
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் வார்த்தைகளில் தமக்கு நம்பிக்கை இல்லை என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
இருதடவைகள் தாம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டபோது என்னை நம்பி உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள் நான் உங்களுக்கு விடுதலை பெற்றுத்தருவேன் என சம்பந்தன் வாக்குறுதி அளித்து தம்மை ஏமாற்றிவிட்டதாக கைதிகள் சுட்டிக்காட்டினர்.
அத்தோடு, இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொர்பிலான விவாதத்தின் மூலம் தமக்கு விடுதலையைப் பெற்றுத்தர முடியாது என தமிழ் அரசியல் கைதிகள் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்
தமக்கு விடுதலை கிடைக்கும்வரை தமது போராட்டம் தொடரும் என எச்சரிக்கும் கைதிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்குறுதியை நம்பி தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என குறிப்பிட்டனர்.
மகசின் சிறைச்சாலையில் உள்ள 14 தமிழ் அரசியல் கைதிகள் இன்றுடன் 15 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
இருப்பினும் அவர்களில் பலரது உடல் நிலை மோசமடைந்துள்ளதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட கைதிகள் சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொர்பிலான விவாதம் இன்றையதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள விவாதத்தில் மூலம் அரசியல் கைதிகளிற்கு விடுதலை கிடைக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இது அரசாங்கத்தினால் நிகழ்த்தப்படும் நாடகம் எனக் குறிப்பிட்டார்.