தென் பகுதியில் இருந்தே நல்லிணக்கம் வரவேண்டும் என இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரி கூறிய இச்செய்தி முற்றிலும் உண்மையானது. ஆட்சி அதிகாரத்தை வைத்திருக்கக் கூடிய மக்களே முதலில் தமது நல்லிணக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இந்தச் செய்தியை இந்த நாட்டின் ஜனாதிபதி கூறியிருப்பதற்குள் இரண்டு உண்மைகள் அடங்கியுள்ளன. அதில் ஒன்று நல்லிணக்கம் என்பது தெற்கிலிருந்து உருவாக வேண்டும் என்பது.
மற்றையது தெற்கிலிருந்து இன்னமும் நல்லிணக்கம் ஏற்படவில்லை என்பது.இந்த இரண்டு உண் மைகளும் ஒரு செய்திக்குள் உள்ளன.
ஜனாதிபதி மைத்திரி கூறிய செய்திக்கமைய தெற்கிலிருந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதி என்ற முறையில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?என்ற கேள்வி இவ்விடத்தில் எழுவது நியாயமானதே.
அதாவது, அடிப்படையில் சிங்கள மக்கள் பிழையானவர்கள் அல்ல. அவர்களில் மிகவும் நல்லவர்களும் மற்றையவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு உடையவர்களும் நிறையவே உள்ளனர்.
இருந்தும் சிங்கள அரசியல்வாதிகள் தங்களின் பதவி ஆசைக்காக தமிழ் மக்கள் மீது சிங்களவர்களிடையே வெறுப்பை ஊட்டும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தனர். காலாகாலமாக சிங்கள அரசியல்வாதிகள் மேற்கொண்ட இனவாத பிரசாரங்கள் சிங்கள மக்களிடம் ஆழப்பதிந்து கொண்டது.
இதற்கு மேலாக, பெளத்த பிக்குகளும் இனவாதப் பேயைத் தூண்டுவதில் கடுமையாக நின்றனர். இதன் விளைவாக அவ்வப்போது சிங்களவர்களுக்கு ஏற் படுகின்ற மனிதப் பசிக்கு தமிழ் மக்கள் இரையாகிப் போயினர்.
இந்த உண்மைகள் மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய உண்மையையும் ஒப்பிட்டு நோக்குகையில்; தென்பகுதியில் இருந்து நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தென்பகுதி முழுவதிலும் தமிழ் மக்கள் எங்கள் சகோதரர்கள்; அவர்களுக்கும் இலங்கைதான் நாடு; நாங்கள் வருவதற்கு முன்னமே தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்ததற்கான வரலாறுகள் உண்டு; பேரினவாத அரசியல்வாதிகளால் - சிங்கள, தமிழ் உறவுகள் பாதிப்படைந்தன இத்தகையதொரு துர்ப் பாக்கிய நிலைமை எங்கள் நாட்டுக்குப் பங்கமானது.
எனவே, சிங்கள - தமிழ் - முஸ்லிம் உள்ளிட்ட இலங்கையில் வாழும் அத்தனை இனங்களுக்கும் சொந்தமான இலங்கையில் நாம் அனைவரும் சகோதரர்களாக வாழ்வதற்கு ஒன்றிணைவோம். இது சிங்கள பெளத்த நாடல்ல. மாறாக பல்லின மக்கள் வாழும் இலங்காபுரி.
எனவே, இனிமேலாவது தமிழ் மக்களுக்கு எதிரான போக்கை சிங்கள மக்கள் கைவிட்டு தமது இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இப்படியானதொரு பிரசாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்வது அவசியம்.
அப்போதுதான் தென்பகுதி மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டு இன நல்லிணக்கம் உருவாகும்.
இதை செய்வதற்கு ஜனாதிபதிக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதால் அதை அவர் செய்தாக வேண்டும்.