
உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள பனாமா இரகசிய கணக்குப் பட்டியல் தொடர்பான முழுமையான ஆவணம் வெளிவந்தால், அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் நிச்சயம் இருக்குமென, நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கத்தினால் நேற்று (புதன்கிழமை) கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- ”பனாமா ஆவணத்தில் தங்களது பெயர்களும் உள்ளதா என அறியும் ஆவலில், உலகின் அத்தனை தலைவர்களும் பிரபலங்களும் உள்ளனர். அதில் இலங்கையைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆவணம் முழுமையாக வெளிவந்தால் அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரும் இடம்பெறுமென நம்புகிறோம். மேலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு நிகராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியும் மேதின கூட்டத்தை தனியாக நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. சுதந்திர கட்சியைச் சேர்ந்தவர்கள் வேறு கூட்டங்களில் கலந்துகொண்டால், அவர்களை வெளியேற்றுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார். ஹைட்பாக் மைதானத்தில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்கொள்ளும் சுதந்திர கட்சியினர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு, அவ்வாறு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அன்று ஒருசிலருக்கேனும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த பிரச்சினை எழுந்திருக்காது. மஹிந்த ராஜபக்ஷ திடீரென கட்சிக் கொள்கைக்கெதிராக கொரில்லா தாக்குதல் நடத்திவிட்டு, மீண்டும் கட்சிக்குள்ளேயே ஒளிந்து கொள்கிறார். இவற்றுக்கெல்லாம் காரணம், கட்சி கொள்கைக்கு எதிராக செயற்படுவோருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமையே ஆகும். தற்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பினை மீளப் பெற்றுக்கொண்டு, பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தனக்கு பொலிஸ் பாதுகாப்பு வேண்டாமென்றும் இராணுவ பாதுகாப்பே வேண்டுமெனவும் இவர்கள் கோருவதன் பின்னணியில் ஏதேனும் சதித் திட்டங்கள் இருக்கலாம். தற்போது அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட எதுவும் இல்லாததால், அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டுவந்து, நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் சர்வதேசத்துக்கு அளித்த உறுதிமொழிகளையும் நிறைவேற்றிவந்தால், எதிரணியினரின் பொய்ப் பிரசாரங்கள் ஒருபோதும் மக்கள் மத்தியில் எடுபடாது” என்றார்.