
விரைவில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அதனையே சிறுபான்மை கட்சிகள் விரும்புவதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஆதவன் தொலைக்காட்சியின் ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும், தன்னுடைய அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை நீக்கப்படுவதற்கு சிறுபான்மை கட்சிகள் எல்லோரும் ஆதரவளித்திருந்தோம். ஆனால் சிறுபான்மை மக்களை பொறுத்தவரையில் இது பாதகமானது என்பது எமக்கு தெரியும். அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு வருமேயானால், பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளை பெரும்பான்மையாக கொண்ட நாடாளுமன்றில் சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்து கொள்வது பெரும் சவாலாகவே இருக்கும். அதுவேளை, தற்போதைய நிறைவேற்றதிகார முறைமை தொடருமாயின் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி யாராலும் ஜனாதிபதியாக முடியாது என்ற நிலை காணப்படுவதால். சிறுபான்மை சமூகங்களுக்கு பேரம் பேசும் வாய்ப்பு கிடைக்கின்றது என்ற வகையில் சிறுபான்மை கட்சிகள் அதனை வரவேற்கின்றன” என தெரிவித்தார்.