத்திரகுமாரன் ஏமாற்றியதுமே இவ்விடத்தில் நினைவிற்கு வருகின்றது.
சித்தார்த்தனுக்கு வால்பிடித்தவாறு இன்று தமிழ் மக்கள் பேரவையின் அரசியலமைப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் உருத்திரகுமாரனின் உதவியாளர் வழுதியின் கைங்கரியம்தான் விக்னேஸ்வரனின் சிங்கக் கொடியேற்றத்திற்கு வழிவகுத்திருந்தது என்றாலும் வியப்பதற்கில்லை.
நன்றி-ஈழமுரசு